தமிழ்நாட்டு நீதிமான்கள்



-கோமல் அன்பரசன்

சி.பி.ராமசுவாமி அய்யர் மலையாள தேசமாக அப்போது இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அந்த தமிழ்த் திரைப்படத்திற்குத் தடை விதித்து விட்டார்கள். மக்களுக்கோ ஆர்வம் தாங்கமுடியவில்லை. எல்லையோரத்தில் இருந்த நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர் கிராமத்தில்  படம் ஓடிய திரையரங்கை நோக்கிப் படையெடுத்தனர். ‘டென்ட்’ கொட்டகை நிரம்பி வழிந்தது. மாட்டு வண்டிகள், குதிரை பூட்டிய சாரட் வண்டிகள், மோட்டார் வாகனங்களில் மட்டுமல்லாமல் நடந்தே வந்து படத்தைப் பார்த்துச் சென்றவர்களும் இருந்தார்கள்.

படத்தின் பெயர் ‘தேசத்துரோகி’ அல்லது ‘தருமபுரி ரகசியம்’. அடிப்படையில் வழக்கறிஞராக இருந்து அதிகார பீடத்திற்கு வந்த வழக்கறிஞர் சர்.சி.பி.ராமசுவாமி அய்யர்தான் படத்தின் கரு.   ‘ஏணிப்படிகள்’ என்ற பெயரில் இன்னொரு படம் கூட அவரை வைத்து எடுத்தார்கள். நிறைய நூல்கள் அவரைப் பற்றி வெளியாகி இருக்கின்றன.  சுற்றிச் சுழற்றி எடுத்த விமர்சனங்களுக்கு நடுவே சுடர்மிகும் அறிவுடன் திகழ்ந்த ராமசுவாமி அய்யர், வெறுமனே சர்ச்சைக்குரிய நபர் மட்டுமல்ல;

புரட்சிகர சிந்தனைகள், சட்டத்துறை சாணக்கியம், அரசியல் ஆளுமை, நிர்வாகத் திறன்  என பலவற்றிலும் பெரும் சாதனைகள் புரிந்தவர். அதே நேரத்தில் தனக்கென வகுத்துக்கொண்ட பிடிவாதமான கொள்கைகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர். ஒரு கைதேர்ந்த வழக்கறிஞராக நூற்றுக்கணக்கான வழக்குகளில் வென்றவர். அதில் ஒன்றான நாராயணய்யா Vs அன்னி பெசன்ட் வழக்கு இப்போதும் கூட சட்டப்புத்தகங்களில் இருக்கிறது.

புகழ்பெற்ற தத்துவவாதியான ஜே.கிருஷ்ணமூர்த்தியை(ஜே.கே) தத்தெடுத்த அன்னி பெசன்ட் அம்மையாருக்கும், ஜே.கேவின் தந்தை நாராயணய்யாவுக்கும் நடந்த வழக்கு இது.  நாராயணய்யாவுக்காக அன்னி பெசன்ட் உடன் நேருக்கு நேராக சி.பி செய்த வாதங்கள் காலக் கல்வெட்டில் இப்போதும் அழியாது இருக்கின்றன.  இன்னொரு வழக்கு ‘தி மெட்ராஸ் யூனிவர்சிட்டி மாண்டமஸ் கேஸ்’!

ஓர் உயர் அதிகாரி சட்டப்படி செய்யவேண்டிய  வேலையைச் செய்யாமல் இருந்தால், அதைச் செய்ய வைப்பதற்காக போடப்படும் வழக்கு. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எதிராக சி.பி. போட்ட இவ்வழக்கில் கிடைத்த தீர்ப்பினால், ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’ சட்ட முறை  உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் துணைவேந்தருக்காக வாதாடிய பிரபல சட்டப்புலி சீனிவாச அய்யங்காரை வென்றது ராமசுவாமி அய்யரின் சாதனையாக அன்றைக்குப் பார்க்கப்பட்டது.

