தனுசு லக்னம் - கூட்டு கிரகங்கள் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 91

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சுற்றிலும் சூறைக்காற்று வீசினாலும் எதற்கும் கலங்காத இரும்புத் தூணைப்போல நிற்பீர்கள். நெருக்கடி நேரங்களிலும் நீதி தவற மாட்டீர்கள். எளிதாக சத்ருக்களை வெல்வீர்கள். உங்கள் லக்னத்தின் அதிபதியான குரு பகவான் ஒரு வணங்காமுடி. சிலர் சிறுவயதிலேயே செல்வமுடையவர்களாகவும் சத்திய நிஷ்டையோடும் திகழ்வார்கள்.

உங்களின் ராசிநாதனான குருவே தாய்க்குரிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் அம்மாதான் எல்லாமும் என்றிருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் குரு கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தால் மாற்றாந்தாய் வளர்ப்பில் வளர வேண்டியிருக்கும். சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதியாகவும் வருகிறார். சூரியன் கிட்டத்தட்ட உங்களுக்கு கிடைக்க வேண்டிய சகல பாக்கியங்களையும் கிடைக்கச் செய்வார்.

சூரியனை விட செவ்வாயே இன்னும் அதிகமாக உதவப் போகிறார். ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. உங்களின் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தாற்போல பிள்ளைகள் நடந்து கொள்வார்கள். அவர்களை எந்த விஷயத்திலும் எதிலும் நிர்ப்பந்தப்படுத்த மாட்டீர்கள். செவ்வாய் மிகமோசமாக பகைவர்களோடு இருந்தாலும் தன்னால் எந்த தீயபலனும் வராமல் பார்த்துக் கொள்வார்.

இதே செவ்வாய் சூரியனோடு இருந்து விட்டால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார். செல்வத்திலேயே திளைக்க வைப்பார். உங்களின் சொந்த ஜாதகத்தில் குரு கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் அமர்ந்திருந்தாலோ, குரு சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ ஒரு குறையும் வராத ராஜபோகமான வாழ்க்கை அமையும்.

குருவும் செவ்வாயும் சொந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் குரு மங்கள யோகம் கிடைக்கும். மாபெரும் உலகத் தலைவரான நெல்சன் மண்டேலா தனுசு லக்னத்தில் பிறந்தவராவார். பாக்கியாதிபதி சூரியன் தனக்கு எட்டில் மறைந்து சனியோடு சேர்க்கை பெற்றிருக்கிறார். இதனாலேயே தியாகசீலராகவும், சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட முடிந்தது.

சிறைக்குச் செல்ல நேர்ந்தது. ஐந்துக்குரிய செவ்வாய் தனக்கு ஆறில் மறைந்திருப்பதால் உண்ணாவிரத மெல்லாம் இருந்தார். கன்னியில் இவ்வாறு செவ்வாய் இருப்பதாலேயே வைராக்கியத்தோடும் இருக்க முடிந்தது. மேலும், குரு மங்கள யோகத்தில் பிறந்திருக்கிறார். அதாவது குருவுக்கு நாலில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

இதனாலேயே எடுத்த போராட்டத்திலெல்லாம் வெற்றி பெற முடிந்தது. ராகு-கேதுக்குள் எல்லா கிரகங்களும் அடங்கி விட்டதால் அரசாங்கமே கைகட்டி நிற்குமளவிற்கு தன்னுடைய புகழினுடைய உச்சியில் ஏறினார். தன்னுடைய இறுதி வருடங்களில் பல்வேறு ராஜயோகங்களையும் அனுபவிக்க முடிந்தது. எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல் வர முடிந்தது.

லக்னாதிபதி குரு லக்னத்தை பார்ப்பதால் எல்லோராலும் விரும்பப்படும் நபராகவும் இருக்க முடிந்தது. எட்டில் சனி இருந்தாலும் எட்டுக்குரிய சந்திரன் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் அழியாப் புகழை அடைய முடிந்தது. மாபெரும் மன்னரான திப்புசுல்தானின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாது சந்திரனையும் பார்க்கிறார்.

ராஜபோகங்களில் திளைத்துக்கொண்டே போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார். இந்திய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு, ஆங்கிலேயர்களுக்கு குலைநடுக்கமாக இருந்தார். லக்னாதிபதியான குரு மறைந்து ஆறாமிடத்தில் கேதுவோடு இருப்பதால் ராஜதந்திரியாகச் செயல்பட்டார். சூரியன், புதன், சனி, ராகு போன்ற நான்கு கிரகங்களும் 12ம் இடத்தில் இருக்கின்றன.

அந்த நான்கும் 12ல் தொடர்ந்து இருப்பதாலேயே நிறைய பயணங்களை மேற்கொள்ள முடிந்தது. மாவீரன் நெப்போலியனையே தோழமையாக்கிக் கொள்ள முடிந்தது. 12ல் சனியும் ராகுவும் இருந்ததாலேயே தனக்கென்று தனி அரண்மனையை நிறுவ முடிந்தது. வரலாற்றிலும் இடம்பெற முடிந்தது. ரத்தன் டாடா இந்தியாவின் பெரும் செல்வந்தப் பரம்பரையில் இன்றும் இருப்பவர்.

