ஐக் லைக் லக்!



அக்னி வெயிலின் தாக்கத்தால் வாடிப்போய் தரிசாகக் கிடந்த வாலிபர்களின் இதய நிலத்தை திரிஷாவின் ‘கர்ஜனை’ பட கண்கவர் படங்களைப் போட்டு குளுமைப்படுத்தி விட்டீரே!
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைக்கும் நடிகவேள் குடும்ப வாரிசு ‘ஐக்’கின் பேட்டி லைக் பண்ணும்படி இருந்தது. படம் அமோக வெற்றியடைந்து அவருக்கு அடிக்கட்டும் லக்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

என்னது... மேஜிக் நிபுணர் எட்கர் மகன் ‘சால்’ங்கறது வெள்ளைக்கிளியா? இப்படி ஓர் பாசம், நேசமா! வியப்பின் உச்சம்.
- மயிலை.கோபி, அசோக் நகர்.

ராஜ் பவன் பயோடேட்டா மலைக்க வைத்தது. முன்பதிவு செய்யாமல், வெப்பத்தில் வெந்து போகாமல், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், ஒரு நாள் முழுக்க குடும்பத்தோடு ராஜ்பவனை ரசித்து மகிழச் செய்த குங்குமத்துக்கு குதூகல நன்றி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை. இரா.வளையாபதி, கரூர்.

தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் பிரபலமான பிரபஞ்சன் தனது படைப்புகள், வாழ்க்கையைப் பற்றி மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டதும், மனைவி, துணைவி உறவுகளில் சிக்கி தனிமனிதனாக, தான் நிச்சயம் குற்றவாளி என்று குறிப்பிட்டதும் நெகிழ வைத்தது!
- மனோகர், கோவை.

‘வேண்டியது வேண்டாமை’ சிறுகதை தந்த அருண் சரண்யா கிளைமாக்ஸில் மனதை இறுக்கத்தின் பிடியில் சரண் அடைய வைத்துவிட்ட்டார்
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

நினைத்தாலே குலை நடுங்குகிறது டர்ட்டி குண்டுகள் பற்றிய உமது கட்டுரை. நாம் என்ன செய்ய முடியும்?
- மாணிக்கவாசகம், கும்பகோணம்.

பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து வரும்பட்சத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு தரும் ஆண்கள் அமைப்பு இருப்பது அத்தியாவசியமானது.பாராட்டத்தக்கது!
- த.சத்தியநாராயணன், சென்னை.

‘விஜயனின் வில்’ அடுத்தது என்ன என்ன என்று பதற வைக்கிறது.
- ஜே.சி.ஜெரினா காந்த், சென்னை.

இந்திய சினிமாவின் சிகரமான ‘பாகுபலி 2’வின் சாதனையைச் சிறப்பாய் கூறினாலும், அதன் குறைகளைத் தயக்கமின்றி சுட்டிக்காட்டியது குங்குமத்தின் நக்கீரப்பார்வை. நடுநிலை ரகம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை. லெ.நா.சிவகுமார், மேற்கு மாம்பலம்.

விளையாட்டு, நடிப்பு, எழுத்து என்று பல துறைகளில் திறம்பட செய்து, வக்கீல் தொழிலிலும் வெற்றி பல பெற்றவர் கோபாலரத்னம் என்பதைப் படித்ததும், எப்படி ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்க முடிந்தது என்று வியப்பாக இருந்தது.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.