இலக்கிய மனிதர்களுக்காக துளிர்ப்பவரும் துக்கத்தை உதிர்க்கிறவரும் இவர்தான்...-நா. கதிர்வேலன்

துளிர்க்கின்றன
இலைகள்
மரங்களுக்கென்ன வண்ணம்..
உதிர்க்கின்றன
பூக்கள்
மரங்களுக்கென்ன துக்கம்..
- என கவிதை எழுதியிருப்பார் அ.வெண்ணிலா.

இப்படி எல்லா இலக்கிய மனிதர்களுக்காக துளிர்க்கிறவராகவும், துக்கத்தை உதிர்க்கிறவராகவும் இருக்கிறார் அழகியசிங்கர் என அழைக்கப்படும் சந்திரமௌலி. முப்பது ஆண்டுகளாக ‘நவீன விருட்சம்’ இலக்கிய இதழை நடத்துகிறார். அத்தனை இலக்கியவாதிகளுக்கும் இன்சொல், புன்னகை, உதவி. யாரிடமும் வெறுப்பில்லை. காழ்ப்பில்லை. கடிந்ததில்லை. பிரமிள், ஸ்டெல்லா புரூஸ், அசோகமித்திரன் என பிதாமகன்களின் கடைசி கட்டத்திலும் கைகொடுத்திருக்கிறார்.

இந்த பலன்பெறா பெருமனம் கொண்ட அழகியசிங்கரை தனித்து கவனிக்க வைக்கிறது அவருடனான உரையாடல்! எந்தவித குறுக்கீடும் இன்றி அதை அப்படியே இங்கே தருகிறோம்... ‘‘ஏன் முப்பது வருடமாய் இந்த விருட்சத்தை நடத்திக்கிட்டு இருக்கேன்னு தெரியலை. எப்போ நீங்க பேச ஆரம்பிச்சீங்கன்னு கேட்டால் குறிப்பிட்ட தேதியை நானோ, நீங்களோ சொல்ல முடியாது.

ஆனால், அப்படித்தான் நடந்தது. எப்பவும் பத்திரிகையை நிறுத்தணும்னு தோணினதில்லை. பத்திரிகை வேலை வீட்டை பாதிக்காத மாதிரி பார்த்துக்கிட்டேன். என்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அப்படி ஒரு பழக்கமாய் இதுவே இருந்துட்டு போகட்டும்னு வீட்டில் நினைச்சிருக்கலாம்.

என் பத்திரிகையில் எழுதினவங்க பெரிய இடத்திற்கு வந்திருக்காங்க. குட்டிரேவதி முதல் கவிதை இதில்தான் வந்தது. தேவதச்சன், ஸ்டெல்லா புரூஸ், கோபிகிருஷ்ணன், னிவாசன், ஆனந்த் எல்லாரும் இதில் அதிகம் எழுதிப் பார்த்திருக்காங்க. அதுக்கு எல்லோரும் என்மேல் வைச்ச நம்பிக்கை காரணம்.

எனக்கு அப்ப இருந்த இலக்கிய பத்திரிகையெல்லாம் பார்த்தால் பயமா இருக்கும். கடுமையாக திட்டிக்குவாங்க. ஞானக்கூத்தனுக்கு பிரமிளை பிடிக்காது. பிரமிள், ஞானக்கூத்தன்னா காத தூரம் ஓடுவார். எனக்கு இலக்கியம் அமைதிக்கான வழின்னே பட்டது. அவங்களால் முடிஞ்சதை அவங்க எழுதுறாங்க, படிச்சா படி, படிக்காட்டிப் போன்னு தள்ளி வைக்கிறதை விட்டுட்டு கூச்சல் போட்டுக்கிறது பிடிக்கலை.

100வது இதழ் வந்தப்ப ‘குடும்பத்தைப் பாரு சந்திரமெளலி’ன்னு சொன்னாங்க. ஆனால், என் மூச்சு நிற்கும்போது ‘நவீன விருட்சம்’ நிற்கும்னு சொல்லிட்டேன். நகுலன் எப்ப சென்னை வந்தாலும் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக ஓர் இடத்திற்கு போக முடியாது. பல தடவை வந்திருந்தாலும் அவரை புரிஞ்சிக்க முடியாது.

ரோட்டுல நடக்க பயப்படுவார். டுவீலரில் உட்காரச் சொன்னால் ‘அய்யோ’னு மறுப்பார். ஆட்டோவில் போகலாம்னு சொன்னா, ‘பைசா போயிடும்’னு சொல்வார். பஸ்ஸில் ஏறி போவோமான்னு கேட்டால் மறுத்துவிடுவார். பக்கத்து தெருவில் இருக்கிற அவர் சகோதரர் வீட்டுக்குப் போகும்போது ‘சரியான வழியில் போறோமா’ன்னு நின்னு நின்னு கேட்பார்.

போதும் போதும்னு ஆயிடும். ஆனால், அந்த எழுத்தாளனை மறக்க முடியாேத... எத்தனை நுணுக்கம்... அவரை சுலபமாக கையாண்டுவிடுவேன். பிரமிள் மாதிரி நவீன கவிஞரை நாம் காப்பாற்றத் தவறிட்டோம். ஆனால், அவரும் வெளியே தோழமையோடு பழக முடியாதவர். எல்லார்கிட்டேயும் விலகி நிற்பார்.

