அடுத்த அமெரிக்க அதிபர் யார்?
‘இது ஒரு பெண்ணுக்கும் பெண் பித்தருக்குமான போட்டி’ என வர்ணிக்கிறார்கள் ஹிலாரி கிளின்டன் ஆதரவாளர்கள். ‘அமெரிக்கா உலக அரங்கில் இழந்த பெருமையை மீட்பதற்கான கடைசி வாய்ப்பு இது’ என்கிறார்கள் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள். ‘இது மோசமானவருக்கும் மிக மோசமானவருக்குமான போட்டி’ என்கிறார் இரான் நாட்டு அதிபர் ரவுஹானி. க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல்.
 இன்றைய தேதியில் உலகின் ஒரே வல்லரசு நாட்டுக்கு அதிபர் ஆவது என்பது, கிட்டத்தட்ட உலகத்தின் சக்கரவர்த்தி ஆவது போன்ற விஷயம். இந்த பூமியின் மிகச் சக்தி வாய்ந்த மனிதராக யார் ஆகப்போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆனால் இந்தத் தேர்தல்தான் அமெரிக்காவின் அசிங்க முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
‘அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பினத்தவரோ, ஒரு பெண்ணோ ஒருநாளும் பதவியில் அமர முடியாது’ என்ற நம்பிக்கை அங்கு நூற்றாண்டுகள் தாண்டி உண்டு. 8 ஆண்டுகளுக்கு முன்பு பராக் ஒபாமா இதில் பாதியைப் பொய்யாக்கினார். அப்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் அவரோடு மோதி பின்வாங்கிய ஹிலாரி கிளின்டன் இப்போது வேட்பாளர் ஆகியிருக்க, அவருக்காகப் பிரசாரம் செய்கிறார் ஒபாமா. ஹிலாரி ஜெயித்தால் இந்த நம்பிக்கையில் மீதியும் பொய்யாகிவிடும்.
 அநேகமாக அது நடப்பதைத் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம், அவரோடு மோதும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். டிரம்புக்கும் குடியரசுக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால், அவருக்கும் அரசியலுக்குமே சம்பந்தம் இல்லை. அவர் கோடிகளில் புரளும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். சில மணி நேரங்கள் கிடைக்கும் புகழுக்காக எதையும் செய்வார்; எவரையும் திட்டுவார். நம்ம ஊர் சுப்ரமணியம் சுவாமி மாதிரி ஏதாவது குற்றச்சாட்டை எடுத்துவிட்டு பரபரப்பு கிளப்புவார்.
இதனால் அடிக்கடி பல டி.வி. ஷோக்களில் பங்கேற்று ‘ரியாலிட்டி ஸ்டார்’ என்ற அந்தஸ்தைப் பெற்றார். டிரம்ப் சொல்லும் பல விஷயங்களை அவரே சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. கிளின்டன் குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர் வேறு! அவர் திடீரென ‘நான் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகிறேன்’ என்றபோது எல்லோரும் சிரித்தார்கள். அமெரிக்க தேர்தல் முறை சற்றே சிக்கலானது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இரண்டு தான் பிரதான கட்சிகள்.
நம்ம ஊர் மாதிரி கட்சித் தலைவரே காலாகாலத்துக்கும் தேர்தலில் நிற்கும் பிசினஸ் அங்கு இல்லை. இந்தக் கட்சி பிரதி நிதிகள் மாகாணவாரியாக வாக்களிப்பார்கள். யார் அதிகம் வாக்குகள் பெறுகிறாரோ, அவரே வேட்பாளர் ஆக முடியும். ‘எந்தக் கட்சியிலும் இல்லாத டிரம்ப் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்?’ என்றே பலரும் நினைத்தார்கள்.
