தமன்னா இப்போ செம ஹேப்பி!



மும்பை வீட்ல ஃபேமிலியோட தீபாவளி கொண்டாடினேன். ஆனா, பட்டாசு வெடிக்கறது எனக்கு சுத்தமா பிடிக்காது. என் அண்ணனும் நானும் சின்ன வயசிலயே பட்டாசு வெடிக்கறதை விட்டுட்டோம். பட்டாசுகளால் ஏகப்பட்ட பொல்யூஷன்... அப்புறம் ரோடு முழுக்க குப்பையாகிடுது. ஏன் இப்படி நாமே செய்யணும்னு விட்டுட்டோம். ஆனா, தீபாவளியை நிறைய விளக்குகள் ஏத்தி கொண்டாடினோம்...’’ - புன்னகையும் பூரிப்புமாகப் பேசுகிறார் தமன்னா. சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தின் இசை வெளியீட்டிற்காக சூரியன் எஃப்.எம். வந்திருந்தவரைப் பிடித்தோம்.

‘‘ ‘தேவி’ படத்தில் டான்ஸ்ல கலக்கியிருந்தீங்களே... என்ன சொன்னார் பிரபுதேவா?’’
‘‘தேங்க்ஸ். பிரபு சாருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். பிரபு சார் டான்ஸ் பத்தி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர் எனக்கு நடனக் கடவுள். ஒரு டான்ஸ் கடவுளே எனக்கு நேர்ல வந்து சொல்லிக் கொடுத்திருக்காங்க. டான்ஸைப் பொறுத்தவரை நிறைய டெக்னிக்ஸ் இருக்கும். நமக்கு சொல்லிக் கொடுத்தா கூட, சரியான ப்ராக்டீஸ் இல்லைன்னா அது வராது. ஆனா, எவ்வளவு கஷ்டமான டெக்னிக்கையும் ஈஸியா சொல்லிக் கொடுத்திடுவார் பிரபு சார். 12 வருஷத்துக்கு அப்புறம் அவர் ஹீரோவா தமிழுக்கு வந்திருக்கிறார். அவரோட படத்துல நானும் பங்களிச்சிருக்கேன். ரியலி ஹேப்பி. ‘தேவி’யில சல்மார் ஸாங் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.

எனக்கு பேய்ப் படம்னாலே கொஞ்சம் பயம்தான். ‘தேவி’ இந்தியிலும் ரிலீஸ் ஆகியிருந்ததால மும்பையில் என் ஃபேமிலியோட பார்த்தேன். படத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் வீட்ல என்னை ரொம்பவும் கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் கோபத்துல இருந்தா, ‘இப்போ நீ  ரூபியா?’னு கேட்குறாங்க. சிரிச்ச முகமா இருந்தா ‘இப்போ நீ தேவியா?’னு கேட்டு சிரிக்கறாங்க.’’

‘‘ ‘கத்தி சண்டை’யில செம மாடர்னா இருக்கீங்களே?’’
‘‘ஆமாம். சுராஜ் சாரோட ‘படிக்காதவன்’ எனக்குப் பிடிச்ச படம். அதுல வர்ற ‘ராங்கி ரங்கம்மா’ பாட்டை இப்பவும் நான் முணுமுணுப்பேன். சுராஜ் சார் என்னை கமிட் பண்ணும்போது, ‘உங்க ‘படிக்காதவன்’ல பாடல்கள் எல்லாம் செம ஹிட். இதிலும் டான்ஸுக்கு ஸ்கோப் உள்ள பாடல்கள் எனக்கு வேணும்’னு கேட்டிருந்தேன். இதிலும் பாடல்கள் ஹிட் ஆகும். ‘நான் ரொம்ப சின்ஸியர் பொண்ணு’னு சுராஜ் சார் சொல்லியிருக்கார். ‘தமிழ்ல இன்னும் சரளமா பேசணும்’னு சொல்லியிருக்கார். வடிவேலு சார் மறுபடியும் காமெடியில ரீ என்ட்ரி ஆகுறார். விஷாலுடன் நடிச்சிருக்கேன். எல்லாமே ஸ்பெஷல் இல்லையா?’’

