காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்யுவகிருஷ்ணா - 6

மெதிலின் நகரின் இடுகாடு, நூற்றாண்டு கால சமாதிகளால் பல ஏக்கர் பரப்பளவுக்கு நிறைந்திருந்தது. இன்னும் பல்லாயிரம் சடலங்கள் அங்கே நிரந்தரமாக நிம்மதியாக உறங்க தாராளமாக இடமிருந்தது.இரவுகளில் இடுகாட்டை கண்காணிக்கும் அந்த காவலர் கதிகலங்கிப் போயிருந்தார்.

போதைப் பிரியர்களுக்கும், பாலியல் தொழிலாளிகளுக்கும் வேளை கெட்ட வேளையில் அதுதான் கூவத்தூர் ரெசார்ட். காவலருக்கு அஞ்சோ, பத்தோ கவனித்துவிட்டால் போதும். தங்கள் ‘வேலையை’ காதும், காதும் வைத்தது மாதிரி முடித்துக் கொள்ளும் வரை வேறெந்த தொந்தரவும் இருக்காது.

ஆனால் - சமீபமாக அங்கே ஏதேதோ விசித்திரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏதேதோ சத்தங்கள் கேட்கிறது. அமானுஷ்யமான நடமாட்டத்தை உணர்ந்தார் அந்தக் காவலர். “ஒருவேளை உண்மையிலேயே பேய்கள் இருக்கிறதோ?” ‘இருக்கிறது’ என்று அடித்துப் பேசினான் எஸ்கோபார்.

பகலில் பள்ளி, மாலையில் மெதிலின் நகர் மதுக்கூடங்களில் சப்ளையராக பணி, இரவுகளில் கஞ்சா என்பதுதான் எஸ்கோபார் & கோவின் வாழ்க்கையாக இருந்தது. தொந்தரவில்லா போதை சுகத்துக்கு தொக்கான ஓர் இடம் வேண்டுமே? அதுதான் இந்த இடுகாடு. கையில் காசு புரண்டால், அவ்வப்போது டீன் ஏஜ் பாலியல் பெண்களோடு வருவார்கள். கிரானைட் கற்களால் வேயப்பட்ட சமாதிகளே மலர் மஞ்சம். காவலர் கண்டுகொள்ள மாட்டார். சின்னச் சின்ன கையூட்டுகளுக்கு விலை போயிருந்தார்.

சமீபமாக எஸ்கோபாரும், அவனுடைய சகா குஸ்டோவாவும் அந்த காவலருக்கு நெருக்கமான சகாக்களாக மாறியிருந்தார்கள். அவரோடு நாட்டுச்சாராயத்தை பகிர்ந்து கொண்டார்கள். குஷியாக இருக்கும் சில நேரங்களில் ‘டோப்’ கூட கொடுப்பார்கள். மாசக் கடைசியில் கேட்டால், வட்டியில்லாமல் கடனும் கொடுத்து உதவுவான் எஸ்கோபார்.

அந்த இடுகாடுதான் எஸ்கோபாரின் தற்காலிக தலைமையகம். குஸ்டோவாவைத் தவிர்த்து வேறு சில தறுதலைகளும் எஸ்கோபாரின் தலைமையை ஏற்றிருந்தார்கள். ஒரு தலைவனாக மெதுவாக பரிணமித்துக் கொண்டிருந்தான் நம்ம ஆளு. வீட்டில் கிட்டத்தட்ட தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள். இத்தகைய சூழலில்தான் மெதிலின் இடுகாட்டில் பேய்ப் பிரச்னை.

“நடுராத்திரியில் ஏதேதோ சப்தம் கேட்குது பாப்லோ. போனவாரம் கூட நீ அந்தப் பொண்ணோட இருந்துட்டு கிளம்பிப் போனே பாரு... அன்னைக்கு அந்த பொம்பளை மேயரோட சமாதியில் இருந்து டொம்மு டொம்முன்னு சத்தம் கேட்டது. விளக்கு எடுத்துக்கிட்டு போயி பார்க்கலாம்னு கிளம்பினேன். அப்படியொரு கொடூரமான சிரிப்புச் சத்தம்.

