கொடி விமர்சனம்



‘பவருக்கு’ வருவதற்காக எதையும் செய்யும் பாலிடிக்ஸ் விளையாட்டே ‘கொடி’. அரசியல்வாதி ஆகவேண்டும் என கனவு காணும் கருணாஸ் வாய் பேச முடியாதவர். அவருக்கு இரட்டைக் குழந்தைகளாக தனுஷ்கள். ஒரு போராட்டத்தில் தலைவருக்காக கருணாஸ் தீக்குளிக்க, தலைவரால் ‘கொடி’ எனப் பெயர் சூட்டப்பட்ட ஒரு மகன் அரசியலிலும், இன்னொரு மகன் கல்வியிலும் கால் வைக்கிறார்கள். அப்பாவைப் போலவே மகன் ‘கொடி’யையும் அரசியல் பழி வாங்க, இன்னொரு மகன் அன்பு எப்படி அரசியலை நோக்கி வருகிறார், வளர்கிறார் என்பதே ‘கொடி’.

யதார்த்தம், கமர்ஷியல் இரண்டிலும் சரிவிகிதக் கலவையாக அசத்துகிறார் தனுஷ். இரட்டை வேஷங்கள் என்றாலே விதவிதமாக வித்தியாசம் காட்டுபவர்கள் மத்தியில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அசரடிக்கிறார். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பார்த்த ‘புதுப்பேட்டை’ தனுஷ், அதே எனர்ஜியில் துளியும் குறையாமல் இருக்கிறார். த்ரிஷாவின் கையில் உள்ள கத்தியைப் பிடுங்கி கைரேகைத் தடம் அழிக்கும் பெருந்தன்மையில் தனுஷ் நடிப்பு உருக்கம்... உச்சம்.

வருடம் ஆக ஆக வயது குறைகிற வரம் வாங்கி வந்தீங்களா த்ரிஷா? ஸ்லிம் உடல்வாகும், செம ஃபிட் காஸ்ட்யூமும் பக்கா அரசியல்வாதி ஆக்கி இருக்கிறது. அரசியலுக்காக அவர் செய்யும் சதுரங்க நகர்த்தல்கள் நச். இன்னொரு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நல்ல தேர்வு. முட்டை வியாபாரி பாத்திரத்தில் பொரிந்து தள்ளும் வம்பு தும்பு வாயாடிப் பொண்ணு. இன்னும் கொஞ்ச நேரம் வந்திருந்தால் த்ரிஷாவைத் தோற்கடித்து இருப்பார்.

ஆயிரம் படங்களில் அம்மாவாக நடித்தாலும் சரண்யா வித்தியாசம் காட்டி விளையாடுவார் என்பதற்கு ‘கொடி’ நல்ல சாட்சி. பத்து வருடங்களுக்குப் பிறகு தனுஷ் ‘‘அம்மா’’ என அழைக்கும்போது கை பதறும் காட்சியே ஒரு சோற்றுப் பதம். சரண்யாவிடம் தோசைக்கு அல்லாடும் காளி வெங்கட் வெறுந்தட்டைப் பார்த்து ‘சில்வர் தட்டை செரிக்கிற அளவுக்கு ஜீரண சக்தி இல்லை’ என்கிறபோது தெறிக்கிறது தியேட்டர். படத்தின் ஆரம்பத்தை கருணாஸும், இறுதியை காளி வெங்கட்டும் உருக்கப்படுத்தி இருக்கிறார்கள். எஸ்.ஏ.சியை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

அறிமுக ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ் கேமரா நாலாபுறமும் சுழன்றடிக்கிறது. பொள்ளாச்சி வயற்காடுகளையும், காற்றாலை விசிறிகளையும் காட்டும் ஹெலிகேம் ஷாட்ஸ்... அடடா, அமர்க்களம். பாடல்களில் ஹிட் ஃபார்முலா பிடித்திருக்கும் சந்தோஷ் நாராயணன், பி.ஜி.எம்.மில் நாடி நரம்புகளை சாமியாட வைக்கிறார். பாதரசக் கழிவுகளால் மக்கள் பாதிக்கப்படும் அவலம், இன்ஸ்பெக்டர் சாவுக்கு போலியாக கடிதம் எழுதி ஹீரோ மீது பழி போடும் சதி, அரசியல் திருப்பம் என நீளும் காட்சிகளில் மீத்தேன் அபாயத்தை அரசியல் கலந்து சொன்ன ‘கத்துக்குட்டி’ படத்தின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை.

அதே மாதிரி இடைவேளைத் தருணங்கள் வேறு சில படங்களை நினைவுபடுத்துகின்றன. நிகழ்கால அரசியலை உற்றுக் கவனித்திருக்கும் இயக்குநர் துரை செந்தில்குமார், அரசியல் நிகழ்வுகள் எங்கே, எப்படி நடக்கும் என்பதை ஊறித் தேறிக் கற்றிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் எந்நேரமும் தென்னந்தோப்புக்குள்ளேயே இருந்து திட்டம் போடுவதெல்லாம், ம்ஹும்... செல்லாது, செல்லாது. முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களின் சூழல் அறிந்து காட்சிகளை உருவாக்கி இருந்தால் நேர்த்தி குறைந்திருக்காது. தனுஷ் என்கிற ஒற்றைக் கம்பம் ஸ்ட்ராங்காக தாங்கிப் பிடிப்பதால், உயரே பறக்கிறது கொடி.

- குங்குமம் விமர்சனக்குழு