மருது பாண்டியர் குடும்ப நகை விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானவர்!



தமிழ்நாட்டு நீதி மான்கள் - 29

-கோமல் அன்பரசன்

டி.முத்துசாமி அய்யர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் ஊட்டிக்கு ரயிலில் கிளம்பினார்கள். அவர்களில் 3 பேர் ஆங்கிலேயர்கள். ஒருவர் மட்டும் இந்தியர். வண்டி ஓர் ஊரில் நின்றது. அப்போது முதல் வகுப்பு பெட்டியில் படுத்திருந்த அந்த இந்திய நீதிபதியை மட்டும் தட்டி எழுப்பினார்கள். அவர் யார்? எவர்? என்பதையெல்லாம் விசாரித்து அறிந்து கொள்ள அந்த ஆங்கிலோ இந்தியன் ஸ்டேஷன் மாஸ்டருக்கு பொறுமை இல்லை.

ஒரு வெள்ளைக்காரர், மனைவியுடன் அந்த முதல் வகுப்பு பெட்டியில் பயணிக்க வேண்டும். அவ்வளவுதான். “முதல் வகுப்பு பயணிகளை பாதி தூக்கத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என்ற விதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என தூக்க கலக்கத்திலும் அந்த இந்திய நீதிபதி பொறுமையாகக் கேட்டார். நிலைய அதிகாரி பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டு பதில் சொன்னார் ரயிலில் ஏற வந்த வெள்ளைக்காரர். “அதெல்லாம் ஐரோப்பியர்களுக்குத்தான்; இந்தியர்களுக்கு அல்ல.’’

வேறென்ன செய்ய? இந்தியர் இறங்கி இரண்டாம் வகுப்பு பெட்டியில் உட்கார்ந்து கொண்டார். அடுத்த நாள் காலையில் மற்ற 3 நீதிபதிகளும் ரயிலில் இருந்து இறங்கினர். ஆனால், அவர்களின் சக இந்திய நீதிபதி இறங்க வேண்டிய பெட்டியிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் வெளியே வந்தார். தான், ஒரு மாவட்ட நீதிபதி (ஜில்லா ஜட்ஜ்) என்று அறிமுகம் வேறு செய்துகொண்டார்.

“இந்த பெட்டியில் சர்.டி.முத்துசாமி அய்யர் இருந்தாரே… அவர் எங்கே?” என வெள்ளைக்கார நீதிபதி கேட்க மாவட்ட நீதிபதி பதற்றமாகி, நள்ளிரவில் நடந்ததை எல்லாம் சொன்னார். எல்லோரும் சேர்ந்து பக்கத்து பெட்டிக்குப் போய் பார்த்தார்கள். அங்கே இரண்டாம் வகுப்பு பயணியின் குழந்தையைக் கொஞ்சியபடி உட்கார்ந்திருந்தார் முத்துசாமி அய்யர். அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு மாவட்ட நீதிபதியை மற்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அய்யரோ, “என்னை இறக்கிவிட்டது அற்ப விஷயம். அதை மறந்துவிடலாம். ஆனால், ரயில்வே விதிகளுக்கு நேற்றிரவு நீங்கள் கொடுத்த விளக்கத்தை, நீதிமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யாதீர்கள்...” என்று மாவட்ட நீதிபதியிடம் சொன்னார். இந்த சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். நாடு முழுவதும் வெள்ளைக்காரர்கள் வசமிருந்த காலத்தில் நம்மவர்களின் கதி எப்படி இருந்தது என்பதை உணரமுடியும். அதற்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல.

இந்தியாவில் முதலில் உருவாக்கப்பட்ட 3 உயர்நீதிமன்றங்களில் ஒன்றான ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ முழுக்க ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்தான். நம்ம ஊரு வக்கீல்கள் நீதிமன்றங்களுக்குள் காலெடுத்தே வைக்க முடியாது. வாதாட அனுமதிப்பதெல்லாம் கிடக்கட்டும். இந்திய வக்கீல்கள் காலில் செருப்பு கூட போடமுடியாது. பாரீஸ்டர்கள் கோட் சூட், ஷூ போட்டு மிடுக்காக வலம் வரும் அதே நீதிமன்றத்தில், வேட்டியும் தலைப்பாகையுமாக வெறுங்கால்களுடன் இந்திய வக்கீல்கள் காட்சியளிப்பார்கள்.