சத்தியமா சொல்றேன். அது பேயோட சிரிப்புதான். முதுகெலும்பெல்லாம் அப்படியே நட்டுக்கிச்சி. நாலு நாள் ஜுரத்துலே விழுந்துட்டு, இன்னிக்கி காலையிலேதான் எழுந்து வந்தேன்!” காவலரின் கண்களில் அச்சம் மிச்சமிருந்தது. கஞ்சா புகையை ஆழமாக உறிஞ்சிவிட்டு, வானத்தைப் பார்த்து சிந்தித்தான் பாப்லோ. “நீ சொல்ற மாதிரியான விஷயத்தையெல்லாம் இங்கிலீஷ் படங்களில் பார்த்திருக்கேன்.

நிறைவேறாத ஆசையைத் தீர்த்துக்கறதுக்கு செத்தவங்க பேயா மாறி சமாதியை உடைச்சிக்கிட்டு வெளியே வந்துடுவாங்களாம். அப்படி இல்லைன்னா யாரையாவது பழி தீர்த்துக்கணும்னா கூட இதுமாதிரி சாத்தானா அலைவாங்களாம்!” பேயின் வேலைதான் என்று உறுதியாகச் சொன்னான் எஸ்கோபார்.

காவலரின் வேண்டுகோளை ஏற்று எஸ்கோபாரும், அவனுடைய குழுவினரும் இரவுகளில் சுடுகாட்டை ரோந்து வரத் தொடங்கினார்கள். அவர்களில் பலருக்கும் இதுபோன்ற அமானுஷ்யமான அனுபவங்கள் ஏற்படுவதாக அவ்வப்போது காவலரிடம் வந்து சொன்னார்கள். மேலும், சமாதிகளில் இருந்து கிளம்பும் பேய்கள் சும்மா கிளம்புவதில்லை. தங்கள் சமாதிகளை மூடியிருந்த விலையுயர்ந்த கிரானைட் கற்களையும் அபேஸ் செய்து கொண்டு போகின்றன.

நீத்தார் நினைவுநாளில் அஞ்சலி செலுத்த வரும் சம்பந்தப்பட்ட குடும்பத்தார், சிதைந்து போன சமாதிகளைக் கண்டு குமுறத் தொடங்கினார்கள். சமாதிகள் சரியாக ‘மெயின்டெயின்’ செய்யப்படுவதில்லை என்று காவலரிடம் சண்டைக்குப் போனார்கள். இடுகாட்டுக்கு பொறுப்பான சர்ச்சிடம் விவகாரம் போனது. சர்ச், ஓர் இளம் பாதிரியாரை வைத்து பஞ்சாயத்து செய்தது. ஃபாதரின் விசாரணையில் பேய்களின் அட்டகாசம் பற்றி தெரியவந்தது.

காவலர் சொன்ன கதைக்கு எஸ்கோபார் & கோ நேரடி சாட்சி. வேலிக்கு ஒணான்கள் சாட்சி. இளம் பாதிரியாருக்கு இயேசு நம்பிக்கை மட்டுமின்றி, சாத்தான் நம்பிக்கையும் இருந்தது. Exorcism மாதிரி ஏதாவது மாந்திரீக வேலைகள் செய்து சாத்தானின் லீலையை விரைவில் முறியடிப்பேன் என்று சபதம் ஏற்றார்.

ஆனால் - காணாமல் போய்க் கொண்டிருக்கும் சமாதிகளுக்கு என்ன பதில் சொல்வது? செத்தவர்கள் பேயாக மாறி தங்களை மூடியிருந்த கிரானைட் கல்லை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்கள் என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? அதுவுமின்றி அப்பாவி மக்களிடம் பேய் குறித்த பீதியை எழுப்புவதில் சர்ச்சுக்கு சம்மதமில்லை. எஸ்கோபாரே இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக ஏற்பாடு செய்தான்.

