கவிதை வனம்தாகங்கள்

மேகம்
தன் கண்களிலிருந்த
பாரத்தை இறக்கின.
நிலம் மறைந்தது
நீரின் தத்தளிப்புகளால்.
யுவதி
கூந்தலை மணம் கமழும் புகையால்
உலர்த்திக்கொண்டிருந்தாள்.
அவனுள் பெருக்கெடுத்தன
நிறைவுகொள்ளா தாகங்கள்.
         
- ந.பெரியசாமி

இன்னும் பசுமையாக

ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு
வீட்டின் உள்ளே வந்து விழுந்தது பந்து
நடுங்கும் கைகளோடு பந்தை எடுத்து
தள்ளாடி படியிறங்கினேன்
பயம் பரவிய முகத்தோடு வாசலில்
நிற்கும் சிறுவனிடம் ஏதும் பேசாமல்
சின்ன புன்னகையுடன் கொடுத்தேன்
பந்தைப் போல துள்ளி ஓடினான்
வீட்டின் பின் மைதானத்தில்
சிறுவர்கள் கால்பந்து விளையாடும் இரைச்சல்
மொட்டை மாடியில்
ரேணுகாவின் கண்ணாமூச்சி
கண் மூடி அமர்ந்து
பெருமூச்சோடு முழங்காலைப் பார்த்தேன்
கபடியில் பட்ட காயத்தின் தழும்பு
இன்னமும் பசுமையாக.
             

- பெ.ராஜா மோகன்