ஆனால் டிரம்ப் திட்டமிட்டு களத்தில் இறங்கினார். வலுவான வேட்பாளர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த குடியரசுக் கட்சியில் அவர் உறுப்பினர்கூட இல்லை. ஆனால் அந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் குதித்தார். வெள்ளை இன அமெரிக்க மக்கள் மத்தியில் ஒரு மனநிலை உண்டு. ‘ஒரு காலத்தில் அமெரிக்கா என்றால் உலகமே நடுங்கும். இப்போது அந்த பயம் போய்விட்டது’ என்ற நினைப்புதான் அது. கறுப்பினத்தவர்கள், சீனர்கள், இந்தியர்கள் என எல்லோர் மீதுமே பெரும்பாலான வெள்ளை இனத்தவருக்கு வெறுப்பு. இதையே தன் ஓட்டு வங்கியாகக் குறி வைத்தார் டிரம்ப்.
‘மெக்சிகோவிலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள் கடத்தல் செய்கிறார்கள், போதை மருந்து விற்கிறார்கள். அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் ஒரு சுவர் எழுப்புவேன். அதற்கான செலவை மெக்சிகோ செய்ய வேண்டும்’ என்றார். ‘சீனாவிலிருந்து வரும் மலிவுவிலைப் பொருட்களைத் தடுத்து, அமெரிக்காவை உற்பத்தி மையமாக மாற்றுவேன்’ என்றார். ‘அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியர்கள் பறித்துக்கொள்கிறார்கள்’ என குற்றம் சாட்டினார். ‘முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைவதைத் தடை செய்வேன்’ என்றார்.
‘மோசமான இனவாதம்’ என டிரம்ப் கண்டிக்கப்பட்டாலும், உள்ளூர அவரை ரசித்தவர்கள் நிறைய. ஆனால் இந்த வெற்று முழக்கங்கள் ஒரு போதையாக அவர் ரத்தத்தில் ஊறிவிட, சொந்தக் கட்சியினரையே சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தார். ‘இப்படி ஒரு மனநிலையில் இருப்பவர் கைகளில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் போனால் என்ன ஆவது?’ என்ற அச்சம் பலருக்கு எழுந்திருக்கிறது. போதாக்குறைக்கு ‘பணக்காரர்கள் எந்தப் பெண் மீதும் ஆசைப்படலாம்.
என்ன செய்துவிட்டும் தப்பிக்கலாம்’ என்ற அவரின் திமிர்ப்பேச்சு வெளியாகி பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் அவர் மனைவியும் மகளும் சமாளிப்பு முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால், ‘அமெரிக்க ஆண்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை’ என்கின்றன சர்வேக்கள். டிரம்பின் கோமாளித்தனங்களால் ஹிலாரி அமைதியாக ஜெயித்துவிடுவார் போலிருக்கிறது. ஆரம்பத்தில் அவர்மீது பெரிதாக யாருக்கும் அபிப்ராயம் இல்லை.
நிர்வாகத்திறன் இல்லை, ரகசிய இமெயில் குற்றச்சாட்டு, உடல்நலமின்மை என சர்ச்சைகள் அவர் பற்றி உண்டு. பெரும் பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டாலும், அமெரிக்கா இன்னமும் வலிமை பெறவில்லை. ‘மாற்றம் வேண்டும்’ என்ற இளைய தலைமுறையின் வேட்கை அவரை மோசமாகக் கவிழ்த்திருக்கும். ஆனால், ‘‘நான் ஜெயித்ததாக அறிவித்தால் தவிர, தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதை மோசடி எனச் சொல்வேன்’’ என்று இப்போதே சொல்லும் அளவுக்குப் போய்விட்ட டிரம்ப் என்ற மனிதர், ஹிலாரியைக் காப்பாற்றுகிறார்.
- அகஸ்டஸ்
என்ன செய்வார் டிரம்ப்?
வாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்? அமெரிக்க அதிபர் நிஜமாக எவ்வளவு சுதந்திரத்துடன் செயல்பட முடியும்? ஒரு கற்பனை உரையாடல் இணையத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. அது இங்கே... அதிபர் அலுவலகத்தில் முதல் நாள் டிரம்ப் எதிரே ராணுவ அதிகாரிகள், சி.ஐ.ஏ உளவுப்படைத் தலைவர், எஃப்.பி.ஐ போலீஸ் படைத் தலைவர் அமர்ந்திருக்கிறார்கள்.
