நியூஸ் வே



* முன்பெல்லாம் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களிடம் ஆட்டோகிராப்தான் வாங்குவார்கள். இப்போது செல்ஃபி! அமெரிக்கப் பாடகர் டோனி வால்பெர்க் தனது ரசிகர்கள் மற்றும் குழுவுடன் இணைந்து 3 நிமிடங்களில் 122 செல்ஃபிகளை எடுத்து புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு 3 நிமிடங்களில் 119 செல்ஃபிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

* மெஹதிஹசன்... வங்க தேசக் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்திருக்கும் ‘ஸ்பின்’ புலி. இப்போது, கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். காரணம், அறிமுகத் தொடரிலேயே தனது சுழல் மேஜிக்கால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி, வரலாற்று வெற்றி பெறச் செய்தவர். இரண்டு டெஸ்ட்களில் 19 விக்கெட்டுகள் சாய்த்து, ‘மேன் ஆப் த சீரிஸ்’, ‘மேன் ஆப் த மேட்ச்’ என இரு விருதுகளை அள்ளிய மெஹதிக்கு 19 வயதுதான்!

* மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் சமீபத்தில் ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். ராகுல் காந்தி உடனே மம்தாவுக்கு போன் செய்து அக்கறையாக விசாரிக்க, இதன் விளைவாக காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் உறவில் இறுக்கம் தளர்ந்திருக்கிறது.

* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிராவோவும், கிறிஸ் கெய்லும் இந்தியாவின் ‘ஸ்கோர்’ காண்டம் பிராண்டுக்கு விளம்பரத் தூதர்களாகி இருக்கிறார்கள். ஸ்கோர் காண்டம், ‘சாம்பியன்’ என்கிற பிராண்டை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ‘சாம்பியன்’ பாடலை பிராவோ உருவாக்கியிருந்தார். அது, சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. அதே ‘சாம்பியன்’ பாடலை ஸ்கோரின் சாம்பியன் பிராண்டுக்காக கெய்லுடன் இணைந்து இந்திய ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார் பிராவோ.

* அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகத்தை அமைக்க இருக்கிறது மத்திய அரசு. சுமார் ரூ.225 கோடியில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த மியூசியம், ராமாயணக் கதைகளை ஒவ்வொரு காண்டமாக விளக்கும்படி வடிவமைக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த தினத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசு சரயூ நதிக்கரையில் ‘ராம்லீலா தீம் பார்க்’ கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. எல்லாம் அடுத்த வருடம் நடக்க இருக்கும்  தேர்தலுக்கான ஸ்டன்ட் எனப் பொங்கி எழுகின்றன எதிர்க்கட்சிகள்.

* நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் ‘ஐதராபாத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 20 சதவீதம் குறைந்திருக்கிறது’ என்கிறது ஐதராபாத் போலீஸ். இதற்குக் காரணம் ‘ஷி டீம்’ (she team) என்ற ஒரு குழுதான். இந்தக் குழுவின் முக்கிய வேலையே சாலையில் பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடித்து வழக்குப் போடுவதும், ஸ்பாட் ஃபைன் போடுவதும், பெற்றோரை அழைத்து கவுன்சிலிங் செய்வதுமாகும்.

இந்தக் குழுவில் ஒரு ஆண் அல்லது பெண் சப் இன்ஸ்பெக்டரும், ஒரு பெண் கான்ஸ்டபிளும், 3 ஆண் கான்ஸ்டபிள்களும் இருப்பார்கள். ஆனால் மஃப்டியில்தான் இருப்பார்கள். மறைவாக ஒரு கேமராவையும் வைத்திருப்பார்கள். இந்த ‘ஷி டீம்’ கான்செப்ட்டுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

* நம்ம ஊர் நீதிமன்றங்களுக்கு ஆட்டுக்குட்டி எல்லாம் பஞ்சாயத்துக்கு வரும் செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், கிளி? குவைத் நாட்டில் ஒரு விசித்திரமான வழக்குக்கு கிளியும் சாட்சி சொல்ல வந்திருக்கிறது. குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளில் சட்டப்படி பலதார மணங்கள் செய்துகொள்ளலாம். ஆனால் திருமணம் செய்யாமல் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது அங்கு மாபெரும் குற்றம்.

