காஷ்மோரா விமர்சனம்
பேயோட்டி பித்தலாட்டம் செய்து குடும்பத்தோடு பிழைக்கும் காஷ்மோரா, நூற்றாண்டு கண்ட பேய் உலகத்தில் சிக்கித் தவிப்பதே ‘காஷ்மோரா’. மக்களின் பயத்தையும், அறியாமையையும், பலவீனத்தையும் வைத்து பிழைக்கிறார் கார்த்தி. அவர் கண்கட்டு வித்தைகள் செய்வதைப் பார்த்து மக்களும் நம்ப, அவரது ‘வியாபாரம்’ அமோகமாக நடக்கிறது. உச்சத்தில் இருக்கிற அமைச்சர் வரைக்கும் இந்த போலி சித்துவித்தைக்காரரின் செல்வாக்கு போக, கார்த்தியின் காட்டில் அடைமழை.
 தன்னிடம் இருக்கிற கருப்புப் பணத்தை கார்த்தியிடம் கொடுத்து வைக்கிற அளவுக்கு நம்பிக்கை பெருக, மொத்தமாகத் தப்பித்து வெளிநாடுகளுக்குப் புறப்படப் பார்க்கிறது கார்த்தி & கோ. அதற்குள்ளாக 700 வருட பேயிடம் சிக்கிக்கொள்ள, சிறைப்படுகிறார்கள். அவர்கள் மீண்டு வந்தார்களா, அந்த பாழடைந்த அரண்மனையில் அவர்கள் கண்டது என்ன என்பதே மீதிக்கதை.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கோகுல் இந்தத் தடவை காமெடியுடன் அதிரடி ஹாரரில் கலந்து கால் வைத்திருக்கிறார். பிரமாண்ட அரண்மனையும், போர்க்களக் காட்சிகளும் பின்னுகிற வகையில் கோகுலுக்கு இது புதுசு. அந்த வகையில் பிளாக் மேஜிக், பிரமாண்டம் என தமிழ் சினிமா வெளிச்சம் படாத பக்கங்களைப் பிடித்து பரபர, விறுவிறு ஆக்ஷனாக்கியிருக்கிறார் கோகுல். மொத்தப்படத்தின் கனத்தையும் சிலுவையாய் தாங்குகிறார் கார்த்தி.
மனிதர் வளைந்து, நெளிந்து ஃ பிராடுத்தனங்கள் செய்யும்போது தியேட்டர் அலறுகிறது. அடுத்தடுத்து ஆரவாரிப்பு அடங்காமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறார். பில்லி, சூனியம் பற்றியெல்லாம் விவாதிக்க டி.வி ஷோவிற்கே வருகை தருவதும், மரண பீதியில் அங்கே இருக்கிறவர்களை மிரட்டுவதுமாக மனிதர் செய்வதெல்லாம் அதிரி புதிரி அட்டகாசம். இடைவெளிக்குப் பிறகு ராஜ்நாயக் ஆக அவர் மறுபிறவி எடுப்பது அச்சு அசல் மிரட்டல். பருத்தி வீரனுக்குப் பிறகு இதுவே பெரும் பாய்ச்சல். உடல் மொழியிலும் புதுமொழி காட்டுகிறார்.
நயன்தாராதான் ஹீரோயின் என பகிரப்பட்டாலும், இடைவேளைக்குப் பிறகுதான் அழகு அழகாய் வெளிப்படுகிறார். முகத்தில் மட்டும் ஏன் களைப்பு? நாலு நாள் கால்ஷீட் ெகாடுத்திருப்பார் ேபால... அவ்வளவுதான் வருகிறார். நயன்தாரா சரி, ஸ்ரீதிவ்யாவிற்கு என்னவாயிற்று! ‘பளீர்’ முகம் சற்றே வற்றிப் போக பாதி வரைக்கும் வந்தும் நிறைவில்லை. எல்லா வேலைகளையும் கார்த்தியே சிரமேற்கொள்வதால் அவர்கள் ஃபில்லர்களாகவே படுகிறார்கள். பெரும் அரண்மனையில், மிடுக்கில் கார்த்தி நடப்பதெல்லாம் கம்பீரம்!
கார்த்தியின் அப்பாவாக சரியான பக்க வாத்தியம் வாசிக்கிறார் விவேக். ஏமாறும் மனிதர்களை கேலியும் கிண்டலும் ரகளையுமாய் நக்கல் அடிக்கும்போது தியேட்டர்களில் சிரிப்பு சரவெடி. ‘திக்கு திக்கு சார்’, ‘ஓயா, ஓயா’ என ஈர்க்கும் சந்தோஷ் நாராயணன் பின்னணியிலும் தோள் கொடுக்கிறார். ஓம் பிரகாஷ் கேமரா மோதலும் அனலும், பிரமாண்டமும் கலந்த காக்டெய்ல். அன்பறிவ் ஆக்ஷன் வேகத்தில் விரட்டி மிரட்டுகிறது. ராஜீவன் கலை இயக்குநராக உச்சம் போகிறார்.
இடைவெளிக்குப் பிறகான காட்சிகள் நீளத்தில் சோர்வடைய வைக்கிறதே, ஏன்? முன்பாதி வேகத்தைப் பின்பகுதியில் தவறவிட்டது ஏன்? இவ்வளவு சீக்கிரத்தில் ராஜ்நாயக் கார்த்தியை நயன்தாரா கொல்ல முடியுமா? பட்டவர்த்தனமாய் ஓட்டை விழுகிற இடங்களை கார்த்தி ஆவேசமாய் தாண்டிப் போவதால் படம் பல இடங்களில் பிழைக்கிறது. கார்த்தியின் படுமெச்சூர் நடிப்புக்கே ‘காஷ்மோரா’ கலகலக்கிறது.
- குங்குமம் விமர்சனக்குழு
|