புத்துணர்வு



-க.கமலக்கண்ணன்

‘‘என்ன சார்... ஆபீஸ்ல யாரையும் காணோம்?’’ என்று கேட்டபடியே வந்தார் நிறுவனத்தின் ஆலோசகர் பிரேம். ‘‘டீ பிரேக்! எல்லோரும் கேன்டீனுக்குப் போயிருக்காங்க...’’ என்றார் நிர்வாக அதிகாரி சந்திரவர்மன். ‘‘முன்னாடி எல்லாம் ஆபீஸ் பாய்தானே எடுத்துவந்து கொடுப்பார்?’’ என்று வியப்பாகக் கேட்டார் பிரேம். ‘‘அந்தப் பையன் சரியா வர்றதில்லை. வேற ஆளைப் போட வேண்டும்...’’ என்றார் சந்திரவர்மன்.

‘‘இல்ல, நீங்க ஆபீஸ் பாய்க்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை மிச்சம் பிடிக்கிறீங்களோன்னு தோணுது’’ என்றார் பிரேம். ‘‘அப்படிப் பார்த்தா இங்கே மற்ற பணியாளர்களின் சம்பளம் ஆபீஸ் பாயைவிட பல மடங்கு அதிகமாச்சே’’ என்றார் சந்திரவர்மன். ‘‘அப்புறம் ஏன் புது ஆபீஸ் பாய் போடலை?’’ என்று கேட்டார் பிரேம். ‘‘இங்கு அத்தனை பேருக்கும் கம்ப்யூட்டரில் வேலை. குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது.

இப்படி மணிக்கணக்கில் வேலை பார்த்தால்  உடம்புக்கு நல்லதில்ல. அதனால்தான் ஆபீஸ் பாயை நிறுத்திவிட்டு அனைவரையும் படிக்கட்டில் இறங்கிப் போய் காபி குடிக்கச் சொல்லியிருக்கிறேன். அந்த நேரத்தில் நடப்பது, மற்றவர்களுடன் சிறிது சந்தோஷமாக உரையாடுவது போன்ற நிகழ்வுகளால் மனசுக்கு புத்துணர்ச்சி, காபி குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சி’’ என்று சொன்னார் சந்திரவர்மன். ‘‘உங்கள் ஆபீஸில் வேலை செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’ என்று சொன்ன பிரேம், ‘‘நாமும் கீழே சென்று காபி குடித்துவிட்டு வருவோமா?’’ என்று கேட்க, சிரித்தபடி எழுந்தார் சந்திரவர்மன்.