தனக்குத் தெரிந்த கல் வியாபாரி ஒருவரை அறிமுகப்படுத்தினான். மலிவு விலையில் செகண்ட் ஹேண்டில் கிரானைட் கற்களை அவர் தாராளமாக சப்ளை செய்ய முன்வந்தார். சர்ச், தலையில் அடித்துக் கொண்டு மாதாமாதம் அந்த ஏஜெண்டுக்கு பில் செட்டில் செய்தது. யாருக்குமே தெரியாமல் காதும் காதும் வைத்தமாதிரி இந்த வேலை நடந்து கொண்டிருந்தது.

இடுகாட்டுக் காவலரும், எஸ்கோபாரும் இந்த காண்ட்ராக்டில் கொஞ்சம் அப்படி இப்படியென்று கமிஷன் அடித்து ஊழல் செய்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் - இன்னொரு ட்விஸ்ட்டும் உண்டு. அந்த கிரானைட் ஏஜெண்ட் வேறு யாருமல்ல, எஸ்கோபாரின் ஒண்ணுவிட்ட தாய்மாமன்தான். மேலும், அந்த இடுகாட்டில் பேயுமில்லை, நாயுமில்லை.

எஸ்கோபார் கும்பலின் திருட்டு வேலைதான். காவலரையும், சர்ச்சையும் கிரானைட்டை பேய்கள் களவாடுவதாக நம்பவைத்து இவர்கள்தான் ஆட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதே கற்களையே கொஞ்சம் பாலிஷ் போட்டு, மீண்டும் சர்ச்சுக்கே சகாய விலையில் சப்ளை செய்து நல்ல காசும் பார்த்தார்கள்.

எண்பதுகளில் உலகத்தையே தன்னுடைய கள்ளக் கடத்தல் சாம்ராஜ்யத்தால் உலுக்கிய சக்கரவர்த்தி, மாஃபியாக்களின் டான், கார்டெல்களின் காட்ஃபாதர் எஸ்கோபாரின் முதல் தொழில் இதுதான் என்று சொன்னால், கருப்பு உலகத்துக்கே கேவலம்தான். ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையால் 1989ல் உலகின் டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட பாப்லோ எஸ்கோபார், தன்னுடைய இந்த முதல் தொழிலைப் பற்றி எங்குமே மூச்சு விட்டதில்லை. யாராவது கேட்டால் மவுனமான ஒரு சிரிப்பை மட்டுமே உதிர்ப்பார்.

இந்தத் தில்லுமுல்லு வேலையைச் செய்துகொண்டிருந்தபோது எஸ்கோபாரின் வயது ஜஸ்ட் பதினேழுதான். சர்ச்சிடமிருந்து ஏமாற்றி நிறைய காசு ஆட்டை போட்டு, தாறுமாறாக செலவழிக்க ஆரம்பித்தான். அவனும், அவனுடைய நண்பர்களும் இரவுநேர உல்லாசங்களில் திளைக்க ஆரம்பித்தார்கள். படிப்பு? அது கிடக்குது கழுதை!

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்

Cartel என்றால் என்ன?

கார்டெல் என்கிற சொல்லுக்கு குத்துமதிப்பாக மோனோபோலி என பொருள் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு போட்டியாளர்கள், லாபத்தை கருத்தில் கொண்டு தங்கள் சரக்குகளின் விலையை புரிந்துணர்வோடு ஒரு ரேஞ்சில் நிறுத்தி வைத்திருப்பார்கள். இந்த கூட்டணியைத்தான் கார்டெல் என்பார்கள். போதை பிசினஸில் ஈடுபட்ட பல்வேறு டான்கள் இதுபோல கார்டெல்லாக கூட்டணி அமைத்து சரக்குகளின் விலையை நிர்ணயித்தார்கள்.

கார்டெல்லை நிர்வகிக்க ஒரு தலைவர் இருப்பார். உலகம் முழுக்கவே ஏகப்பட்ட கார்டெல்கள் உண்டு. சில கார்டெல் தலைமைப் பதவி பரம்பரை பரம்பரையாக அவர்களது வாரிசுகளாலேயே நிரப்பப்படும். கொலம்பியாவில் வலுவான கார்டெல்கள் ஏகத்துக்கும் இப்போதும் இருக்கின்றன. நம்முடைய காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபார் நிறுவி, சரித்திரம் படைத்த கார்டெல்லின் பெயர் ‘மெதிலின் கார்டெல்!