ஆங்கிலப் பேச்சுத்திறனும், அணிவகுப்பது போன்று வாதங்களை முன்வைக்கும் ஆற்றலும் கைவரப் பெற்றவர் சி.பி. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில்  சென்னை உயர் நீதிமன்றத்தின் ‘ஒரிஜினல் சைடு’  முன்னணி வக்கீலாக சி.பி. திகழ்ந்தார். கிடுகிடுவென புகழேணியில் ஏறிய அவரை, அட்வகேட் ஜெனரல் பதவி 1920ல் தேடி வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகச் சட்டம்  உள்ளிட்ட சட்டங்களைக் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார்.

மெட்ராஸ் மாகாணத்தை ஆட்சி செய்த ‘கவர்னர்ஸ் எக்சிக்யூட்டிவ் கவுன்சில்’ உறுப்பினராக 1923 முதல் 5 ஆண்டுகள் பதவி வகித்தார். இன்றைய அமைச்சர் பதவிக்குச் சமமான அப்பொறுப்பில் சட்டம்-ஒழுங்கு, காவல், பொதுப்பணி, நீர்வள மேலாண்மை, மின்சாரம், துறைமுகங்கள் நிர்வாகம் ஆகிய துறைகள் சி.பி. வசமிருந்தன. இத்தனை சக்தி வாய்ந்த துறைகளை வைத்துக்கொண்டு அவர் செய்த பணிகள் இன்றைக்கும் மக்களுக்குப் பயன் தருகின்றன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதியின் உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணை, சி.பி.ராமசுவாமி அய்யரின் ஆகப்பெரிய சாதனை.  இவரது முன்முயற்சிகளால்தான் அணையின் கட்டுமானப் பணிகள் 1925ல் தொடங்கின. இதே போல தென்னிந்தியாவின் பழமையான மின் உற்பத்தி மையங்களில் ஒன்றான உதகை பைகாரா நீர்மின் திட்டத்தை உருவாக்கியவரும் இவரே! இத்திட்டத்தின் மூலமே கோயம்புத்தூர் பகுதியில் வெகு வேகமாக தொழிற்சாலைகள் பெருகின.

ஆனால் இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் சி.பி. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொலைநோக்குப் பார்வையோடு இவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி, கொச்சி, விசாகப்பட்டினம் துறைமுகங்களை மேம்படுத்தியதிலும் இவருக்கு பெரும் பங்குண்டு. பெண்ணடிமைத்தனத்தின் உச்சமாக இருந்த தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலும் சி.பி.க்கு முக்கிய பங்குண்டு.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1927ல் தேவதாசி ஒழிப்பு மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அதனைத் தயார் செய்தவர் சி.பி. இதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த இந்தியாவையும் நிர்வாகம் செய்த ‘வைஸ்ராய் எக்சிக்யூட்டிவ் கவுன்சில்’ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அங்கும் அவரது அறிவு பயன்பட்டது. 1932ல் லண்டனில் நடைபெற்ற மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார். 1933ல் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில்  இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக கலந்து கொண்டார். காஷ்மீர் மாநிலத்திற்கான சட்ட திட்டத்தை உருவாக்கினார்.

இந்தக் காலக்கட்டத்தில்  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. இறந்து போன மன்னரின் வாரிசான சித்திரை திருநாள் என்பவருக்கு போதிய வயது இல்லாததால் மன்னர் பொறுப்பேற்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்திருந்தது. இதையடுத்து சித்திரை திருநாள் சி.பி. யின் உதவியை நாடினார். அவர் வைஸ்ராயிடம் பேசினார். சித்திரை திருநாள் போதுமான வயதினை எட்டும் வரை சி.பி.ராமசுவாமி அய்யர் அவருக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், வைஸ்ராய் புதிய மன்னர் பதவியேற்க அனுமதித்தார்.

5 ஆண்டுகள் ஆலோசகராக செயல்பட்ட சி.பி.யை சமஸ்தானத்தின் திவானாக (பிரதம அமைச்சர்) 1936ல் மன்னர் நியமித்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பொறுத்தமட்டில் பொற்காலம் தொடங்கினாலும் படம் எடுத்து விமர்சிக்கப்படும் அளவுக்கு சி.பி.ராமசுவாமி அய்யர் சர்ச்சைகளுக்கு ஆளானதும் அந்த பத்தாண்டுகளில்தான் நடந்தது. திவானாக பதவியேற்றதும் அதிரடியாக தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் இந்து கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமையை சட்டமாக்கி சாதனை புரிந்தார் சி.பி.!