ராகு-கேதுவைத் தாண்டி சந்திரன் வெளியே இருக்கிறது. லக்னத்திலிருந்து முதல் நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன. இதுவே பெரிய ராஜயோகமாகும். வியாபாரச் சின்னமான துலா ராசியில் பிறந்திருக்கிறார். சந்திரன் லாப ஸ்தானத்தில் பதினோராமிடத்தில் அமர்ந்திருக்கிறார். இதுவே வியாபார சூட்சுமங்களை அள்ளித் தருவதாக அமைந்து விட்டது.

குரு -சனி பரிவர்த்தனையால்-அதாவது இரு ராஜ கிரகங்கள் பரிவர்த்தனை அடைவதால் நிறைய சாதிக்க முடிக்கிறது. மேலும் சனி வலுத்து பத்தாமிடத்தை வேறு பார்க்கிறார். இதனாலேயே ஹோட்டல், உணவுத் துறையில் நல்லதொரு இடத்தை அடைய முடிகிறது. இரண்டில் குரு அமர்ந்து நீசம் பெற்றிருந்தாலும் சனியோடு பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நீசபங்க ராஜயோகமாக மாறிவிட்டிருக்கிறது.

கே.ஜே. ஜேசுதாஸும் தனுசு லக்னத்தில் பிறந்தவர். கலைக்குரிய கிரகங்களான சந்திரன்- சுக்கிரன் இரண்டும் ஒன்றாக இருக்கிறது. அதிலும் இரண்டாமிடத்தில்-அதுவே வாக்குஸ்தானத்திலிருப்பதால் பாடலாகப் பாடிப் பொழிய முடிந்தது. கால புருஷன் தத்துவப்படி முகம் மற்றும் வாய்க்குரிய கிரகமான சுக்கிரன் மகரத்தில் அமர்ந்திருந்ததால் பல்வேறு மொழிகளில் பாட முடிந்தது.

சனி பகவான் வீட்டில் இருப்பதால் பாரம்பரிய சங்கீதத்திலும் நன்கு பிரகாசிக்க முடிந்தது. நான்காமிடமான மீனத்தில் குருவும் செவ்வாயும் அமர்ந்திருப்பது குருமங்கள யோகம். லக்னாதிபதி குரு பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயுடன் இருப்பது பஞ்சமகா யோகத்தில் பெரிய யோகம். ஐந்தில் சனி, கேது இருப்பதாலேயே ஞானவானாகவும் திகழ முடிந்தது. சூரியன் பாக்யாதிபதி. புதனோடு சேர்ந்து லக்னத்தில் இருக்கிறார்.

அவர் தர்மகர்மாதி ப தியாகவும் இருக்கிறார். இதனாலேயே அரசாங்க விருதுகளை அள்ளிக் குவிக்க முடிந்தது. தனுசு லக்னத்தில் பிறந்தவர்தான் அமெரிக்க அதிபராக இருந்த சர் ரொனால்ட் ரீகன். பதினோராம் இடத்தில் குருவும் கேதுவும் ஒன்றாக இருப்பதால் உள்ளுணர்வு அதிகமாக இருந்தது. மக்களை வழிநடத்தும் தன்மையோடு இருந்தார்.

தனுசு லக்னத்தில் மூன்றில் சுக்கிரன் அமர்ந்தது மிகவும் விசேஷமாகும். திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு எளிதாகவும் பிரவேசிக்க முடிந்தது. சூரியனுக்கு முன்னும் பின்னும் கிரகங்களிருப்பது ராஜயோக, ராஜாங்கத்தை ஆளும் தன்மையையும் கொடுத்தது. பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். இதுவே பஞ்சமகா யோகத்தைக் கொடுக்கும்.

இரட்டைக் கிரகங்கள் இதுதான் செய்யும் என்று சொல்லலாம். ஆனால், கூட்டாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேரும்போது கிரகங்களைப் பொறுத்தளவில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏதேனும் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும்.

அதனால் கூட்டு கிரகங்களின் பாதிப்பிலிருந்து தனுசு லக்னக்காரர்கள் தப்பித்துக் கொள்ள கும்பகோணத்திலுள்ள ராமஸ்வாமி கோயிலுக்குச் சென்று வாருங்கள். மூலஸ்தானத்தில் பட்டாபிராமனாக ராமச்சந்திரஸ்வாமியும், சீதாப்பிராட்டியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து ராஜ்யபரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார்கள்.

கம்பீரத்தோற்றம். இடதுகாலை மடக்கி மற்றொரு காலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்ட மேகம் போன்ற நிறம். அதில் ஞானச்சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரைபோன்ற மலர்ந்த கண்களில் அமுதச்சாரல் வீசுகின்றன. கூரிய நாசி. செவ்விய இதழ்கள். அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை.

கைகள் அபய ஹஸ்தம் காட்டி எப்போதும் காப்பேன் என்று கூறுகிறது. சீதாப்பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ஸ்ரீராமனிடம் விநயமாக நம் குறைகளை எடுத்துக்கூறுகிறார். அருகேயே சத்ருக்னன் ராம அண்ணாவிற்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம். லக்ஷ்மணாழ்வார் ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கைகூப்பிக்கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு கேவல் பொங்கிவருகிறது.

அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கும் காட்சியைக்காண கண்கள்கோடி வேண்டும். எல்லோரையும் தாண்டி ராம சேவகனாக, ராம தாசனாக, அனைத்தையும் ராம சொரூபமாகப் பார்க்கும் ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவை சாதிக்கிறார். கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்துகொண்டிருக்கும் கோலம் காணக்கிடைக்காது. கும்பகோணத்தில் நகர மையத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்