துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் சூரியனும் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள்
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஆன்மிக அதிகார கிரகமான சூரியனோடு காதல் கிரகம் சுக்கிரன் இணையும் இந்த அமைப்பு, எவரையும் போகத்திலிருந்து யோகத்திற்குக் கொண்டு செல்லும். சுக்கிரன் தரும் சுகங்களை எல்லாம் தடுத்து, நிலையாமையை உணரச் செய்யும் சேர்க்கையே இது. எந்த விஷயத்திலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்கிற விவேகத்தைக் கொடுக்கக் கூடிய கூட்டணி இது. எதிலுமே எல்லை தாண்டாமல் வைத்துக் கொண்டிருக்கும்.
 எனவே, எதுவுமே சுலபமாக வந்தால் இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்வார்கள். இரண்டு நாட்கள் சுவையாக சாப்பிட்டால், மூன்றாம் நாள் வயிற்றைக் காய வைத்துக்கொள்வார்கள். சூரியனும் சுக்கிரனும் இணையும்போது பிரபலமான யோகத்தை அளிக்கும். ஆனால், சூரியனுடைய வெளிச்சுற்றுக்கு அருகே சுக்கிரன் இல்லாமல் 26 டிகிரிக்கு அப்பால் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மிகச் சிறந்த பலன்களை அளித்துவிடும்.
இல்லையெனில் அஸ்தங்கமும், கிரக யுத்தமும் ஏற்படும். மலர்ந்தும் மலராத மலரில் தேங்கிக் கிடக்கும் தேனைப் போல உலக சுகங்கள் இவர்களைச் சுற்றியிருக்கும். ஆனால், அவற்றை அனுபவிப்பதில் தயக்கம் இருக்கும். சுக்கிரன் சூரியனோடு சேர்வதால் தளர்வாகத்தான் செயல்படுவார். நாமே தவறு செய்தால் சமூகம் என்ன நினைக்கும் என்று சிந்திப்பார்கள். அதனாலேயே தனியாக கேளிக்கைகளை அனுபவிப்பார்கள். அற்ப ஆசைகளைக் கூட வெளிக்காட்ட மாட்டார்கள்.
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராசியில் சுக்கிரனும் சூரியனும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது நாம் துலாம் லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா?
துலாம் லக்னத்தில் - அதாவது ஜாதகத்தில் ஒன்றாம் இடத்திலேயே சூரியனோடு சுக்கிரன் சேர்க்கை பெறுவதென்பது வித்தியாசமான அமைப்பாகும். இங்கு சூரியன் நீசமாகிறார். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போலவும், எப்போதும் எதையோ இழந்ததைப் போலவும் இருப்பார்கள். எல்லா விஷயத்திற்கும் தயங்கியபடி இருப்பார்கள். தலைவனாவதற்குரிய சகல லட்சணங்களோடு இருந்தாலும், இவர்களின் இந்த தயக்கமும், சுணக்கமும், சோம்பலும் தடையை ஏற்படுத்தும். மருத்துவத்துறையில் ஈடுபட்டு சாதிப்பார்கள். இவர்கள் தாயின் சாயலைப் பெற்றிருப்பார்கள்.
இவர்களுக்கு தெற்றுப்பல், சிங்கப்பல் இருக்கும். விருச்சிக ராசியான இரண்டாம் இடம் இவர்களுக்கு வாக்கு ஸ்தானமாக வருகிறது. இங்கு இவர்கள் இருவரும் நின்றால் பேச்சில் சுள்ளென்று காரம் கொப்பளிக்கும். ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டு’ என்றிருப்பார்கள். மிகச்சிறந்த நிர்வாகியாக விளங்குவார்கள். ஆரம்பக் கல்வியில் தடுமாறினாலும் உயர் கல்வியில் வெளுத்து வாங்குவார்கள். இவர்கள் பல் மருத்துவத்தில் பெரிதாக சாதிப்பார்கள். இவர்களால் சேமித்து வைக்க முடியாது.
ஒருவேளை சேமித்தாலும் உடனே செலவு செய்து விடுவார்கள். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனுசு ராசியான மூன்றாம் இடத்தில் சூரியனும் சுக்கிரனும் சேரும்போது ஆறு விரல், தலையில் இரட்டைச் சுழி, குடமிளகாய் மூக்கு என்று முகத்தோற்றம் சிலருக்குக் காணப்படும். இவர்கள் பற்களில் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். நிறைய நண்பர்கள் உண்டு. இவர்களுக்கு எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
இளைய சகோதர, சகோதரிகள் தங்களைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதாக ஒரு ஆதங்கம் எப்போதும் இருக்கும். மிகச் சிறந்த விமர்சகராக இருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் இவர்களின் கோணமே வித்தியாசமாக இருக்கும். தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். அதேசமயம் தான் பிடித்த முயலுக்கு மூணு கால்தான் என்கிற பிடிவாதமும் இருக்கும்.
