முகங்களின் தேசம்



-ஜெயமோகன்

அன்னியர்கள் இந்த 2016 அக்டோபர் ஏழாம் தேதி கிளம்பி ஏழு நாட்கள் கேதார்நாத் சென்று வந்தேன். திடீரென செல்லவேண்டுமென்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. இரண்டு மாத காலம் சிங்கப்பூரின் தேசிய கல்விக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தேன். நான் அப்பணியை ஏற்றுக்கொண்டதே ஒரு பயண அனுபவத்துக்காகத்தான். பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். எல்லாமே சென்று பார்த்து மீண்டு வரும் அனுபவம். அங்கேயே இருந்து வாழும் அனுபவம் வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.

1984ல் எனக்கு இந்திய தொலைத்தொடர்புத் துறையில் வேலை கிடைத்தது. 22 வயது. கையில் பெட்டியுடன் அந்தப் புதிய ஊருக்குச் சென்று இறங்கினேன். அளவுச் சாப்பாட்டுக்கு மீன் குழம்பு கிடைக்கும் ஊர். மழை பெய்து சுவர்களெல்லாம் புல் படர்ந்திருக்கும் கட்டிடங்கள். அருகேதான் ‘உயிரே’ பாடலில் இடம்பெறும் ‘பேக்கல்’ என்னும் பழைய கடற்கோட்டை. சந்திரகிரி ஆற்றின் கரையில் அமைந்த ஊர். எல்லாமே புதிது.

அங்கே வீடு கண்டுபிடித்து வேலைக்குப் போக ஆரம்பித்தபோது ஒரு நாவலின் தொடக்கம் போல உணர்ந்தேன். கதாநாயகன் வந்திறங்கியிருக்கிறான்! ஓர் அன்னிய நிலம் அளிக்கும் கிளர்ச்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. அந்தக் கிளர்ச்சியை மீண்டும் அனுபவிப்பதற்காகவே சிங்கப்பூர் சென்றேன். ஜூலை 25ம் தேதி சென்றிறங்கியபோது மிகப்பெரிய மழை. ஆனால் ஒரு துளி நனையாமல், எனக்கு அளிக்கப்பட்ட இல்லத்திலிருந்து பேருந்து தரிப்பகம் சென்று, கல்லூரிக்குச் சென்று, என் வகுப்பறையை அடைய முடிந்தது.

செங்குத்தாக எழுந்த நகரம். ஒவ்வொரு கட்டிடமும் உண்மையில் ஒரு சிறிய கிராமம். சுத்தம், ஒழுங்கு, சுறுசுறுப்பு. புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆமாம், நாவல் ஆரம்பித்தது. கொஞ்சம் வயதான கதாநாயகன். ஆகவே ரொமான்ஸ் எல்லாம் இல்லை. இரண்டு மாதம் சிங்கப்பூரில் வாழ்ந்ததும், ‘எங்காவது மலை, காடு என்று போய் விழாவிட்டால் மீளமுடியாது’ என்று தோன்றியது.

சிங்கப்பூரில் நான் இருந்த இரண்டு மாத காலமும் ஒரு சீனர், ஒரு மலாயர் கூட சாலையிலோ, பேருந்திலோ என்னை நோக்கி வணக்கமோ, வாழ்த்தோ சொல்லவில்லை. நானே புன்னகையுடன் ஓர் அன்னியருக்கு ‘வணக்கம்’ சொன்னால்கூட, திகைத்து, முகம் சிவந்து, பதிலுக்கு ‘வணக்கம்’ சொன்னார்கள். வெள்ளையர் மட்டுமே விழிநோக்கிச் சிரித்து முகமன் சொன்னார்கள். அவர்களும் என்னைப் போலவே சிங்கப்பூருக்கு அன்னியர்கள். ஒருவரிடம், “இங்குள்ளோர் முகமன் சொல்வதில்லை” என்றேன்.