‘‘கார்த்தியோட ‘காஷ்மோரா’ பார்த்துட்டீங்களா?’’
‘‘இன்னும் பார்க்கல. ‘தோழா’ ஷூட்டிங்கில் ஒரு நாள் அவர் மொட்டை தலையோட வந்தார். விசாரிச்சப்போ ‘காஷ்மோரா’ மொட்டை தலை கெட்டப் பத்தி சொன்னார். அந்த கெட்டப்களை பார்த்த பிறகு படம் கண்டிப்பா பார்த்தே ஆகணும்னு நினைச்சிருக்கேன். கார்த்தியோட நான் நடிச்ச ‘பையா’ மறக்க முடியாத படம். ‘அடடா மழைடா’ பாடல் சாலக்குடியில் நிஜமாகவே பெய்த மழையில் ஏழு நாட்கள் ஷூட் பண்ணினாங்க.

நான் ஃபர்ஸ்ட் டைம் ரெயின் ஸாங்ல ஆடினது இந்தப் பாடலுக்குத்தான். அதே மாதிரி ‘தர்மதுரை’யை நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. ஆனா, நான் இன்னும் படம் பார்க்கல. பகல் முழுவதும் ஷூட்டிங் இருக்கு. வொர்க் பிஸி. ஸோ, படம் பார்க்கறதா இருந்தால் நைட் டைம் தான் கிடைக்கும். நைட்ல படம் பார்க்கறது எனக்கு பிடிக்காது. நைட் படத்துக்குப் போயிட்டு, என் படத்துக்கு நானே தூங்கினா அது நல்லாயிருக்குமா? அதான் டைம் கிடைக்கறப்போ எல்லா படங்களையும் சேர்த்து வச்சு பாத்துடணும்னு முடிவு பண்ணியிருக்கேன்!’’

‘‘ ‘தோழா’ தெலுங்கு வெர்ஷன்ல நீங்களே டப்பிங் பேசியிருந்தீங்களே?’’
‘‘ஆமா. நடிக்க வந்ததிலிருந்து தெலுங்கு பேசறவங்க நிறைய பேரோட பேசிப் பேசி பழகிட்டேன். தமிழை விட தெலுங்கு கொஞ்சம் சரளமா பேச வரும். ‘ஊப்பிரி’யில் என்னோட கேரக்டருக்கு நானே பேசினா நல்லா இருக்கும்னு டைரக்டரும் சொன்னார். அதனால பேசியிருந்தேன்.’’

‘‘ஹீரோயின்கள்ல யாரெல்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸ்?’’
‘‘நிறைய பேர் இருக்காங்களே. ஸ்ருதிஹாசன், காஜல், சமந்தான்னு எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ்தான். காஜல் மும்பையில் இருக்கறதால அவங்கள அடிக்கடி சந்திக்கறதுண்டு. நாங்க சந்திச்சா, சினிமா பத்தி பேசிக்கறதில்லை. ஆனா, பொதுவான விஷயங்கள் நிறைய பேசிப்போம்!’’

‘‘இந்த வருஷம் தமிழ்ல உங்களோட படங்கள் நிறைய வந்திருக்கே?’’
‘‘ஆமா. இந்த 2016 எனக்கு டபுள் சந்தோஷம். இந்த வருஷம் தமிழ்ல எனக்கு ‘தோழா’, ‘தர்மதுரை’, ‘தேவி’, ‘கத்தி சண்டை’னு நிறைய படங்கள். இன்னொரு சந்தோஷம், எனக்குள் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்த வருஷம் இது. எப்படினு சொல்லத் தெரியல. ஆனா, ரொம்பவும் மாறியிருக்கேன். புதுசா என்னை உணர்கிறேன். புது விஷயங்கள் பண்ணணும்னு நினைக்கறேன். எனக்குள்ள தன்னம்பிக்கை நிறைய வந்திருக்கு. ஸோ, தமன்னா இப்போ செம ஹேப்பி!’’

- மை.பாரதிராஜா