இத்தகைய இனவெறி நடவடிக்கைகளில் மட்டுமின்றி, சட்ட அறிவிலும் தங்களைவிட இங்கிருப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் ஆங்கிலேயர்களுக்கு நிறைய உண்டு. அதை  உடைத்து அவர்களின் வாயாலேயே அங்கீகரிக்க வைத்தவர் முத்துசாமி அய்யர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 1878ம் ஆண்டு ஹாலோவே என்ற வெள்ளைக்கார நீதிபதி ஓய்வு பெற்ற இடத்திற்கு முத்துசாமி அய்யரை ஆங்கிலேய அரசு நியமித்தது.

இதற்கு சென்னையில் வசித்த ஆங்கிலேயர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் குறிப்பாக வெள்ளைக்கார வியாபாரிகளால் அய்யரின் நியமனத்தை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. ‘வணிகப் பிரச்னைகளுக்காக நாங்கள் போடும் வழக்குகளை விசாரிக்க ஓர் இந்தியனா? சட்ட நுணுக்கங்களையும் வியாபார அணுகுமுறைகளையும் அவரால் புரிந்து கொள்ள முடியுமா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.

‘தி நேடிவ் பப்ளிக் ஒப்பீனியன் (The Native Public Opinion)’ என்ற பத்திரிகை முத்துசாமி அய்யரின் நியமனத்தை தாறுமாறாக விமர்சித்து எழுதியது. அதற்கு பதிலடி கொடுக்க ‘நமக்கும் ஒரு பத்திரிகை இருந்தால் நன்றாக இருக்குமே!’ என்ற வேகத்தில் தொடங்கப்பட்டதே ‘தி ஹிந்து’.

சில வழக்குகளிலேயே எதிர்க்குரல்களை முனை மழுங்கச் செய்தார் முத்துசாமி அய்யர். அபாரமான சட்ட அறிவாலும் ஆங்கிலப் பேச்சாற்றாலாலும் எதிர்ப்பாளர்களை வாயடைக்க வைத்தார். கீழ்மட்டத்தில் இருந்து வந்தவர் என்பதால் சொத்து தொடர்பான சட்டங்கள், கொடுக்கல், வாங்கல், நிலவரி, கிரிமினல் வழக்கு சட்டங்கள் போன்ற நுணுக்கங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தார்.

அனுபவம் எனும் பேராற்றலைக் கொண்டு தாம் விசாரிக்கும் வழக்குகளை நுணுக்கமாக ஆராய்வார். வழக்கில் முதன்முதலாக பதியப்பட்ட குற்றச்சாட்டு வரை அனைத்தையும் படித்துவிட்டுத்தான் விசாரிப்பதற்கு வந்து அமர்வார். பொறுமையுடன் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொள்வார். கேள்வி மேல் கேள்வி கேட்டு வழக்கிற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வெளிக்கொண்டு வந்துவிடுவார். அவற்றின் அடிப்படையில் உண்மையை அறிந்து எதற்கும் அஞ்சாமல் தீர்க்கமாக தீர்ப்புகளை எழுதுவார்.

இதனால்தான் 17 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதியாகத் திகழ்ந்தார். இடையில் 1893ல் மூன்று மாதங்கள் தலைமை நீதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். அதிலும் முதல் இந்தியர் இவர்தான்! உச்சுவாடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருவாரூர் முத்துசாமி அய்யர், ஏழைக் குடும்பத்தில் 1832 ஜனவரி 28ல் பிறந்தார். வீட்டுக்குள் உட்கார்ந்து படிப்பதற்கு விளக்கு கூட இல்லாத வறுமை. விட்டுவிட்டு எரிந்து மங்கிய வெளிச்சம் தந்த திருவாரூரின் மண்ணெண்ணெய் தெருவிளக்கில்தான் படித்தார்.