அவர் பிரெஞ்சுக்காரர். “ஆமாம், நீங்கள் இந்தியரா?” என்று ஆவலுடன் கேட்டார். “ஆம்” என்றேன். “நாம் அன்னியர்” என்றார். கட்டிடங்களின் நேர்த்தி கண்களுக்குப் பழகிய பின், நான் கட்டுப்பாடற்ற மலைகளின் வடிவை விரும்பத் தொடங்கினேன். என்னை மீட்டுக்கொள்ளாமல் எதையும் எழுத முடியாது என்று தோன்றியது. உடனே நினைவிலெழுந்தது இமயமலைதான். எப்போதுமே புதிய மூச்சுக்காக இமயமலைக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறேன்.

ஆகவே உடனடியாக ஒரு கேதார்நாத் பயணம் என்று திட்டமிட்டேன். நண்பர்களிடம் சொன்னேன். சரசரவென பத்து பேர் திரண்டார்கள். என் மகளும் உடன் வந்தாள். செப்டம்பர் 27 சிங்கப்பூரிலிருந்து வந்ததுமே ஒரு வாரம் கழித்து கேதார்நாத் கிளம்பி விட்டோம். நேராக சண்டிகர். அங்கிருந்து ஒரு வாடகைக் காரில் ரிஷிகேஷ். அங்கிருந்து ருத்ரபிரயாக் வழியாக சோன் பிரயாக். அங்கிருந்து 18 கி.மீ. தூரம் வளைந்து வளைந்து ஏறிச் செல்லும் மலையேற்றப்பாதை. அதை பத்து மணி நேரத்தில் ஏறிக் கடந்து கேதார்நாத் சென்றடைந்தபோது என் உடல் நன்றாகத்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டேன். உள்ளம் நன்றாக ஆகியது.

ருத்ரபிரயாக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது எதிரே சாலையில் ஒரு அகோர சிவம் நடந்து சென்றுகொண்டிருந்தது. என் மகள், ‘‘அப்பா... நான் கடவுள்!” என்று கூவினார். நாங்கள் எட்டிப் பார்த்தோம். கரிய ஆடையும், முகமெங்கும் விபூதியும் அணிந்து சடைமுடிக்கற்றையை கொண்டையாகக் கட்டி கையில் திரிசூலம் ஏந்திய நாகா சாமியார். எங்களை நோக்கி “ஜெய் பைரவ்!” என வாழ்த்தினார். என்னுடன் இருந்த நண்பர் ராஜமாணிக்கம், “சார்... அவரு வெள்ளைக்காரர்” என்றார்.

அப்போதுதான் நானும் கவனித்தேன். ஆம், வெள்ளையர். வெள்ளையர் இமயமலையின் ஆசிரமங்களில் துறவிகளாகத் தங்கியிருப்பதை நான் முன்பும் பலமுறை கண்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு வெள்ளையத் துறவி ஹரித்வாரில் பிச்சையெடுக்க அமர்ந்திருப்பதைக் கண்டேன். டீக்கடையில் நின்றிருந்தபோது ஒருவர், ‘கஞ்சா கேஸ்’ என்று அவரைச் சுட்டிக்காட்டிச் சொன்னார். கடைக்காரர் சிரித்தபடி, “அவரது திருவோட்டில் ஒரு நூறு ரூபாயைப் போடுங்கள், தெரியும்” என்றார்.

அவர் நேராகச் சென்று நூறு ரூபாயை திருவோட்டில் போட்டார். அரை மயக்கத்தில் போல அமர்ந்திருந்த சாமியார் திருவோட்டைக் கவிழ்த்து நோட்டைக் கீழே போட்டு விட்டு, பேசாமல் அமர்ந்திருந்தார். பணம் போட்டவர் திகைத்துவிட்டார். திரும்ப வந்தபோது கடைக்காரர் சொன்னார். “ஒரு நாளுக்கு ஐந்து ரூபாய்தான். அதைக் கொண்டுவந்து இங்கே தருவார். எட்டு சப்பாத்தியும் குருமாவும் கொடுப்பேன். எடுத்துக்கொண்டு மலையேறிச் சென்றுவிடுவார். அதற்குமேல் பணம் பெற்றுக்கொள்வதில்லை!”