அவர் எழுத்தில் இருந்த அந்த அசாத்திய கட்டமைப்பு இங்கே நிறையப் பேருக்கு இல்லை. அவரை பார்க்கப்போகும்போது அயோத்தியா குப்பத்துல இருந்தார். அந்த பெரும் நாற்றம் சூழ இருந்த இடத்தில் இருந்துதான் மகத்தான கவிதைகளை எழுதியிருக்கிறார். இன்னொரு தடவை ‘வேற இடம் மாறிட்டேன். வாங்க’னு சொன்னார். அங்கே போனால் பன்றிகள் வெட்டப்படுகிற இடத்தில் இருக்கிறார்.

போகும்போது உங்க செருப்பை விட்டுட்டுப் போங்கன்னு சொன்னார். ஏன்னா, தமிழ்ச் சமூகம் அவர் செருப்பையும் திருடிட்டுப் போயிருக்கு. செருப்பு வாங்கிக் கொடுத்தேன். ஓர் ஆதரவும் இல்லாம கோமாவில் இருந்து இறந்துபோனார். நான்தான் போயிருந்தேன். பளிச்சின்னு திட்டினது அவரை விட்டு பலரையும் விலக வைத்துவிட்டது.

யாருடன் சேர்ந்து சிரித்தீர்களோ அவரை ஒருவேளை மறந்துவிடலாம். ஆனால், யாருடன் சேர்ந்து துக்கத்தில் அழுதீர்களோ, அவரை உங்களால் மறக்க முடியாது. ரோஜாவை ‘ரோஜா’ என்றும் அழைக்கலாம்னு ஒரு கவிதை உண்டு. நான் அவரை அப்படியே பார்க்கிறேன். அவர் இறந்த துக்கத்தைக்கூட வீட்டில் சொல்ல முடியாம தவிச்சேன். அழுகை சத்தம் கேட்டுட்டா ‘யாரோ ஒருத்தருக்காக ஏன் இப்படி அழுகிறீங்க’னு கேள்வி வந்துவிடலாம்.

ஸ்டெல்லா புரூஸ் வாழ்ந்த விதமெல்லாம் அழகு. சதா கவிதை, சங்கீதம், இலக்கியமுமாக இருந்த காலம். பிறகு ஹேமா அவர் வாழ்க்கையில் இணைகிறார். அவரோடு இதய பலவீனமான அவர் தங்கை. ஆனால், நிலைமை சட்டுன்னு மாறியதை என்னவென்று சொல்ல... ஹேமாவிற்கு சிறுநீரக பிரச்சினை வர, அவர் தங்கை இறந்துபோக, தனியனாகிறார் ஸ்டெல்லா புரூஸ்.

அவருக்குத்தான் எவ்வளவு ரசிகர்கள். ‘விகடனில்’ போஸ்டர் போட்டார்கள். பேசும் கிளியை அந்த எம்.டி. பரிசளித்தார். அது வீட்டிற்குப் போகும்போதெல்லாம் பெயர் சொல்லிக்கூப்பிடும். ஆனால், எல்லாமே மாறிவிட்டது. எல்லோருக்கும் நம்பிக்கையைப் பரிந்துரைத்தவர் தற்கொலை செய்துகொண்டது ஏன்? அன்றைக்குத்தான் வாழ்க்கை வெறும் புனைவு என மனதில்பட்டது.

அசோகமித்திரனுக்கு கிட்டத்தட்ட நான் நண்பன். இப்பவும் ஒவ்வொரு மதியமும் ்மூன்று மணிக்குப் பிறகான நேரங்கள் அவரது அழைப்பிற்காக மானசீகமாக காத்திருக்கிறேன். அலைபேசியில் தொடக்கத்திலேயே இருக்கிற அவர் பெயரை எடுத்துவிட முடியவில்லை. புத்தகங்களை எல்லோருக்கும் கொடுத்துவிடுவார்.

ஒரேயொரு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டதை, பத்து மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட மாதிரி பாவனைகளோடு சொல்வது வேடிக்கை. ‘நீ மிளகாய் பஜ்ஜி வாங்கிட்டு வந்தால், உனக்கு ஒரு புத்தகம் தருவேன்’னு சொல்வார். அவர் விரும்புகிற எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப் போயிருக்கேன். போய் வந்த பிறகு அந்த களைப்பு தாங்காமல் கஷ்டப்படுவார்.

40 கிலோ எடையில் அவர் இத்தனை நாள் புழங்கி வந்ததே எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். எந்த விஷயத்தையும் வேறொரு கோணத்தில், மிக எளிமையாக சொல்லிவிடுவார். அவர் மாதிரி பெரியவர்களுடன் இருந்ததில் நான்தான் மேம்பட்டிருக்கிறேன்... நான் நிறையப் பேரை வயதானபிறகு பார்த்திருக்கேன். கட்டுரை எழுதுவார்கள். ஆனால், கற்பனை வராது.

ஆனால், அசோகமித்திரன் சொன்னால் சொன்ன நேரத்திற்கு கதை கொடுப்பார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ‘குங்கும’த்தில் தொடர் கூட எழுதினார். அவர் உடம்புக்குத்தான் வயசாகியிருந்தது. சமூகத்தின் மீதான அவரின் மெல்லிய கிண்டலை என்னிடம் பகிர்ந்து கொண்டேயிருப்பார்.

கடைசி காலத்தில் பலருக்கும் அஞ்சலி செலுத்தப்போகும்போது, படி இறங்கும்போதே ‘மெளலி, அடுத்த டிக்கெட் நான்தானோ’ன்னு சிரிப்பார். அப்படி மலர்ந்து சிரித்ததைப் பார்த்த பிறகுதான் அவர் எழுத்தும் வாழ்வும் ஒன்றுதான் என்று இயங்கி வந்ததை அறிய முடிந்தது!’’

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்