குங்குமம் டாக்கீஸ்
* ஐஸ்வர்யா ராயுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த அனுஷ்கா சர்மா, இப்போதெல்லாம் வாயைத் திறந்தால் ‘ஐஸ்’ புராணம்தான். ‘‘அவரது அழகும் பர்சனாலிட்டியும் எவரையும் மயங்கச் செய்யும். அவரை நெருங்கினாலே ஒரு மயக்கத்தில் நான் ஆழ்ந்துவிடுவேன். இப்படி ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை’’ என்கிறார் அனுஷ்கா.
 * வாரணாசியில் சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் இருவரும் ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது பக்கத்தில் இருக்கிற கோயில்களுக்குப் போய் வருகிறார்கள்.
* அஜித் படத்தின் செலவு இப்போதே கூடிவிட்டது என தயாரிப்பாளர் தரப்பில் முணுமுணுக்கிறார்கள். வெளிநாட்டுச் செலவு தாங்க முடியவில்லையாம்.
* நிறைய வேலைகள் இருந்தாலும் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் அனிருத்துக்கு ‘முடிச்சு’ போட வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள். அதற்கு அவர் உறவினர் ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார். வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணுக்கு தலை நீட்ட அனி ஒப்புக் கொண்டுவிட்டார்.
* பிரபுதேவா இரண்டு படங்களை டைரக்ட் செய்யத் தீர்மானித்துவிட்டார். அதற்கான டிஸ்கஷனில் இறங்கும் முன்பாக ஒரு வாரம் நியூயார்க் ஜாலி ட்ரிப் போயிருக்கிறார். உடன் போயிருப்பது அவரது குழந்தைகளே.
 * நடிகர் சங்கப் பிரச்னைகளை முடித்துவிட்டுத்தான் திருமணம் என்றார் விஷால். பிரச்னைகள் போகிற தினுசைப் பார்த்தால், அதற்கான முடிவு தெரியவில்லையாம்.
* சமந்தா போலவே காஜல் அகர்வாலும் ட்ரஸ்ட் ஆரம்பித்து ஏழை மக்களுக்கு உதவுகிறார். தன் பெரிய சம்பளத்தின் கணிசமான பகுதியை அதற்கு ஒதுக்கி விடுகிறார்.
* ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி2’வில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக த்ரிஷா இருக்கலாம் என்கிறார்கள்.
* அஞ்சலி-ஜெய் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கும் என்கிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு கிளாமர் வேடங்களை தவிர்த்துவிட்டு கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறார்.
* ‘‘எந்த தம்பதியையும் பார்த்து, ‘ஆஹா! எத்தனை அன்னியோன்யமாக வாழ்கிறார்கள்! இதுதானே கச்சிதமான உறவு’ என நான் நினைப்பதில்லை. இந்த உலகில் எதுவுமே நேர்த்தியானது அல்ல. வாழ்க்கை என்பது கச்சிதமற்றது. எந்த இரண்டு தம்பதிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்’’ - இது கரீனா கபூரின் ஸ்டேட்மென்ட்.
* நல்ல கதை கிடைத்தால் சிவகுமார், சூர்யா, கார்த்தி சேர்ந்து நடிக்கத் தயாராம். அப்படிப்பட்ட ஒரு கதையை சூர்யா ரொம்பவே விரும்புகிறார்.
* அஜித் போலவே விஜய்யும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. இதைத் தவிர்க்க வேண்டும் என புரடியூசர் தரப்பு அவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. ‘அவர்களின் படங்கள் பற்றி விரைந்து பரவும் விமர்சனங்களுக்கு இந்த சுமுகம் இல்லாததே காரணம்’ என்று காரணம் சொன்னார்கள்.
* மீடியாக்களின் பார்வையில் படாமல் இருந்து வரும் அமலாபால், இந்த பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். தனுஷின் படத்தை அடுத்து சுசி.கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’வில் அமலாபால் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.
* அஜய் தேவ்கன் இயக்கி நடித்துள்ள ‘ஷிவாய்’ படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார் ஹ்ருத்திக் ரோஷன். ‘‘இந்த மாதிரி ஒரு ஆக்ஷனை நான் பார்த்ததே இல்லை’’ என அஜய்யை நெகிழ்ந்து பாராட்டி யிருக்கிறார் ஹ்ருத்திக்.
* சமந்தாவுக்கு திருமணம் அடுத்த ஆண்டுதான் என்பதால், இப்போது தமிழில் விஷாலுடன் ‘இரும்புகுதிரை’யில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் இப்படத்தில் ஆர்யாவும் உள்ளார்.
* விஜய்யின் ‘பைரவா’ படத்தின் பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து பறந்து வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
* இந்த தீபாவளியில் ஜீவாவின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் செம ஹேப்பியில் இருக்கிறார். மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின் அவரது அண்ணன் தம்பிகளுடன் ஃபேமிலி கெட் டுகெதராக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்ததே காரணம்.
* கமல்ஹாசனுடன் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கௌதமி, தனது பிரிவை அறிவித்தது இந்த வார பரபரப்பு. இதற்கு 3 நாட்களுக்கு முன்புதான், தனது அறக்கட்டளை தொடர்பாக பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவையும் சந்தித்து விட்டு வந்திருந்தார் கௌதமி. https://gautamitadimalla.wordpress.com என்ற தனது ‘பிளாக்’கில் இந்தப் பிரிவை அறிவித்த கௌதமி, இதற்கு 15 நாட்களுக்கு முன்புதான் பிளாக்கை துவக்கியிருந்தார். ஒருவேளை துவக்கியதே இதற்காகத்தானோ!
* ரஜினி அமெரிக்கா போனதும் சடசடவென உடல் சம்பந்தமான பரிசோதனைகளை முடித்துவிட்டார். ரிசல்ட் கிடைப்பதற்குள் இங்கே திரும்பிவிட்டார். உடல்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதால் மகிழ்ந்து தீபாவளி கொண்டாடினார்.
|