கடத்தல்
-மீனா சுந்தர்
‘‘ஹலோ விக்ரம்... பறவை சிக்கிச்சா? எந்த லெவல்ல இருக்கு நம்ம ப்ராஸஸ்?’’ - என்றான் நரேன். ‘‘இப்பதான் ஒரு பறவை மாட்டியிருக்கு. கிட்டத்தட்ட நம்ம வழிக்கு வந்துடும்...’’ ‘‘வழக்கம் போல தனிப் பறவைதானே அது? நமக்கு அதுதான் சேஃப்டி. பின்னால எந்த பிரச்னையும் வராமல் இருக்கணும்!’’ ‘‘அப்படி நெனச்சித்தான் பழகினேன். சடார்னு அன்னிக்கொரு நாள் தனக்கொரு அண்ணன் இருக்கான்னு சொல்லிட்டா. எனக்கு ஷாக் ஆயிடுச்சு. ஆனா அவளே, ‘அண்ணன் நம்ம காதலுக்கு குறுக்கே நிக்காது. பச்சைக் கொடி காட்டிடும்னு சொன்னா...’’ ‘‘அப்புறம்?’’
 ‘‘என் அம்மா, அப்பாவைப் பார்க்க ஊருக்கு வர்றேன்னு சொல்லியிருக்கா. ஊருக்கு அழைச்சிட்டுப் போறதா சொல்லி அடுத்த ஞாயித்துக்கிழமை அவளைக் கடத்துறோம். அஞ்சு லட்சம் நமக்கு உறுதி. வழக்கம் போல நீ வழில வந்து ஏறிக்கோ... ஓகேவா?’’ என்றான் விக்ரம். ‘‘ஓகே..!’’ என்றான் நரேன். அடுத்த ஞாயிறு. தன் காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து காரில் ஏற்றி, மும்பை பார்ட்டிக்கு கை மாற்றிக் கொடுத்து கரன்சி பார்க்கும் கனவுகளில் மிதந்தவாறு பயணித்தான் விக்ரம். நரேன் வழியில் ஏறினான். ஏறியவன், பின் சீட்டில் மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணை எட்டிப் பார்த்தான். பார்த்ததும் ‘ஆ...’ என்று அலறினான்! ‘‘ஏன்டா?’’ என்றான் விக்ரம். ‘‘இது என் தங்கச்சிடா’’ என்று துடித்தான் நரேன்.
|