COFFEE TABLE
கேன்ஸ் விழாவில் ஸ்ருதி
ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் பிரமாண்ட படமாக ‘சங்கமித்ரா’ ரெடியாகி வருகிறது. 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை இது என்கிறார்கள். படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என பலரும் கமிட் ஆகியுள்ளார்கள். இந்தப் படத்தில் ஸ்ருதி, வீரமங்கையாக நடிப்பதால் தீவிரமாக இப்போது வாள் வீச்சில் டிரெயினிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
 ‘சங்கமித்ரா’வின் அதிகாரபூர்வ அறிவிப்பை வருகிற கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்க உள்ளதால் நடிகர் - நடிகைகள் அனைவரும் கேன்ஸ் சென்றுள்ளனர். ‘‘படத்தின் தொடக்கமே சர்வதேச ரசிகர்களின் பங்கேற்பை பெறுவது உற்சாகமாக இருக்கிறது...’’ என மகிழ்கிறார் ஸ்ருதி.
ரீடிங் கார்னர்
பயாஸ்கோப்
கிருஷ்ணன் வெங்கடாசலம் (சந்தியா பதிப்பகம், புதிய எண்: 77, 53வது தெரு, அசோக் நகர், சென்னை - 83. விலை ரூ. 275. தொடர்புக்கு: 98411 91397) தமிழர்களின் வாழ்வைப் பொறுத்தவரை சினிமா முக்கியப்பகுதி. தான், விரும்பிய, தமிழகமும் விரும்பிய 50 திரைப்படங்களின் சுவாரஸ்ய தகவல்களை தொகுத்திருக்கிறார் கிருஷ்ணன் வெங்கடாசலம்.
‘சகுந்தலை’யில் ஆரம்பித்து ‘களத்தூர் கண்ணம்மா’ வரை விசாரணையும், பயணமுமாக போகிறார். அந்தந்த சினிமாவின் சிறு குறிப்பு, கதை, படம் ெதாடர்பான செய்தி, சுவாரஸ்யம் என நிரவி பரந்திருக்கிறது இந்தப் புத்தகம். எண்ணற்ற தகவல்கள். சினிமாவிற்கு வெளியே இருந்து கொண்டு, இவ்வளவு தகவல்களைத் தொகுத்தளித்தது பெரிய சாதனை.
இப்படங்களின் ஊடாகச் சென்று சந்தோஷப்பட்டவர்களுக்கும், இவை எதுவொன்றும் அறியாத புதிய தலைமுறைக்கும் சேர்ந்தே உபயோகமாகும் நூல். ‘ஹரிதாஸ்,’ ‘வள்ளி’, ‘வாழ்க்கை,’ ‘மாயாபஜார்’... என வரிசையாக சுவாரஸ்யங்களை தெளித்துத் தருகிறார். வெகு சரளமாகக் கொண்டு சேர்க்கும் நடை. இதில் எல்லா ரசிகர்களுக்கும் வேண்டிய இடமும் உத்தரவாதமாக இருக்கிறது. நமக்குப் பிடித்த திரைப்படங்கள் பற்றிய விவரமான குறிப்புப் புத்தகம்.
அதலபாதாளத்தில் ஏழைகள்!
இந்தியாவில் பணக்காரர்கள் - ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதலபாதாளத்துக்குள் இறங்கியிருக்கிறது. ‘‘சுதந்திரத்துக்குப்பின் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் எதுவும் சாதாரண ஏழைகளுக்குச் செல்லவில்லை...’’ என்று குற்றம் சாட்டுகிறது ஓர் ஆய்வு. ‘‘இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாக நிலத்தை விற்று, வேலை நிமித்தமாக நகர்ப்புறங்களுக்கு வருவதால் அவர்களின் நிலை இன்னும் படுபாதாளத்துக்குச் செல்கிறது.
இதனால் கடந்த இருபது வருடங்களில் மட்டும் இந்திய விவசாயிகளில் சுமார் 5 லட்சம் பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்...’’ என்ற குண்டைப்போடுகிறது அந்த ஆய்வு. இந்த ஏழைகளில் பெரும்பான்மையினர் தலித்துகள், இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பலூன் டிப்ஸ்
குழந்தைகளுக்கு பலூன்கள் தரக்கூடிய சந்தோஷம் அளவிட முடியாதது. பலூனை மொத்தமாய் கட்டி பறக்க விடுவது... ஹேப்பி பர்த் டே கொண்டாடுவது தவிர நமக்கு வேறு எந்த யோசனையும் தோன்றுவதில்லை. ஆனால், கிழிந்த, பிய்ந்த, துளை விழுந்த பலூன்களைக்கூட பயனுள்ளதாக்க முடியும் என்கிறார்கள் ஜப்பானியர்கள்.
அப்படி சாதாரண பலூன்களை எந்தெந்த விதத்தில் பயன்படுத்த முடியும் என்பதை மினி வீடியோவாக்கி ஃபேஸ்புக்கின் ‘japanese lifehacker’ பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதை ‘tips&tricks’ என்ற பக்கத்தினர் re-share செய்துவிட, குவிந்தது லைக்ஸ் மழை. 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகிக்கொண்டிருக்கிறது அந்த பயனுள்ள பதிவு.
சைலன்ட் கார்னர்
மத்திய கால இந்திய வரலாறு சதீஷ் சந்திரா / தமிழில்: வேட்டை எஸ்.கண்ணன். (பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. விலை ரூ. 390. தொடர்புக்கு: 044-2433 2424) பொதுவாக நாம் வரலாறுகளை பின்தொடர்வதே இல்லை. ஆனால், அதுதான் நமக்கு மிகவும் அவசியமானது.
இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் மத்திய கால வரலாறு விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. அவர்களின் கட்டிடக்கலை, வளர்ச்சி, வீழ்ச்சி எல்லாமே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சதீஷ் சந்திராவின் பணி அவ்வளவு சிறப்பானது. மக்களுக்கு அணுக்கமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்தவர்களின் இடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தெளிவாக வரலாற்றை பின் தொடர்வதில் சதீஷ் சந்திரா முன்னணியில் நிற்கிறார். தவிக்க விடாமல் அடுத்தடுத்து பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் வேட்டை எஸ்.கண்ணன் மொழி பெயர்த்திருக்கிறார். அதனால் புத்தகத்தின் உள் நுழைவு எளிதாகிறது. பேரரசர்கள், குறுநில மன்னர்கள், அவர்களின் வினோதங்கள், மனோபாவம், சீர்திருத்தங்கள் எல்லாமே 480 பக்கங்களில் பரவிக் கிடக்கிறது.
நூல் மொத்தமும் இருக்கிற சம்பவங்களில் வாழ்வியல் சித்திரங்கள் பளிச்சிடுகின்றன. எப்போதுமே முன்னோர்களின் சரித்திரம் வசீகரமானது என்பதன் சான்றே இந்தப் புத்தகம். இவ்வகை புத்தகங்கள் ஆவணப் பதிப்பாக மாறிவிடக்கூடிய அபாயம் நிகழ்ந்திருக்கிறது. நல்ல வேளையாக அப்படி நிகழவில்லை.
|