பார்வைக் குறைபாட்டுடன் டென்னிஸ் சாம்பியன்!



-ச.அன்பரசு

ஓர் இந்தியச் சிறுமியின் வெற்றிக் கதை

ஆம்பிலையோபியா என்பதுதான் அந்த நோயின் பெயர். டாக்டர் ஆங்கிலத்தில் சொன்னபோது, அச்சிறுமியின் பெற்றோருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. குழந்தை பார்வைத் தெளிவின்றி அடிக்கடி தட்டுத்தடுமாறி கீழே விழுந்து எழுவதைப் பார்த்து தவித்துப் போனார்கள். குழந்தையிடம் அவளின் பார்வை இழப்பு பிரச்னையை சொன்னால் புரிந்து கொள்ளுமா? நான்கு வயதில் அச்சிறுமியின் வலது கண்ணில் பார்வை பறிபோனது.

அதை சரிசெய்ய இடது கண்ணில் பேட்ச் அணிந்து ஒன்பது வயது வரையில் சிகிச்சை எடுத்தபோது அவர் சந்தித்த கேலி, கிண்டல்கள் அளவற்றவை. இன்று தன் 13வது வயதில் இந்திய டென்னிஸ் விளையாட்டின் ஜூனியர் பிரிவில் (AITA) முதலிடத்தில் இருக்கிறார் அந்தச் சிறுமி. யெஸ்.

சிறுவயதில் சந்தித்த தடைகள், மனதில் வளர்த்த வஜ்ர வைராக்கியத்தின் பரிசாக வெற்றிகளைக் குவித்து வரும் அச்சிறுமியின் பெயர் மல்லிகா மராதே. ‘‘கண்ணில் ஒட்டப்பட்ட ‘பேட்ச்’சை முதலில் நான் விரும்பவில்லை. பள்ளியிலுள்ள பலரும் அதனைக் கேலி செய்தது கூடுதலாக வெறுப்பை ஏற்படுத்தியது. பேட்ச்சை அகற்றினால் கண் பார்வையை நிரந்தரமாக இழந்துவிடுவாய் என்று என் பெற்றோர் கூறியதற்குப்பிறகு நான் என்ன செய்வது..?’’ தன் வேதனையான பால்ய காலத்தை நினைவுகூர்கிறார் மல்லிகா.

இந்த ஆம்பிலையோபியா குறைபாட்டுடனே டென்னிஸ் ராக்கெட்டை தன் ஆறு வயதில் அவர் தூக்கியது மெகா ஆச்சர்யம்தான். களத்தில் அவரது சர்வீஸ் வேகத்தைப் பார்த்து திகைத்துப்போன முன்னாள் டேவிஸ் கோப்பை வீரரும், தொடக்க கால பயிற்சியாளருமான சந்தீப் கிர்தனேவின் வழிகாட்டுதலில் மல்லிகா தொட்டது புதிய உயரம்.

‘‘டென்னிஸின் தீவிரத்தை தாங்க முடியாத மல்லிகாவின் வயதிலுள்ள சிறுமிகள் கைவலிக்கிறது, தலை வலிக்கிறது என்று அபத்த காரணங்களைச் சொல்லி பயிற்சியிலிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். ஆனால், மல்லிகா என்னை ஆச்சர்யப்படுத்தியது இந்த விஷயத்தில்தான். களத்திலிறங்கி விட்டால் அர்ப்பணிப்பாக விளையாடுவதைத் தவிர அவளுக்கு வேறெதுவும் தெரியாது.

அணுவளவும் தோல்வி பயமின்றி எதிராளியை எதிர்கொண்டு விளையாடும் அவளது திறனும், மனவலிமையும் அசாதாரணமானது!’’ என பயிற்சியாளர் சந்தீப் கூறுவது வெற்றுப் புகழ்ச்சியல்ல என்பதை மல்லிகா பின்னாளில் நிரூபித்துக் காட்டினார். முதல்போட்டியிலேயே வின்னர்.

பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி என்றாலும் டென்னிஸ் ராக்கெட்டை நம்பிக்கையுடன் இறுகப்பிடித்த மல்லிகா, பார்வையாளர்களின் அமர்க்கள கரகோஷங்களை தொடர்ந்து பெறத்தொடங்கியதற்கு காரணம் 100% உழைப்பு மட்டுமே. ‘‘நான் விளையாடுவது பந்துடன்தான். என் எதிரே இருப்பவருடன் அல்ல...’’ என்னும் யுனிவர்சல் லட்சியத்துடன் ஆடுகளத்தில் பலவீனங்களை பந்துகளாக்கி திருப்பி அடிக்கிறார் மல்லிகா.

