கோட்



-பட்டுக்கோட்டை ராஜா

விருப்பமில்லையென்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், என் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நான் கோட் சூட் போட்டுக்கொண்டு நிற்பதுதான் தனக்கு கௌரவம் என்று வாதிட்டார் மாளவிகாவின் அப்பா. வேறு வழியில்லாமல் வேகாத வெயிலில் கோட் சூட் அணிந்து நாலு மணி நேரம் சோளக்கொல்லை பொம்மையைப் போல நின்றிருந்தேன். பிறகு நான் அந்தக் கோட்டை அணியவே இல்லை. அணியும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பதுதான் நிஜம். சாதாரண குமாஸ்தா கோட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போவது நடக்கிற விஷயமா?
ஆண்டுகள் ஓடியதில் கோட்டுக்கு ‘ஹேங்கரில்’ தொங்கியே சலித்துப் போயிருக்கும்.

இப்போது அந்தக் கோட்டுக்குக் கிடைத்தது மறுவாழ்வு. என் மகள் பூஜாவின் பள்ளியில் மாறுவேடப் போட்டி நடந்தது. பூஜா கணீர் என்ற குரலில் பேசுவாள் என்பதால் அவளுக்கு பாரதியார் வேடம் பொருத்தமாயிருக்கும் என்ற மாளவிகா, எனது கோட்டின் உயரத்தையும், கை நீளத்தையும் குறைத்து பூஜாவுக்கு அணிவித்தாள். பஞ்சகச்சம் போன்ற வேட்டிக்கட்டு, முண்டாசு, அந்த கோட்டுடன் அவள் ‘அச்சமில்லை... அச்சமில்லை...’ என்று முழங்கியபோது எங்கள் உள்ளம் குளிர்ந்தது.

போட்டியில் பூஜாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘இனி உதவாது’ என அந்தக் கோட்டை பாத்திரக்காரனிடம் போட்டுவிட்டுச் சின்ன எவர்சில்வர் குடம் வாங்கியபோது மாளவிகாவின் கண்கள் பனித்ததைக் கவனித்துவிட்டுக் காரணம் கேட்டேன். மழுப்பலான ஒரு புன்னகை மட்டுமே பதிலாய்க் கிடைத்தது.