அந்தப் படிப்பையும் ஒரு கட்டத்தில் தொடர முடியவில்லை. அந்த ஊர் தாசில்தார் முத்துசாமி நாயக்கரிடம் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தார். அதன் மூலம் மாதம் ஒரு ரூபாய் சம்பாதித்து ஜீவனம் நடத்தினார். அங்கே தமது அறிவுக்கூர்மையைப் பலமுறை நிரூபித்தார். இதனால் ஒரு ரூபாய் ஊதியம் 3 ரூபாயானது. தாசில்தாரிடம் பிற்பகலில்தான் வேலை. காலையில் பள்ளியில் நடக்கும் ஆங்கில வகுப்பை ஜன்னலுக்கு வெளியே நின்றபடியே கேட்பார்.

பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் அசரும் அளவுக்கு ஆங்கிலம் பேசிய அவர், நாட்கணக்கில் நின்றுகொண்டே எட்டி எட்டிப் பார்த்தே அந்த மொழியைக் கற்றுக்கொண்டார். ஒரு நாள் இதனைக் கண்ட ஆசிரியர் கூப்பிட்டு விசாரித்து அவரது கற்கும் ஆர்வத்தை அறிந்துகொண்டு தாசில்தாரிடம் அழைத்துப் போய் விட்டார். சிறுவன் முத்துசாமியின் அறிவுக்கூர்மையை ஏற்கனவே அறிந்திருந்த தாசில்தார், வேலையில் இருந்து நிறுத்திவிட்டு, நாகப்பட்டினம் மிஷன் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.

ஒன்றரை ஆண்டுகள் அங்கே படித்த முத்துசாமியை தாசில்தாரே சென்னைக்கு அனுப்பி ‘மெட்ராஸ் ஹைஸ்கூலில்’ (Sir Henry Montgomery’s school) சேர்த்துவிட்டார். பட்டப்படிப்பும் முடித்தார். அப்போது ‘கல்வித்துறை கழகம்’ மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்தது. ‘தீய பழக்கங்களும் அவற்றைத் திருத்தும் வழிகளும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் முத்துசாமி எழுதிய கட்டுரைக்கு ரூ.500 பரிசு கிடைத்தது.

இதையறிந்த ஆங்கிலேய பிரமுகர்களான அலெக்சாண்டர் ஜான் அர்பத்னாட் மற்றும் நீதிபதி ஹாலோவே ஆகிய இருவரும் முத்துசாமி அய்யரை லண்டன் அனுப்பி சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வைக்க ஆசைப்பட்டனர். ஆனால், அன்றைக்கு பிராமண சமூகத்தில் இருந்த கட்டுப்பாட்டின்படி கடல் கடந்து அவர் செல்லவில்லை. பள்ளிக்கூட ஆசிரியர், ஆவணக் காப்பாளர், பள்ளிக்கூடங்களின் துணை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் பார்த்தார்.

தொடர்ந்த முயற்சிகளின் விளைவாக 1859 ஜூலை 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் துணை ஆட்சியரானார். பின்னர் சவுத் கனரா மாவட்டத்தின் (இப்போது கர்நாடகாவில் உள்ளது) துணை நீதிபதியாக 1868 ஜூலை வரை பணியாற்றிய முத்துசாமி அய்யர், சென்னையில் ‘டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட்’ பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னை மாநிலக்
கல்லூரியில் சட்டம் படித்தார்.

சமஸ்கிருதத்திலும் பட்டம் வாங்கினார். இதன்பிறகு சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் (Court of Small Causes) 1871ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இத்தனை இடங்களிலும் தமது திறமையை நிரூபித்து வந்ததால்தான் முத்துசாமி அய்யரை, பலத்த எதிர்ப்புக்கிடையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1878ல் ஆங்கிலேய அரசு நியமனம் செய்தது.
நீதிபதியாக இருந்த போது மலபார் மக்களின் திருமண முறைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க வழிசெய்தார்.

பிராமண சமூகத்தில் விதவை மறுமணத்திற்கு ஆதரவாக தனி அமைப்பையே (Widow Remarriage Association) உருவாக்கினார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த முத்துசாமி அய்யர் 1895 ஜனவரி 25ம் நாள் நீதிபதியாகவே மறைந்தார். ஒரு வக்கீலாக பணியாற்றாவிட்டாலும் இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டு வழக்கறிஞர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.