அகமதாபாத்தில் நடந்த டென்னிஸ் போட்டி அது. தகிக்கும் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் சோர்வடையாமல் புன்னகையோடு போராடி வென்ற மல்லிகாவின் கால்களில் கடும் சூட்டினால் உருவான கொப்புளங்களிலிருந்து ரத்தம் கசியத்தொடங்கியது போட்டியின் இறுதியில்தான் அவருக்கே தெரிய வந்தது! டென்னிஸ் போட்டிகளுக்கு பெரிய ஆதரவில்லாத இந்தியாவில் அது குறித்த எவ்வித புகார்களையும் சொல்லாமல் கவனத்தோடு மல்லிகா விளையாடி வருவது நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒன்றுதான். 

பயிற்சி, போட்டிகள் என பரபரவென தீயாய் சுழன்று விளையாடும் அவரது அற்புதமான விளையாட்டுத் திறனுக்கு கிடைத்த பரிசுதான் அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் தகுதிப் பட்டியலில் கிடைத்த முதலிடம். அண்மையில் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சீரிஸில் 14 வயது மல்லிகா, தன்னை விட மூத்த வீரர்களை வென்று டைட்டிலைக் கைப்பற்றியதையும், கடந்த ஆண்டின் 11 வாரங்களில் (செப் - டிச.2016) விளையாடிய பத்து போட்டிகளில் எட்டு போட்டிகளில் வென்றிருப்பதையும் அவரது கேரியரின் அட்டகாச வெற்றிகள் எனலாம்.

‘‘இது ஒரு தொடக்கம்தான். பயிற்சியில் இன்னும் மல்லிகா தன் திறனைக் கூட்டினால் அடுத்து வரும் ஜூனியர் கிராண்ட்ஸ்லாமிலும் கூட அசத்தலாக சாதிக்க முடியும்!’’ என தெம்பூட்டுகிறார் இப்போதைய பயிற்சியாளரான ஹேமந்த் பெந்த்ரே. கடந்த ஏப்ரலில் புனேவில் நடைபெற்ற Rendez - Vous Roland - Garros போட்டியிலும் பொறிபறக்க விளையாடி பதக்கம் தட்டிச் சென்றது... வேறுயார்? மல்லிகாதான்.

ஏறத்தாழ 400 மேட்ச்சுகளை கடந்துவிட்டவர், எட்டாம் வகுப்பு படிப்பையும் ஆசிரியர்களின் ஆதரவோடு தொடர்கிறார். ‘‘சிறப்பாக நான் விளையாடு வதாய் பாராட்டுகள் கிடைத்தாலும் எனது சர்வீஸை இன்னும் துல்லியமாக்க வேண்டும். கிரவுண்ட் ஸ்ட்ரோக் மற்றும் பேக் ஹேண்டிலும் நேர்த்தியாக விளையாட முயற்சிக்கிறேன்...’’ என தன்னடக்கமாக பேசுகிறார் மல்லிகா மாரதே.

அடுத்த மாதம் பாரீசில் நடைபெறும் ப்ரெஞ்ச் ஓபன் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்காக இப்போது கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறார். வென்று வா தோழி! ஆம்பிலையோபியா குறைபாடு! 1600ல் கண்டுபிடிக்கப்பட்ட நோய் இது. மூளைக்கும் கண்களுக்கும் சரியான தொடர்பு இல்லாததால் ஏற்படும் பார்வைத் தெளிவின்மையே ஆம்பிலையோபியா.

கண்களின் வடிவில் ஏற்படும் மாறுபாடே இக்குறைபாட்டுக்கு காரணம். 5 வயதிற்குள் குழந்தைகளை டெஸ்ட் செய்தால் இதனை எளிதில் கண்டறியலாம். இந்நோயினால் உலகில் பாதிக்கப்படும் குழந்தைகளின் அளவு - 1.5% கண்களின் வடிவ மாறுபாடு, கிட்டப்பார்வை, தூரப்பார்வை மாறுபாடுள்ள கண்கள், கண்புரை கோளாறுகள் ஆகியவை இதன் மூன்று வகைகள்.