பரமஹம்சரின் வாழ்க்கை. திகைப்பாக இருந்தது! மனிதர்களை நம்மை வைத்துத்தான் புரிந்துகொள்கிறோமா? ஒருமுறை ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்த ஒரு அயர்லாந்துக்காரரிடம், “இந்தியா எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். “ஏன் கேட்கிறாய்?” என்றார். “இது உங்களுக்கு அன்னிய நாடு அல்லவா?” என்றேன். அவர் “இல்லை, உனக்குத்தான் அன்னிய நாடு” என்றார். நான் செவிட்டில் அடிபட்டதுபோல உணர்ந்தேன்.

கேதார்நாத்தில் சிவதரிசனம். நாங்கள் மூச்சு வாங்கப் படியேறிச் செல்லும்போதுதான் மகா ஆரத்தி. முன்பிருந்த காளாமுக மரபின் ஆலயம் அது. அவர்கள் பிறரை மலையேற விட்டதில்லை. அவர்களை ஆதிசங்கரர் வென்று, ஆலயத்தைக் கைப்பற்றி சிவ மரபுக்குள் கொண்டு வந்தார் என்பது தொன்மம். ஆதிசங்கரருக்கு அங்கு ஓர் ஆலயம் உண்டு. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு வந்த பெருவெள்ளத்தால் ஆதிசங்கரர் ஆலயம் இடிந்து விட்டது. அதை திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கேதார்நாத்தில்  காளாமுக மரபின் வழிவந்த  பூசகர்கள்தான்  சடங்குகள் செய்கிறார்கள். கரிய உடை, தாடி, பெரிய தலைப்பாகை.  கங்கைக்கரை ஆரத்திச் சடங்கு ஒரு நடனம் போலிருக்கும். இங்கே அது ஒரு கட்டற்ற வெறியாட்டு. உடுக்கோசை, சங்கொலி, மணிமுழக்கம். ஒரு சன்னதியிலிருந்து இன்னொன்றுக்கு முப்புரி வேல்களைத் தூக்கியபடி ஓடினார்கள். அந்த ஆவேசம் ஒரு வகை மன எழுச்சியை உருவாக்குவது. அதிலிருக்கும் மரபின் தொன்மை. நாத்திகரும் அவநம்பிக்கையை கொள்கையாகக் கொண்டவருமான கிருஷ்ணனே கண் கலங்கிவிட்டார்.

ஆனால் அங்கு கூடிநின்றவர்களில் பாதிப்பேர் செல்பேசியில் அதைப் படம் பிடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அந்தக் காட்சியில் தானும் இடம் பெறுவதற்காக சாமிக்கு பின்பக்கம் காட்டி நின்றார்கள். வெளிச்சம் இல்லாததனால் அவர்களின் முகம் சரியாக விழவில்லை. ஆகவே அங்குமிங்கும் ஓடினார்கள். எனக்குமுன் செல்பேசியுடன் எம்பிய ஒருவரைப் பிடித்து ஓரமாகத் தள்ளிவிட்டே ஆரத்தியைப் பார்த்தேன் மறுநாள் காலை ஆலயத்திற்குள் செல்லும்போதும் அதே செல்ஃபி வெறி. உள்ளே இருப்பது செதுக்கப்பட்ட லிங்கம் அல்ல.  இயற்கையான ஒரு பாறையின் மேல்நுனி. மண்ணுக்குள் எஞ்சிய பகுதி இருக்கிறது.