நான்காம் இடமான மகர ராசியில் இந்த இரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் - அதுவும் சனியின் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு ஏதேனும் உடம்பு படுத்தியபடி இருக்கும். தாய்வழி உறவினர்களால் ஏதேனும் பிரச்னை வந்தபடி இருக்கும். இவர்கள் மிகச் சிறந்த தர்க்கவாதியாக இருப்பார்கள். வழக்கறிஞராகவும் உயர்வார்கள். இதய நோய் சிறப்பு மருத்துவராகவும் வருவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பரம்பரைச் சொத்துள்ளவர்களாக இருப்பார்கள்.
அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகவோ, ஆளும் பிரமுகர்களின் நிழலாகவோ இருப்பார்கள். ஐந்தாம் இடமான கும்ப ராசியில் இவ்விரு கிரகங்களும் இருந்தால் தீராத மனக் குழப்பங்கள் இருந்தபடி இருக்கும். கொஞ்சம் தாமதப்பட்டு வாரிசு உருவாகும். இவர்களைப் பற்றிப் பேசும் சிறு சொல்லையும் தாங்காத குணத்தை கைக்கொண்டிருப்பார்கள். அதுபோல தன்னைப் பற்றிய மிகையான கற்பனைகளையும் வளர்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த ஒரு விஷயமே மிதமிஞ்சிய எழுத்தாற்றலையும், கலைத் திறனையும் கொடுக்கும். பழைய பண்பாடுகளை நவீன உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்வார்கள்.
ஆறாம் இடமான மீன ராசியில் சுக்கிரன் உச்சமாகிறார். கூடவே சூரியனும் இருப்பதால் சொத்து சுகங்கள் இருந்தாலும் அதை அனுபவிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு முயன்றபடி இருப்பார்கள். அதேசமயம் இவர்கள் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் குருட்டுத் தைரியத்தில் கடனை வாங்கியபடி இருப்பார்கள். சுக்கிரன் உச்சமாவதால் பணவரவு வந்தபடி இருக்கும். ஆனால், அதை சரியான முறையில் சேமிக்கத் தெரியாமல் இழந்து விடுவார்கள்.
சிறு வயதில் பாட்டி, தாத்தாவிடம் வளர்வார்கள். இவர்கள் திருமணத்தைத் தள்ளிப்போடாமல் இருப்பது நல்லது. முகத்தில் ஏதேனும் வடு இருக்கும். எந்த நோயையுமே முற்ற விடாமல் அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும். ஏழாம் இடமான மேஷத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருப்பது நல்ல விஷயமாகும். இது வாழ்க்கைத் துணைவர் பற்றி கூறும் இடமாக வருகிறது. சம வயதுள்ள, ஆளுமை நிறைந்த வாழ்க்கைத்துணை அமைவார். வறுமையே கூடாது என்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இல்லையெனில் இருக்கும் ஊரிலேயே பெரும் பணக்காரர் ஆவதற்கு முயற்சிப்பார்கள். கிராமியமும், நகரச் சூழலும் கலந்த வாழ்க்கையே மிகவும் பிடிக்கும். ரிஷபம் எட்டாம் இடமாக வருகிறது. இங்கு சூரியனும் சுக்கிரனும் மறைகிறார்கள். இவர்கள் பூர்வீகத்தை விட்டு வெளியேறுவது நல்லது. மத்திம வயதுக்குப் பின்னர், எல்லா சொத்தையும் மீட்டெடுப்பார்கள். மூச்சுப் பிரச்னை, இதய வலி இருப்பின் உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மிதமிஞ்சிய படைப்பாற்றலோடு விளங்குவார்கள்.
இவர்கள் எல்லோரிடமும் கடன் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். இதனால் சில சமயம் இவர்களைக் கண்டாலே மற்றவர்கள் பயந்து ஓடுவார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத சூழல் வரும்; அல்லது மறதியினால் கெட்ட பெயரும், நம்பிக்கையின்மையும் இருக்கும். ஒன்பதாம் இடமான மிதுன ராசியில் இவர்கள் இருவரும் சேர்க்கை பெற்று அமரும்போது தந்தையாரின் தொழிலை இவர்கள் ஏற்று நடத்துவார்கள். சிலசமயம் பாரம்பரியமாகச் செய்து வந்த தொழிலையே நவீனப்படுத்துவார்கள்.