அன்றைக்குப் பெரும் புரட்சிகர நடவடிக்கையான இதற்கு  கடும் எதிர்ப்புகள் எழுந்தன. திவானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதே நேரத்தில் மகாத்மா காந்தி போன்றவர்கள் இதனைப் பாராட்டினர்.  (1936, நவம்பர் 12ம் தேதி திருவிதாங்கூர் மன்னரின் பெயரால் வெளியிடப்பட்ட இதற்கான அரசாணையின் விவரம் அடங்கிய அறிவிப்புப் பலகை, இப்போதும்  சென்னை, அடையாறு காந்தி நகரிலுள்ள பத்மநாப சுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.)

அச்சுறுத்தல்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சி.பி., சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்தார். பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புள் கிடைத்ததோடு சமஸ்தானத்தின் வருமானம் 4 மடங்காக உயர்ந்தது. பெரியாறு அணையில் நீர்மின்திட்டத்தை ஏற்படுத்தினார். அன்றைக்கு திருவிதாங்கூரோடு  இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியமாக உருமாற்றிய பெருமை சி.பியைச் சேரும். அந்தளவுக்குப் பாசனத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.

அன்றைக்கு அவரின் சிந்தனையில் உதித்த பேச்சிபாறா மின் திட்டமே இப்போது குமரி மாவட்டத்தில் இருக்கும் கோதையாறு நீர்மின் திட்டமாகும். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையை உருவாக்கியதோடு, அந்த ஊரில் முதன்முறையாக விருந்தினர் இல்லங்களைக் கட்டியதும் சி.பி. தான்! திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தை உருவாக்கியது, பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத்திட்டத்தை முதன்முறையாக செயல்படுத்தி, கட்டாயக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது போன்றவை இப்போது கேரளா நூறு சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருப்பதற்கு அடித்தளமாக அமைந்தன.

மேலும் வயது அடிப்படையில் வாக்குரிமை வழங்கியது, மரண தண்டனையை ஒழித்தது, முதன்முறையாக மாவட்ட நீதிபதி பொறுப்புக்கு பெண் ஒருவரை நியமித்தது  என சி.பி. ராமசுவாமி அய்யரின் அதிரடிகள் தொடர்ந்தன. (அன்னா சாண்டி என்ற அந்தப் பெண் இந்திய உயர்நீதிமன்றங்களில் முதல்  பெண் நீதிபதியாக பிற்காலத்தில் பதவி வகித்தார்). இந்தியாவில் சாலைப் போக்குவரத்தை முதலில் தேசியமயமாக்கியதோடு, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையிலான 88 கிலோமீட்டர் தூரத்திற்கு முதன்முதலாக சிமெண்ட் சாலை அமைத்தார்.

இன்றைக்கு இதெல்லாம் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு  எந்தளவுக்கு தொலைநோக்குப்பார்வையும் நெஞ்சுரமும் வேண்டும்?  இவற்றுக்கு எல்லாம் எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா? ராமசுவாமி அய்யருக்கு ஏகத்திற்கும் எதிரிகள் முளைத்தனர். அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு மன்னரையும் அரச குடும்பத்தினரையும் ஆட்டிப் படைப்பதாகக் குற்றஞ்சாட்டினார்கள். 

இதை மையப்படுத்தியே திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு கடுமையான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் கம்யூனிஸ்ட்கள் சி.பி.யை எதிர்ப்பதில் மும்முரம் காட்டினர். இந்தச் சூழலில் தேசப் பிரிவினையும் இந்திய விடுதலையும் நிகழ்ந்தது. அப்போது சமஸ்தானத்தின் எல்லையிலிருந்த ஆலப்புழைக்குப் பக்கத்தில் புன்னப்பாரா- வயலார் பகுதியை கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அவர்களிடமிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்குக் காரணமாகக் கருதப்பட்ட சி.பி.ராமசுவாமி அய்யரை கே.சி.எஸ்.மணி என்பவர், திருவனந்தபுரம் மியூசிக் அகடமி வாசலில் வைத்துக் கொல்ல முயன்றார். கத்திக்குத்து காயங்களுடன் உயிர் பிழைத்த அய்யர், பின்னர் திவான் பதவியிலிருந்து விலகினார். எப்போதுமே அவர் தனி மனித வெறுப்பு காட்டமாட்டார். 