காளாமுக மரபு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழிபட்ட ஒரு பாறைதான் அது. அதைச் சுற்றி வந்து செல்ஃபி எடுத்தனர். தடுத்த கோயில் பூசாரிகளை ஏமாற்றி படம் எடுத்துவிட்டு திருப்தியுடன் வெளியே சென்றனர். ‘இங்கிதத்தை விடுங்கள், ஆலய மரபுகூடவா தெரியாது’ என நினைத்துக்கொண்டேன். உண்மையிலேயே இந்து மதத்தில் இது ஒரு பெரிய பிரச்னை. மையப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு இல்லாத காரணத்தால், ஆலய வழிபாடு பெரும்பாலும் ஆளுக்குத் தோன்றிய வகையில்தான் நிகழ்கிறது.

இடித்துப் பிடித்து முட்டி உந்தி கருவறைக்குள்ளேயே சென்று மீளமுடியும். ஆலயம் தொழுத உணர்வு வரவேண்டுமென்றால் ஆளில்லா கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் வட இந்தியாவில் படையெடுப்புகளால் ஆலயங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. மிகச்சிறிய வழிபாட்டுக் குழுக்களாகவே இந்து மதம் அறுநூறு வருடம் நீடித்தது. ஆகவே இங்கைவிட அங்கே பஜனை போன்ற கூட்டு வழிபாடு செல்வாக்குடன் இருக்கிறது.

ஓரிரு ஆலயங்கள் மீண்டும் கட்டப்பட்டது பதினாறாம் நூற்றாண்டில் மராட்டிய பேஷ்வாக்களின் காலத்தில்தான். குறிப்பாக பேஷ்வா பாலாஜி பாஜிராவ் ஆட்சிக்காலத்தில் (‘பாஜிராவ் மஸ்தானி’ என்னும் படத்தின் நாயகன்தான்)! இந்தக் கால இடைவெளியால் பேராலய வழிபாட்டு மரபு மக்கள் வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டது. பொதுவான ஆலயச் சடங்குகள் எவருக்குமே தெரிந்திருப்பதில்லை.

ஆகவே, மக்கள் தங்கள் குலவழிபாட்டு முறைகளையும், சிறுதெய்வ வழிபாட்டு முறைகளையும் பேராலயங்களிலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். குலவழிபாட்டு முறைகள் குறைவான மக்கள் பங்கெடுப்பவை. அவற்றை பெரிய ஆலயங்களில் செய்ய ஆரம்பித்தபோது மொத்தமாக பெருங்குழப்பம் ஏற்பட்டது. இன்றுவரை அவற்றை ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஏனென்றால், தேசம் முழுக்க அனைத்து இந்துக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு மைய அமைப்பு இந்து மதத்திற்கு இல்லை.

இன்று வட இந்திய ஆலயங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பூசை செய்வார்கள். கருவறைக்குள் சாமியருகே சிலர் சப்பணம் போட்டு அமர்ந்துகொள்வார்கள். கொண்டுவந்த பொருட்களை அபிஷேகம் செய்வார்கள். கூச்சலிடுவார்கள். பாடுவார்கள். பல சமயம் கருவறைக்குள் சென்றால் நடுவே ஏதோ விபத்து நடந்து சுற்றிலும் மக்கள் கூடியிருப்பதுபோலத் தெரியும். பக்தர்கள்தான், ஆனால் என்ன செய்வது, செய்யக்கூடாது என்றே தெரியாது. கருவறைக்குள் எச்சில் துப்புபவர்கள்கூட உண்டு.

தமிழகத்தில் படையெடுப்புகளால் அழிந்துபோன ஆலயங்கள்  நாயக்கர் ஆட்சிக்காலத்தில் திரும்பக் கட்டப்பட்டு ஆகம முறைகள் நிலைநாட்டப்பட்டு இன்றும் நீடிக்கின்றன. ஆனால் நம் ஊழல் மனநிலை கோயிலிலும் வெளிப்படவே, ‘காசு கொடுத்தால் எந்த விதியையும் மீறலாம்’ என்றாகி, விதிகளே பூசகர்களும் கோயில் ஊழியர்களும் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் என்னும் நிலை உள்ளது. அத்துடன் ஆகமமுறைகளை மீறி சாமிக்கு பழைய கந்தல்களை சுற்றி வைப்பது, தெய்வத் திருவுருக்கள் மேல் பெயின்ட்டால் வரைவது என அறியாமையும் தாண்டவமாடுகிறது.