தந்தைவழி சொந்தங்களை தேடிப் பிடித்து உதவி செய்வார்கள். மரபும் பண்பாடும் இரு கண்களாக நினைத்து போஷிப்பார்கள். முன்னோர்களின் கனவுகளை இவர்கள் நிறைவேற்றுவார்கள். அதாவது அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டார்களோ அதை நிறைவேற்ற முயற்சிப்பார்கள். பத்தாம் இடமான கடகத்தில் இந்த இரு கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது அனுபவமில்லாமல் எதிலேயுமே இறங்கக் கூடாது. யாரை நம்பியும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடக் கூடாது.
பத்து ரூபாயை வைத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு திட்டம் போடக் கூடாது. ஒரே நாளில் கோடீஸ்வரனாகும் ஆசையை நம்பி களம் இறங்கக் கூடாது. அதனால் இவர்கள் எந்த வேலையில் இறங்கினாலும் நின்று நிதானமாகத்தான் செல்ல வேண்டும். அனுபவத்தையே முதலீடாகக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை விட நிபுணர்களைக் கலந்து ஆலோசனை செய்து காரியத்தைச் செய்ய வேண்டும். மூன்றாம் நபரின் ஆலோசனைக்கும் காதுகொடுக்க வேண்டும். கண், பல் மருத்துவர், கடல்சார் பணி, விண்வெளி ஆராய்ச்சிக் கூடம், அரசு உத்யோகம் என்று சில துறைகளில் சாதிப்பார்கள். பதினோராம் இடமான சிம்மத்தில் சூரியனும், சுக்கிரனும் அமர்ந்தால் மூத்த சகோதரர்களை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். மறைமுகமாக அரசாங்கத்தின் உதவி கிடைக்கும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றுவார்கள். மத்திம வயதிற்குப் பிறகே இவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவார்கள்.
கன்னியில் பன்னிரெண்டாம் இடமாக சுக்கிரனும், சூரியனும் அமர்கிறார்கள். இவர்கள் தர்ம ஸ்தாபனங்கள் அமைத்து உதவி செய்வார்கள். அம்மன் வழிபாட்டில் முழுமூச்சாக ஈடுபடுவார்கள். பாதி வாழ்க்கை போகம், மீதி பாதி யோகம் என்று கழிப்பார்கள். பல பேரால் ஏமாற்றப்பட்டுத்தான் இவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள். யாரேனும் இவர்மீது ஏதேனும் வீண்பழியை சுமத்தியபடி இருப்பார்கள். அப்படியிருந்தால் தர்ம ஸ்தாபனங்கள் அமைத்து நிறைய மக்களுக்கு உதவி செய்யும் அமைப்பு உருவாகும்.
ஆரம்பத்தில் மானுட சேவையே பெரிதென்று பேசுவார்கள். பின் வயதில்தான் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு காட்டுவார்கள். ஜாதகத்தில் சுக்கிரனும் சூரியனும் இவ்வாறு சேர்ந்திருக்கும்போது, அவை நின்ற ராசிக் கட்டங்களுக்குத் தகுந்தவாறு பலன்கள் வேறுபடும். சிலசமயம் நேர்மறைக் கதிர்வீச்சைக் கொடுத்து தூக்கி விடுவார்கள்; சில இடங்களில் எதிர்மறை கதிர்வீச்சுக்கும் ஜாதகர் ஆளாக வேண்டியிருக்கும்.
ஆனால், துலாம் ராசியில் சூரியன் நீசமாவதால் இந்த லக்னத்தில் இந்த அமைப்பைப் பெற்றவர்கள் சுக்கிரனை வலிமைப்படுத்துவதை விட சூரியனை வலுப்படுத்துவதே முக்கியமாகும். எனவே, சூரியன் வழிபட்டு தன் பலத்தை பெருக்கிக் கொண்ட தலங்களுக்குச் சென்று வருதலே சரியான விஷயமாகும். அப்படிப்பட்ட ஒரு தலமே, ஞாயிறு ஆகும். சூரியன் இத்தல ஈசனான புஷ்பரதேஸ்வரரையும், சொர்ணாம்பிகையையும் வழிபட்டு பலம் பெற்றார். எனவே, நீங்களும் இத்தலத்தைத் தரிசித்து வாருங்கள். சென்னை கோயம்பேட்டிலிருந்து செங்குன்றம் சென்று அங்கிருந்து 13 கி.மீ. சென்றால் ஞாயிறு தலத்தை அடையலாம்.
(கிரகங்கள் சுழலும்...)
ஓவியம்: மணியம் செல்வன்
|