அதனை நாம் எப்போதும் மறந்திடக்கூடாது என்பதற்காகத்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் தளத்தில் நடுநாயகமாக வெண்பளிங்கு கல்லில் சர்.டி.முத்துசாமி அய்யர் உட்கார்ந்திருப்பது போலவே உயிரோட்டத்துடன் அவருக்கு 1898லேயே சிலை வைத்துவிட்டு போயிருக்கிறார்கள் வெள்ளைக்காரர்கள்..!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

பழசை மறக்காத மனசு!

கும்பகோணம் கல்லூரி முதல்வர் கோபால்ராவ் வீட்டில் 1880ம் ஆண்டு திருமணம். இதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான முத்துசாமி அய்யர் வந்திருந்தார். அவர் வரப்போகிறார் என்ற செய்தி அறிந்த வயதான பெண்மணி ஒருவர் திருவாரூரில் இருந்து நடந்தே கும்பகோணம் வந்துவிட்டார். எப்படியாவது முத்துசாமி அய்யரைப் பார்த்து விட வேண்டும் என்பது அவரது ஆசை.

கல்யாண வீட்டுக்குப் பக்கத்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வருவோர், போவோரிடம் எல்லாம் ‘முத்துசாமி அய்யர் வந்திருக்கிறாரா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்துவிட்டுச் சென்றனர். ஆனாலும் மனம் தளராத அந்தப் பெண்மணி கேட்பதை நிறுத்தவில்லை. அங்கே வந்த முத்துசாமி அய்யரின் உதவியாளரிடமும் இதனைக் கேட்டார். அவர் எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு அய்யரிடம் போய் சொன்னார்.

உடனே வெளியில் வந்த அய்யர் அந்தப் பெண்மணியைப் பார்த்தவுடன் ‘அம்மா சவுக்கியமா?’ என்று கேட்டபடி நெடுஞ்சாண்கிடையாக அவரின் காலில் விழுந்தார். சுற்றி நின்ற பெரிய மனிதர்கள் உட்பட பலரும் ஆச்சரியமடைந்தனர். திருவாரூரில் தாம் கஷ்டப்பட்ட போது அந்தம்மாவின் கையால் சோறு சாப்பிட்டதை நன்றியோடு நினைவுகூர்ந்தார். தம்மோடு சென்னைக்கு வந்துவிடுமாறு அவரை அழைத்தார்.

முதிய பெண்மணியோ, ‘உன்னைப் பார்த்ததே போதும். மகராசனா நீ தீர்க்காயுசோடு இருக்கணும். நான் ஊருக்குப் போகிறேன்’ என்று கூறினார். அவருக்கு துணிகள், போர்வை உள்ளிட்டவை வாங்கிக்கொடுத்து திருவாரூருக்கு ரயில் ஏற்றிவிடச் செய்தார் முத்துசாமி அய்யர்.

கட்டைவிரலின் ஆட்டம்!

முத்துசாமி அய்யருக்கு ஒரு விநோத பழக்கம் இருந்தது. கடைசிவரை அவர் செருப்பு அணியவில்லை. நீதிமன்றத்தில் வக்கீல்களின் வாதத்தைக் கேட்கும்போது அவரின் கால் கட்டைவிரல் ஆடிக்கொண்டே இருக்கும். வழக்கில் நியாயம் யார் பக்கம் என்ற தெளிவு கிடைத்துவிட்டால் விரலை பக்கத்தில் உள்ள விரல் மீது அழுத்திக் கொள்வார். அப்படி என்றால் தீர்ப்பு எழுதப்போகிறார் என்று அர்த்தம். எனவே, நீதிமன்றத்தில் வக்கீல்கள் அவரது முகத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ, கால் கட்டைவிரலைப் பார்த்தே வாதிடுவார்கள். ஆட்டம் நின்றுவிட்டால் அதன்பிறகு என்ன வாதிட்டாலும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

சர்ச்சைகளும் உண்டு!

சாதனை மனிதராக முத்துசாமி அய்யர் திகழ்ந்தாலும் அவரைப் பற்றிய சர்ச்சைகளும் உண்டு. விதவை மறுமண ஆதரவுக்காக சொந்த சமூகத்திலேயே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. ஆலய நுழைவு, மனைவியைக் கணவன் அடித்தல், மருது பாண்டியர் குடும்ப நகைகள் விவகாரம் உள்ளிட்டவற்றில் அய்யரின் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின. இப்போதும் அவற்றுக்காக அவரை விமர்சிப்பவர்களும் உண்டு.