‘என் கணவன் வீட்டு வேலைக்காரியுடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசியிருக்கிறான்... என்னிடம்கூட இப்படி பேசாதவன் வேலைக்காரியிடம் பேசியிருப்பது இந்த கிளி மூலம்தான் எனக்குத் தெரிந்தது’ என்று மனைவி கோர்ட் வாசல் ஏறியிருக்கிறார். கணவன் கொஞ்சிப் பேசுவதுபோலவே கிளியும் வீட்டில் பேசியபோதுதான் அந்த மனைவிக்கு கணவன் மேல் சந்தேகம் வந்திருக்கிறது. ஆனால் ‘கிளி பேசுவது ஒண்ணுமே புரியவில்லை... கிளிப் பேச்சை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

* நோபல் பரிசுக்கு அடுத்து இலக்கியத்துக்கான மிகவும் உயரிய கௌரவமாக கருதப்படுகிறது ‘மேன் புக்கர் பரிசு’. 2016ம் ஆண்டுக்கான இந்தப் பரிசை  அமெரிக்க கறுப்பின எழுத்தாளரான பால் பீட்டி ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்காக வென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகரான டிக்கன்ஸில் வளரும் ஒரு கறுப்பினச் சிறுவன், தற்கால அமெரிக்க இன உறவுகள் என விரியும் இந்நாவல் பால் பீட்டியின் நான்காவது படைப்பு. இதனை முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனதாம். ஏற்கனவே, இந்நாவலுக்காக அமெரிக்காவின் விமர்சன வட்ட விருதினையும் பெற்றுள்ளார். ஒரு அமெரிக்க எழுத்தாளர் ‘மேன் புக்கர்’ வாங்குவது இதுதான் முதல்முறை!

* ஆந்திர அரசு எல்லா எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் ஐபேட் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் தனது கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்திய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘எத்தனை பேர் ஐபேட் கொண்டுவந்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார். சில கைகளே உயர்ந்தன. ‘‘எல்லோரும் வீட்டில் குழந்தைகளிடம் விளையாடக் கொடுத்துவிட்டீர்களா? உங்கள் வேலைகளை உடனுக்குடன் செய்வதற்குத்தான் அதைக் கொடுத்தேன்’’ என நாயுடு கோபிக்க, இப்போது பலரும் ஐபேடும் கையுமாக அலைகிறார்கள்.

* விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் ‘விஷ்ணுபுரம்’ விருது இந்த ஆண்டு வண்ணதாசனுக்குக் கிடைத்திருக்கிறது. நல்ல இருட்டில் வந்துகொண்டிருக்கையில், தெரு விளக்கு விழித்தால் தானே அறியாமல் கும்பிட்டுக் கொள்கிற கை மாதிரி... உள்ளுக்குள் ஒரு நிறைவு... மத்தாப்பு ஒளி! நவீன தமிழ் வாசகப் பரப்பில் எவரும் அவரைப் புறக்கணித்துவிட்டு வந்திருக்க முடியாது.

உலகத்தின் வேறு எந்த சந்தோஷத்திற்கும் இணையாகவும், அதற்கும் மேலாகவும் அன்பைக் கொண்டாடினார். தான் மிகவும் அறிந்ததையும், உணர்ந்ததையும் மட்டுமே நெகிழ்வின் ஈரம் தொட்டு எழுதினார். எந்த வம்பு தும்புக்கும் போகாமல், எவர் அணியிலும் சேராமல் சேர்த்த எழுத்து அனுபவத்திற்கு இந்த விருது பெரும் மரியாதை அளித்திருக்கிறது. வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்!

* ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, பாரதிய ஜனதாவின் சீனியர் தலைவர்களில் ஒருவர். வாஜ்பாய், அத்வானி போன்றவர்களைக்கூட எந்த நேரமும் சென்று பார்க்கும் உரிமை பெற்றவர். ஆனால் சமீபத்தில் பி.ஜே.பி தலைமை அலுவலகத்துக்கு வந்த அவரை, அரை மணி நேரம் காத்திருக்க வைத்து, அதன்பிறகு சந்தித்தார், தலைவர் அமித் ஷா. மகாராணிக்குக்கூட இந்த நிலைமையா என ஷாக் ஆகியிருக்கிறார்கள் வசுந்தரா ஆதரவாளர்கள்.

* டெல்லியில் மது அருந்தி விட்டு போதையில் பெண்களிடம் ரகளை செய்வோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இனி பொது இடத்தில் குடிப்பவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதமும், குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் 10,000 ரூபாய் அபராதம் மற்றும் சிறைத்தண்டையும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

* நியூசிலாந்து உடனான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி அப்ளாஸ் அள்ளியிருக்கிறது இந்திய கிரிக்ெகட் அணி. இதில், விசாகப்பட்டினத்தில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடிய அனைத்து இந்திய வீரர்களின் ஜெர்சியிலும் அவர்களின் பெயர் எழுதப்படவில்லை. மாறாக, அவரவர் அம்மா பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. வீரர்களின் அம்மாக்களைக் கௌரவிக்கும் விதமாக ஸ்டார் இந்தியா நிறுவனம், பி.சி.சி.ஐ உடன் இணைந்து இந்தப் புதிய சிந்தனைக்கு வித்திட்டது. ‘ஒரு வீரரின் உருவாக்கத்தில் அம்மாவின் பங்கு முக்கியமானது’ என டாஸ் போடும்போதே நெகிழ்ந்து பேசினார் கேப்டன் தோனி!