பிரதமர் பெயர் வைத்த குழந்தை!



நாட்டில் அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்கு அடுத்தபடியாக அதிக நேரம் செலவிடுவது, குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில்தான்! குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரியாமல் பெயர் வைத்து, ‘‘முருகேசின்னு வச்சிக்கோ’’ என சமாளிக்கும் கவுண்டமணிகளும் அவர்களுக்குள் இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஒரு குழந்தைக்குப் பெயர் வைத்த விதம், ரொம்பவே புதுமை!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள நயாபுரா ஹாசிபூர் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் பாரத் சிங் - விபா தம்பதி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ‘பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பிரசார இயக்கம்’ நடத்தும் பிரதமர் மோடியின் செயலில் கவரப்பட்ட விபா, தனது குழந்தைக்கு மோடி பெயர் சூட்ட வேண்டும் என ஆசைப்பட்டார். இதைக் கணவரிடம் சொல்லிவிட்டு, ஒரு கடிதம் எழுதித் தர, அதை பிரதமர் மோடிக்கு ஸ்பீடு போஸ்ட்டில் அவர் அனுப்பி வைத்தார்.

சரியாக ஏழாவது நாள்... பாரத் சிங்கின் செல்போனுக்கு ஒரு அழைப்பு. ‘‘பிரதமர் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். இப்போது பிரதமர் பேசுவார்’’ என்றனர். சில நொடிகளில் மோடி போனில் பேசினார்... ‘‘ஹலோ! நான் மோடி பேசுகிறேன். உங்கள் மனைவி விபா சிங் எழுதிய கடிதம் கிடைத்தது. உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துகள். குழந்தைக்கு ‘வைபவி’ என பெயர் வையுங்கள். உங்கள் இருவரின் பெயரும் இணைந்த பெயராக அது இருக்கும்’’ எனச் சொன்னார்.

எல்லாமே கனவு போல இரண்டே நிமிடங்களில் முடிந்துவிட, ஒரு கணம் திகைத்துவிட்டார் பாரத் சிங். உடனே ஊருக்குள் உறவுகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லி பரவசப்பட, ‘‘ஆமாம்... பிரதமரு... இவருக்கு போன் செய்தாரு... குழந்தைக்கு பேரு வச்சாரு!’’ என கிண்டல் செய்தார்கள் பலரும். ஊருக்குள் இது பெரிய கேலியாக மாறிவிட, எல்லோரும் பாரத் சிங் தம்பதியின் முதுகுக்குப் பின்னால் சிரித்தார்கள். நொந்து போய்விட்டார்கள் அவர்கள்.

பிரதமர் அலுவலகத்தில் கடிதங்களைப் பிரித்து நடவடிக்கை எடுக்க 12 அதிகாரிகள் குழு உள்ளது. எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை உடனே ஃபாலோ செய்வதும் இவர்களின் வேலை. அப்படி இரண்டு நாள் கழித்து ஒரு அதிகாரி பாரத் சிங்குக்கு போன் செய்து கேட்க, மனிதர் ஊரில் நடந்ததையெல்லாம் சொல்லிப் புலம்பிவிட்டார். ‘‘ஒரு லெட்டர் வந்தால்தான் ஊரில் நம்புவார்கள்’’ என அவர் சொல்ல, விஷயம் மோடி கவனத்துக்குப் போய், ‘உங்கள் மகள் வைபவிக்கு வாழ்த்துகள். அவளே இனி உங்கள் ஆதார சக்தி’ என மோடி கடிதம் அனுப்பியிருக்கிறார். இப்போது இந்தக் குடும்பம் வானில் பறக்கிறது!

- அகஸ்டஸ்