போதையால் பாதை மாறும் சிறுவர்கள்



-டி.ரஞ்சித்

போதை பல ஆண்டுகளாக நம் சமூகத்தைப் பிடித்திருக்கும் பேய். விளையாட்டைப் போல ஆரம்பிக்கும் போதைப்பழக்கங்கள் நாளடைவில் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்குப் போய்விடுகிறது. இன்று இளம் வயதினரிடையே... முக்கியமாக பள்ளிச் சிறுவர்களிடம் போதைப் பழக்கங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து சென்னையில் இயங்கி வரும் ‘ஃப்ரீடம் கேர் டிரஸ்ட்’ என்னும் மறுவாழ்வு மையத்தின் நிறுவனரான வரதனிடம் பேசினோம்.

‘‘போதை வஸ்துகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று சட்டத்துக்கு உட்பட்டு கடைகளில் விற்கப்படும் சில ரசாயன கலவைகள் சேர்க்கப்பட்ட பொருட்கள். இரண்டாவது சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்கள். முதல் பிரிவில் மருந்து மாத்திரைகள், பெயின்ட் தின்னர், வார்னிஷ், ஒயிட்னர் மற்றும் ஃபெவிகால், ஃபெவிகுயிக் போன்றவை அடங்கும்.

இரண்டாவதில் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் போன்றவை வரும். சிறுவர்களிடம் அதிகமாக பணம் புழங்காததால் பெரும்பாலும் அவர்கள் முதல் பிரிவைத்தான் நாடிச் செல்கின்றனர். கொஞ்சம் பணப்புழக்கம் உள்ளவர்கள் குடி மற்றும் கஞ்சாவுக்குத் தாவுகிறார்கள்...’’ என வருத்தத்தோடு சொல்லும் வரதன் இதன் இப்போதைய நிலையைப் பற்றியும் விவரித்தார்.

‘‘இன்று ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட சாஃப்ட் டிரக்ஸ் எனப்படும் பல்வேறு போதைகளுக்கு அடிமையாகி விடுகிறான். உதாரணமாக கஞ்சாவின் ஒரு வடிவமான பாங்கு மிக மலிவாக பல இடங்களில் கிடைக்கிறது. அதேபோல பாக்குவகைகள், புகையிலை வகைகள் சுலபமாக எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.

முதலில் இதுமாதிரியான மென்மையான போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள் பிறகு இந்த போதை போதவில்லை என மிகத் தீவிரமான போதையைத் தேடிச் செல்கின்றனர். அப்போதுதான் அவர்கள் குடி, கஞ்சா என பலவகையான போதைப் பொருட்களைக் கலந்துகட்டி எடுத்துக் கொள்கிறார்கள். இவைதான் அவர்களைப் பல்வேறு பிரச்னைகளுக்கு கொண்டு செல்கிறது...’’ என வரதன் சொன்னதும், ‘சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கும், போதைக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா?’ எனக் கேட்டோம்.

‘‘பொதுவாக சிறுவர்கள் சிறுசிறு தவறுகள், பெட்டி க்ரைம்களில் ஈடுபடும்போதுதான் காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர். ஆனால், இதுமாதிரியான குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களில் நூறு பேரில் எண்பது பேராவது போதைக்கு அடிமையானவர்களாகத்தான் இருப்பார்கள். உண்மையில் இவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது ஆடம்பர வாழ்க்கைக்கோ அல்லது சொகுசு வாழ்க்கைக்கோ கிடையாது.

போதைப் பொருட்களை வாங்க பணம் கிடைக்கும் என்பதால்தான் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். சீர்திருத்தப் பள்ளிகளில் போதை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான கல்வியோ, திட்டங்களோ போதுமானதாக இல்லை. இதனால்தான் இந்த பள்ளிகளிலிருந்து பல சிறுவர்கள் தப்பித்து ஓடுவதும், சுவர் ஏறிக் குதித்து காணாமல் போவதும் அடிக்கடி நடைபெறுகிறது.

நிஜத்தில் இதுமாதிரியான பள்ளிகளில் சிறுவர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான கல்வியுடன் தொழில்கல்வி, சமூக மதிப்பீடு மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதற்கான திட்டங்களையும் சேர்த்துக் கற்பிக்கவேண்டும்...’’ என்கிற வரதன், ‘‘சிறுவர்களின் போதைப் பழக்கத்தை முடிவுக் குக் கொண்டுவருவதற்காக குற்றங்களை இழைக்கும் சிறுவர்கள் மட்டுமல்ல... போதைக்கு உட்படும் எல்லா வகையான சிறுவர்களையும் மீட்பதற்காக தனியான போதை மீட்பு மையங்களை தமிழகத்தில் பல இடங்களில் ஆரம்பிக்க வேண்டும்...’’ என்கிறார்.

புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக அமைப்பின் இயக்குனரான சிரில் அலெக்ஸாண்டர் சிறுவர் போதையை வித்தியாசமான கோணத்தில் அணுகினார். ‘‘இந்தியச் சிறுவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் போதைக்கு பழக்கமாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. முதலில் பள்ளி, வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பாக்கு, புகையிலை, பாங்கு... பிறகு குடி என்று ஆரம்பிக்கும் பழக்கம், போகப்போக மருந்துப் பொருட்கள், ரசாயனம் கலந்த பொருட்களை நாடச் செய்கிறது.

வளர்ந்த நிலையில்தான் இவர்கள் போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைக்கே முயல்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்த 30 சதவீதத்தினரையும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கருத முடியாது. பழக்கமாகியிருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சரி. இப்படி ஆரம்ப கட்டத்தில் இருக்கும் சிறுவர்களை போதையிலிருந்து மீட்கவேண்டும் என சொல்வதைவிட ‘அந்த ஆரம்பகட்டத்திலிருந்து அவர்களை எப்படி தடுப்பது’ என்பதற்கான திட்டத்தைத்தான் நாம் வகுக்க வேண்டும்.

இதற்கு அந்த சிறுவர்கள் புழங்குமிடங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முன்பு பீடி, சிகரெட், பிறகு குடி என்றுதான் தமிழகத்தில் போதையின் வழி இருந்தது. ஆனால், வடநாட்டு இளைஞர்களின் வருகையால் பல்வேறு போதைப் பொருட்கள் தமிழக கடைகளில் கனஜோராக விற்பனையாகிறது.

முதலில் இந்த சாஃப்ட் போதை வஸ்துகளை கடைகளில் இருந்து அகற்ற அரசும், தனியார் அமைப்புகளும் முனைய வேண்டும். பிறகு பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் போதைப் பழக்கம் குறித்த கவுன்சிலிங்கை கொடுக்க வேண்டும்.

இதை எல்லாம்  விட்டுவிட்டு சிறுவர்களின் போதை பழக்கத்தை விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையங்களை திறப்பதில் எந்தவித பயனும் இல்லை. இப்போதைக்கு நம் சிறுவர்களுக்கும், அவர்களைச் சுற்றி இருக்கும் பெற்றோர்கள் மற்றும் உறவுகளுக்கும் தேவை போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்தான்...’’ என்று முடித்தார் சிரில் கறாராக.