அன்னி பெசன்ட் அம்மையாரை எதிர்த்து வழக்காடினாலும், வழக்கு முடிந்ததும்  இருவரும் நண்பர்களாயினர். அவரது ‘ஹோம் ரூல்’ இயக்கத்திற்கு சி.பி.  துணைத்தலைவராக இருந்தார். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளராக பார்க்கப்பட்ட  இவர், கேரளாவில் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்டபோது எதிர்த்துக் குரல் கொடுத்தார். இளம் வயதில் ஆங்கிலப் பேராசிரியராக  வேண்டுமென ஆசைப்பட்ட சி.பி., தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானவர். சேத்துப்பட்டு பட்டாபிராம அய்யருக்கும் ரங்கம்மாளுக்கும் ஒரே மகனாக 12.11.1879ல் வந்தவாசியில் ராமசுவாமி பிறந்தார்.

சென்னை வெஸ்லே பள்ளிக்கூடத்திலும், பின்னர் மாநிலக்கல்லூரியிலும் தங்கப்பதக்க மாணவனாகத் தேறினார். இவரது தாத்தாக்களான சி.பி.ராமசுவாமி அய்யர் கும்பகோணத்திலும் சி.வெங்கடசுப்பய்யர் மாயவரத்திலும் தாசில்தாராக இருந்தவர்கள். தந்தை பட்டாபிராம அய்யர் அக்காலத்திய முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர். 1888ல் சென்னை ஆழ்வார்பேட்டையில் பெரிய தோப்பை விலைக்கு வாங்கி, அதில் ‘தி குரோவ்’ என்ற பங்களா கட்டி வாழ்ந்தவர். அங்கு காந்திஜி, முகமது அலி ஜின்னா போன்ற ஏராளமான பிரமுகர்கள் வந்து சாப்பிட்டுச் சென்றுள்ளனர். அந்த இடத்தில் இப்போது ‘சி.பி.ஆர் ஃபவுண்டேஷன்’ செயல்படுகிறது.

சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளுக்கு இந்த அறக்கட்டளை  முன்னுரிமை தருகிறது. அதே ஆழ்வார்பேட்டையில் சி.பி.ராமசுவாமி பெயரில் சாலையும் இருக்கிறது. பிரபல வழக்கறிஞர் சி.வி.குமாரசாமி சாஸ்திரியாரின் சகோதரியான சீத்தம்மாவை திருமணம் செய்து கொண்டார்.  சி.ஆர்.பட்டாபிராமன், சி.ஆர்.வெங்கடசுப்பன், சி.ஆர்.சுந்தரம் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் சி.ஆர்.பட்டாபிராமன் மூத்த வழக்கறிஞராகவும் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

வக்கீல் படிப்பு முடிந்ததும் கிருஷ்ணசுவாமி அய்யரிடம் தொழில் பழகுநராக இருந்த சி.பி., பிறகு சில காலம் பாஷ்யம் அய்யங்காரிடம் ஜூனியராக இருந்துவிட்டு, பின்னர் தன் மைத்துனரான சாஸ்திரியாரிடம் சேர்ந்தார். சமூக சீர்திருத்தம், கல்வி உள்ளிட்டவற்றுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சி.பி. 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

1966ல் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் மை டைம்ஸ்’ என்ற நூலை எழுதுவதற்கு குறிப்புகள் எடுப்பதற்காக லண்டனுக்குச் சென்றிருந்தார். அங்கு இந்தியா அலுவலக  நூலகத்தில் 26.9.1966ல் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அப்படியே மயங்கிச் சரிந்து மறைந்து போனார். “எத்தனையோ ராமசுவாமிகள் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு ‘சி.பி.’தான்!” என்று பிற்காலத்தில் நீதிபதி பி.வி.ராஜமன்னார் கூறிய வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்