டிரம்ப்: ஐ.எஸ். தீவிரவாதப் படையை உடனே அழிக்க வேண்டும்! சி.ஐ.ஏ: அது முடியாது சார்! துருக்கி, சவுதி, கத்தார் நாடுகளோடு இணைந்து நாம்தான் அந்தப் படையை உருவாக்கினோம். டிரம்ப்: அப்படியானால் பாகிஸ்தானுக்கு நாம் உதவி செய்வதை நான் நிறுத்துவேன். சி.ஐ.ஏ: அது முடியாது சார்! அப்புறம் இந்தியா வலிமை பெற்றுவிடும். காஷ்மீரில் அமைதி ஏற்பட்டுவிடும். அப்புறம் இந்தியா நம்மிடம் ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்திவிடும். டிரம்ப்: சரி, தாலிபன் தீவிரவாத இயக்கத்தை அழிக்கலாம் அல்லவா? சி.ஐ.ஏ: அதுவும் சரியில்லை சார்! ரஷ்யர்களோடு சண்டை போட தாலிபன்களை நாம்தான் உருவாக்கினோம். இப்போது அவர்கள்தான் பாகிஸ்தான் ராணுவத்தை பிஸியாக வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பாகிஸ்தான் நம் ஆயுதங்களை வாங்குகிறது. டிரம்ப்: சரி, தீவிரவாதிகளை ஆதரிக்கும் வளைகுடா நாட்டு அரசுகளை நான் அழிப்பேன். சவுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்... ராணுவம்: அதை நீங்கள் செய்ய முடியாது சார்! அவர்களின் எண்ணெய் நமக்கு வேண்டும் என்பதற்காக நாம்தான் இந்த மன்னர்களை ஆதரிக்கிறோம். அங்கு ஜனநாயகம் வந்துவிட்டால் எண்ணெய்க்கிணறுகள் அவர்களுக்கு சொந்தமாகிவிடும். அது ஆபத்து! டிரம்ப்: சரி, இரான் நமக்கு எதிரி நாடுதானே! அவர்களைத் தாக்குவேன். ராணுவம்: சாரி சார்! அவர்கள் வலிமையாக இருப்பதால்தான் இஸ்ரேல் அடங்கி இருக்கிறது. இரான் பலவீனமாவது நமக்கு ஆபத்து! டிரம்ப்: சரி, நான் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பேன். எஃப்.பி.ஐ.: அதைச் செய்ய முடியாது சார்! அப்புறம் நம் மக்களுக்கு பயம் போய்விடும்! டிரம்ப்: சரி, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்காவை விட்டே விரட்டுவேன்! எஃப்.பி.ஐ.: அவர்களை அனுப்பிவிட்டால், அப்புறம் சின்னச்சின்ன வேலைகள் செய்ய ஆளே கிடைக்க மாட்டார்கள் சார்! டிரம்ப்: சரி, இந்தியர்களுக்கு H1B விசா வழங்குவதை நிறுத்துவேன். அவுட்சோர்ஸிங்குக்கு தடை விதிப்பேன். எஃப்.பி.ஐ.: நீங்கள் அதைச் செய்ய முடியாது சார்! அப்புறம் அமெரிக்காவே ஸ்தம்பித்துவிடும். சொல்லப் போனால், நம் வெள்ளை மாளிகையின் தினசரிப் பணிகளைக்கூட பெங்களூருவில் இருக்கும் ஒரு நிறுவனம்தான் குறைந்த செலவில் செய்துகொடுக்கிறது! டிரம்ப் (எரிச்சலோடு): அப்புறம் நான் என்னதான் செய்வது? சி.ஐ.ஏ.: வெள்ளை மாளிகையில் இருக்கும் வசதிகளை அனுபவியுங்கள். உலகம் சுற்றிப் பாருங்கள். மற்றதை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்!
|