ஆகம முறைகளில் காலத்திற்கு ஒவ்வாதவை இருந்தால், உடனடியாகக் களையப்பட வேண்டும். ஆனால் முறையே இல்லாத வழிபாட்டுத்தலம் இருக்கமுடியாது. முறை என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டாக வேண்டும். முழுமையான கோயில் தரிசனமும் நிறைவான பூசையும் இன்று கேரள ஆலயங்களில்தான் உள்ளன. பல்லாயிரவர் இன்று இங்கிருந்து அங்கே செல்வது அதற்காகத்தான். கேதார்நாத்தில் இருந்து மறுநாள் இறங்கி வந்தோம். துங்கநாத் ஆலயம் எட்டு கி.மீ உயரத்தில் செங்குத்தான குன்று மேல் உள்ளது.

கேதார்நாத் ஏறிய கால் வலி இருந்தாலும், நின்று நின்று ஏறிச்சென்றோம். செல்லும் வழியில் ஓர் அபூர்வ தம்பதியைப் பார்த்தோம். இருவருமே வெள்ளையர். இந்திய மரபுடை அணிந்திருந்தனர். குடுமி வேறு. மலையேறும்போது நாங்கள் பேசிக்கொண்டும் மூச்சு வாங்கிக்கொண்டும் சென்றோம். அவர்கள் சிவநாமம் அன்றி ஒன்றும் சொல்லவில்லை. நிதானமாக சீரான காலடிகளுடன் நிற்காமல் ஏறினார்கள்.

மேலே அவர்களை நோக்கி ஓடிவந்த வழிகாட்டிகளிடம் அவர், “நாங்கள் சுற்றுலாப்பயணிகள் அல்ல, வழிபட வந்தவர்கள்” என உரக்கச் சொன்னார். இருமுறை சொன்னபிறகே அவர்களுக்கு அது புரிந்தது. வணிகர்களும் வழிகாட்டிகளும் விலகிச் சென்றபின் அவ்விருவரும் துங்கநாத்தின் சிவாலயத்தைச் சுற்றி வந்து வழிபட்டனர். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொன்றையும் முறையாகச் செய்தனர். எங்கு முதலில் வழிபடவேண்டும், எப்படிச் சுற்றி வரவேண்டும் எல்லாமே தெரிந்திருந்தது... 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோரில் இருவர் திரும்பி வந்ததுபோல!

ஆனால் இந்துக்களான இந்தியர்கள் அங்குமிங்கும் அலைமோதினர். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். கூச்சலிட்டனர். பொரிகடலை தின்றனர். சிரித்துக் கூச்சலிட்டனர். அந்த வேறுபாட்டை நான் அப்போதுதான் கவனித்தேன். அவர்களுக்கு ஆலய வழிபாடு எப்படித் தெரிந்தது? மிக எளிது.

ஆலயத்திற்குச் செல்வதற்கு முன் அதைப் பற்றிய ஒரு நூலை வாங்கிப் படித்தாலே போதும். அக்கறை இருக்கவேண்டும், அவ்வளவுதான்! கீழிறங்கும்போது அவர்களைக் கடந்து சென்றோம். நான் “சிவ சிவ” என்றேன். அவர்களும் திரும்பச் சொன்னார்கள். அவர்கள்தான் அந்த இடத்திற்குரியவர்கள், நாம் அன்னியர்கள் என நினைத்துக்கொண்டேன்.

(தரிசிக்கலாம்...)

ஓவியம்: ராஜா