குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
(டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை-600078. விலை: ரூ.330/-. தொடர்புக்கு: 87545 07070)

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. கவிதை அதன் சிந்தனையின், அனுபவத்தின் ஆழத்தையே பலமாகக் கொண்டிருக்க வேண்டும். எதையும் பிரசாரம் செய்கிற மனோபாவம் கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக நீதி போதனை அறவே கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். இதில் பிரான்சிஸ் பிரமாண்டமாகத் தனித்துத் தெரிகிறார். அவரது கவிதைகள் முழுமையான பயிற்சியால் காணக் கிடைப்பவை. அனுபவ உலகத்தை புறம், அகம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானது அல்ல.

சமுத்திரமும், நிலமும் சந்திக்கும் கரை போன்றது அது. தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக் கவிதைகள்; ஒரே, நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். அவரது மொழி ஆரவாரமற்றது. வெளிப்பாட்டுக்குத் தகுந்த அளவு கைக் கொள்ளப்படுவது. அனுபவம், வெளிப்பாடு இரண்டும் தீவிரமடைகிறபோது மொழியும் தீவிரமடைகிறது. கிருபாவின் கவிதைகள் அவ்வண்ணமே.

சிற்றிதழ் Talk

இயற்கை மீது தொடுக்கப்படும் தாக்குதலை அதுவே அதன் அளப்பரிய ஆற்றலால் சரி செய்துகொள்ளும். எனவே, உலகம் ஒன்றும் அழிந்துவிடாது. மக்கள் கூட்டம்தான் இந்த உலகை விட்டு அகற்றப்படும். டயனோசர்கள் அகற்றப்பட்டது போல மாந்தரினமும் இதே பாதையில் தொடர்ந்தால் அகற்றப்படும்.
- பாமயன் (‘ஓலைச்சுவடி’ இதழில்)


நிகழ்ச்சி மகிழ்ச்சி

‘‘பிறந்த நாளைக் கொண்டாடுவதில் எனக்கு விருப்பமே இல்லை. மகன்கள் சூர்யாவும், கார்த்தியும்தான் என் ஓவியங்களை கண்காட்சியாகவும் விழாவாகவும் எடுத்துள்ளனர். படைப்பாளனை விட படைப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், படைப்புகள்தான் காலம் கடந்து நிற்கும்’’ - தனது பிறந்த நாள் விழாவில் நடிகர் சிவகுமார் சொன்னது இது.

சிவகுமாரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஓவியங்களின் கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த விழாவில் ‘Paintings Of SivaKumar’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சூர்யா முன்னிலையில் தமிழருவி மணியன் அதை வெளியிட்டார்.

இயக்குநர்கள் லிங்குசாமி, ராஜீவ் மேனன், வசந்த், கவிஞர் அறிவுமதி, நல்லகண்ணு, பிரபஞ்சன் என பலரும் கலந்துகொண்டு சிவகுமாரை வாழ்த்தினார்கள். ‘‘அப்பாவிற்கு எப்போதும் பிறந்த நாளைக் கொண்டாடுவது பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் பழநி முருகனை தரிசிக்கச் சென்றுவிட்டார். இது அவருக்கு மிகச் சிறப்பான பிறந்த நாள். அதனாலேயே இந்த ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்தோம்’’ என நெகிழ்ந்து சொன்னார் சூர்யா.

டெக் டிக்!

இளசுகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகின்றன ஸ்மார்ட் வாட்ச்கள். சமீபத்தில் புதிதாக ‘டூயல் சிம் ஸ்மார்ட் வாட்ச்’கள் சந்தைக்கு வந்துள்ளன.  செல்போனில் என்ன வசதிகள் இருக்குமோ, அவை அனைத்தும் இதில் உண்டு.  தொடு திரை வசதியுடன், மியூசிக் பிளேயர், தரமான கேமரா என ஸ்டைலான வடிவத்தில் கிடைக்கிறது இந்த வாட்ச். 4 முதல் 8 மணி நேரம் வரை பேட்டரி நிற்கும். கூடுதலாக 8 ஜி.பி வரை மெமரி கார்டு  வசதியும் உள்ளது. இதன் விலை ரூ.2000 முதல் ரூ.15000 வரை.

யூ டியூப் லைட்

மும்பையில் சொந்த ஃப்ளாட் இருந்தாலும் சென்னையும் ஸ்ருதி ஹாசனுக்கு இஷ்டம்தான். தீபாவளிக்கு முன்னதாக ஸ்ருதிக்கு ஷூட்டிங்கில் சின்ன பிரேக் கிடைக்க, உடனே சென்னை பறந்து வந்துவிட்டார். இந்த தீபாவளியை பட்டாசு வெடித்து அப்பா கமலுடன் ஆசையாய்க் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். ஜொலிக்கும் ஃபெஸ்டிவல் புது டிரஸ்ஸோடு கைகளில் கம்பி மத்தாப்பு கொளுத்தி மகிழும் ஸ்ருதி, அந்த பிரைட் ஃபுல் கொண்டாட்டத்தை குட்டியூண்டு வீடியோவாக ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார்.

அப்புறமென்ன... 5 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள், 978 ஷேர்கள், 1271 கமெண்ட்கள் என ஸ்ருதியை அசத்தி விட்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ‘‘டேக் கேர் ஸ்வீட் ஹார்ட்! உங்க டிரஸ் எளிதில் தீப்பற்றக் கூடியது. எனவே, பட்டாசு வெடிக்கும்போது வேறு ஆடையைப் பயன்படுத்துங்க’’ என அக்கறை அட்வைஸ்களும் குவிந்துள்ளன.

சர்வே

நாளுக்கு நாள் காடுகளும், அதில் வாழ்கின்ற உயிரினங்களும் அழிந்து வருவது அதிகரித்திருக்கிறது. கடந்த 40 வருடங்களில், சுமார் 60 சதவிகித அரிய வகை காட்டுயிர்கள் இருந்த இடமே தெரியாமல் அழிந்து போய்விட்டன என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. காடுகளை அழிப்பதுதான் இதற்கு முதன்மை காரணமாகச் சொல்லப்படுகிறது. அதோடு நீர்நிலைகள் காணாமல் போவதும், மாசுபடுவதும் வறண்டுபோவதும் தொடர்வதால், நன்னீர் வாழ் உயிரினங்கள் பெரிதும் அழிந்துவிட்டன.

பெரிய பெரிய கப்பல்களை வைத்து கடலின் அடி ஆழம் வரை சுரண்டுவதால், மீன்களும் அழிகின்றன. மனிதனின் பசிக்கு சுறாக்கள்கூட தப்பிக்கவில்லை என்பதே வேதனை. ‘இதுவரை பூமி ஐந்து முறை அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் மனித இனம் இல்லை. இப்போது ஆறாவது பேரழிவை நோக்கி உலகம் போகிறதோ என்ற சந்தேகத்தை உயிரினங்களின் அழிவு ஏற்படுத்துகிறது’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.