லென்ஸ்-குங்குமம் விமர்சனக்குழு

தன் மனைவியின் இறப்பிற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பாடம் புகட்டப் புறப்படும் இளைஞனின் கதையே ‘லென்ஸ்’. மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். மொபைல் ேபான், இணையம் போன்ற அறிவியல் வளர்ச்சியை தவறாகவும், மோசடியாகவும், அநீதியோடும் பயன்படுத்தும்போது எவ்வளவு சீரழிவு வரும் என்பதை சொல்கிற இந்தப் படம்... நமக்குப் பாடம்.

பாலியல் உணர்வுகளைத் தூண்டுவது வசூலாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படம் எச்சரிக்கை உணர்விற்கும், உண்மைக்கு அருகிலும் இருப்பது பெரும் ஆறுதல். இருபாலரின் அந்தரங்க தருணங்களை வெளியிட்டு, வாழ்க்கையைப் பாழாக்கும் விதத்தையும், அதை எதிர்கொள்ள வேண்டிய சங்கடத்தையும் உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியதில் அறிமுக இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணனின் உழைப்பு தெரிகிறது.

மனைவியோடு ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகளில் கோபமடைந்த ஜெயப்பிரகாஷ் இணையதளத்தில் வேறு அடையாளத்தில் பல்வேறு பெண்களோடு உரையாடுகிறார். அப்படி ஒரு நாள் உரையாடும்போது ஒரு புதியவரை சந்திக்க நேரிடுகிறது. அவர் ஆணாக இருக்க, அதிர்ச்சி அடைந்தாலும் சமாளித்து பேசுகிறார். அந்த புதியவர் சொல்லும் தகவல்கள், உண்மைகள், எல்லாமே அவரை நிலைகுலைய வைக்கிறது. இறுதியில் நடந்தது என்ன... என்பதுதான் மனதை உலுக்கும் க்ளைமேக்ஸ்.

தவறை செய்துவிட்டு, அதை முதலில் மறைக்கும் முயற்சியும், பின் கையும் களவுமாக பிடிபடும் வேளையில் கதறுவதுமாக இயல்பான நடிப்பில் ஜெயப்பிரகாஷ். இயக்குநராக அவரே இருப்பதால் ரொம்பவும் அண்டர்ப்ளே. செய்வதறியாது கடிதம் எழுதி வைத்து, காணொளியில் தெரிகிற மாதிரி அஸ்வதிலால் உயிர் துறப்பது நம் மனசாட்சியை உலுக்கும்.

இதற்கு இனிமேலாவது பதில் தெரிந்தால்தான் நல்லது. சாவை அதன் அருகாமையில் பார்க்கிற அந்தப் பெண் மாதிரியானவர்கள் நமக்கு ெசால்ல வருவதுதான் என்ன? நம்மிடமே கேள்வியையும் பதிலையும் கொடுத்து விடுகிறார் இயக்குநர். ஆனந்தசாமியின் நடிப்பு  உயர் வகை. ஆரம்ப அப்பாவித்தனமும், பிரியமும், இழப்புக்குள்ளாகி உருமாறுகிற ஒவ்வொரு அடுத்த கட்டமும் அபாரம். படம் முழுவதும் பதட்டத்தின் தன்மைகளை நடிப்பாக உருவகித்த விதத்தில் உயிர் ததும்பல்.

அவர் பழிக்குப்பழி வாங்க புறப்படுகிற வேளையில் வரப்போகிற அத்தனை பயங்களும் தெரிந்துவிடுகிறது. ஆனந்தசாமி - அஸ்வதிலால் குட்டிக்காதல் எபிஸோட் மனதில் நிற்கிறது. ‘எதுவும் நாலு சுவத்துக்குள்ள இருக்கும்னு நினைக்காதே. எல்லாமே தெருவுக்கு வந்திடும்...’, ‘சாத்தான்கள் வெளியே சுத்திக்கிட்டே இருக்கு, அதுக்கு எல்லாமே தெரியும்...’, ‘என் நீதியோட அடிப்படை தண்டனை கொடுக்கிறது, மன்னிச்சு விடுறது இல்லை...’ என வசனங்கள் அத்தனையும் அமைப்பின் மீது வீசப்படுகிற கத்திக்குத்து!

மௌனம் பேசுகிற இடங்களில் நல்ல வேளை இடம் விடுகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இரண்டே அறைகளில் மற்றும் கொஞ்சம் வெளியே என எஸ்.ஆர்.கதிரின் கேமரா அருமையாக உழைத்திருக்கிறது. அடுக்கி சேர்த்திருக்கிற அழகிற்கு காகின், வெங்கடேஷ், ஜெய்னுல் கூட்டணி காரணம். உங்களுக்கும் இதெல்லாம் நேர்ந்துவிடலாம் என எச்சரிக்கும் பக்குவம், வழக்கமான பாதையில் பயணிக்காத நேர்த்தியில் ‘லென்ஸ்’ முக்கியமான படமாகிறது.