உயிரமுது



தமிழர் உணவுகளின் உன்னத சுவை

-ராஜமுருகன்

‘ஒரு ஊர்ல, தன்னோட வேலைகளை தானே செய்துகொள்ளும் அளவுக்கு உற்சாகமா வாழ்ந்த பாட்டிக்கு வயசு 96. அவுங்க புள்ளையோட வயசு 78. அவுங்க புள்ளையோட வயசு 56. அவுங்க புள்ளைக்கு வயசு 30. அவுங்க புள்ளைக்கு வயசு 3. இவுங்க அனைவரும் ஆரோக்கியமாக இருக்காங்க...’ நமக்கு இது கதையாகத் தெரியலாம்; முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் இது உண்மை என எல்லோரும் நம்புவார்கள். இந்தத் தலைமுறைக்கு ஆரோக்கியம் என்பது எழுத்தில் மட்டும்தான் தெரிகிறது. நம் முன்னோர்கள் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளனர். இது நோயில்லாமல், வலியில்லாமல், நல்ல தூக்கம், நல்ல சிந்தனையோடு வாழும் வாழ்க்கை.

ஆனால் இன்றைய வாழ்க்கைச்சூழலில் எல்லாவற்றிலும் வேகம் சேர்ந்திருக்கிறது. ஏதோ கண்டுபிடிக்க முடியாத காரணத்துக்காக வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடிக்கொண்டே இருக்கிறோம். தேவைக்கு அதிகமாகவே பணமும் சகல வசதிகளும் இருக்கின்றன. ‘ஹச்’ என தும்மினாலே ஓடிப் போய் பார்க்க நான்கைந்து ஆஸ்பத்திரிகள் ஒவ்வொரு தெருவிலும் உண்டு. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற தவிப்பு எப்போதும் இருக்குமே, ‘நிம்மதியில்லை’ என மனம் அடித்துக்கொள்ளுமே, அதுதான் ஆரோக்கியமின்மை.
 
இதைச் சரி செய்ய நாம் எண்ணத்தில் மாற்றம் கொண்டு வந்தால் போதும். அதற்கு ஔவை சொன்ன ‘அறம்’ பழக வேண்டும். அது செயலிலும் வாழ்விலும் இருக்க வேண்டும். அப்படி வாழ்ந்தால், உங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் தெரிந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த அறங்கள் அனைத்திலும் ‘உணவு அறம்’ என்பது மிக முக்கியமானது. காரணம், அதுதான் பிரபஞ்ச உயிர்கள் அனைத்தையும் இயக்குகிறது. உணவின்றி ஒன்றுமில்லை.

இத்தகைய சக்தி வாய்ந்த உணவு அறத்தை ‘படி எத்தனை ரூபாய்’ என்று கேட்கும் அளவுக்கு இப்போது சந்தைப்படுத்தப்படும் தொழிற்சாலை உணவுகள் இருக்கின்றன. கலர் கலராய் பொட்டலங்கள், வகை வகையாய் விளம்பரங்கள், தினுசு தினுசாக கேரண்டிகள், புதுசு புதுசா மணம்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரியான நிறுவனங்களுக்கு பெரும்பாலும் பொருளீட்டுவதே முதன்மை அறமாக இருக்கிறது; பசியாற்றுவதும் ஆரோக்கியம் காப்பதும் அங்கு பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

இப்படிப்பட்ட உணவு எப்படி நன்மை தரும்? எப்படி நம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்? வரும் தலைமுறையினருக்கு வளமான வாழ்வை இது விட்டுச் செல்லுமா? கடுகளவும் நாம் இதுபற்றி யோசிப்பதே கிடையாது. இப்படிப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் வரக்கூடும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அந்த நோய்களை சரி செய்யும் மருந்துகளைத் தயாரிப்பவர்களும் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களாகவே இருக்கின்றன. நம் ஆரோக்கியத்தோடு விளையாடி இருவரும் ‘நல்லா கல்லா கட்டுறாங்க’.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! இந்த மாங்காய் சமாச்சாரம் தெரிந்தே நாம் அதே குட்டையில்தான் விழுகிறோம். காரணம் சோம்பேறித்தனம். நம் குழந்தைகளை நாமே நோயாளி ஆக்கலாமா? இந்த வகையில் நம்ம பாட்டனும் பூட்டனும் அவர்களின் பிள்ளைகளை நோயாளி ஆக்கவில்லை. அவர்கள், எங்கோ விளைந்து பல மாதங்கள் கழித்தும் ஃபிரஷ்ஷாக மெழுகுப்பூச்சை சுமந்து வரும் ஆப்பிளை நம்பி இல்லை; வாயில் நுழையாத பெயரை வைத்திருக்கும் வெளிநாட்டுக் காய்களைத் தேடவில்லை. தங்களுக்குப் பக்கத்தில் கிடைத்த பொருட்களை வைத்து சமைத்தனர்.

உணவை சமன் செய்தனர். எந்தப் பருவத்தில் எது கிடைக்கிறதோ, அதற்கு மட்டுமே ஆசைப்பட்டனர். வருடம் முழுவதும் மாம்பழத்துக்கு ஆசைப்படவில்லை. அவர்களுக்கு சிறு தொந்தரவுகளும் இல்லை; சிறுநீரகத் தொந்தரவும் வரவில்லை. வாழ்க்கை என்பது இனிய பயணமாக அமைய வேண்டும். மினி பஸ் நெரிசலில் ஃபுட் போர்டு அடிப்பது மாதிரி ஏதோ ஒரு ஓட்டமாக அது இருக்கக்கூடாது. இதற்கு நமக்குள் சிறு சிறு மாற்றம் கொண்டு வந்தாலே போதும். நமக்கு அருகில் கிடைக்கும் பொருட்களை வைத்து வாழ்வதும், பருவத்தில் கிடைப்பதைப் பயன்படுத்துவதும் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும்.

சற்று பின்நோக்கிப் பயணித்துப் பார்த்தால், இத்தனை வெள்ளையாக அரிசி இருந்ததில்லை, கைக்குத்தல் அரிசிதான். கலர் குறைவுதான். அந்த அரிசி கழுவிய நீரை ஒரு பீங்கான் ஜாடியில் பாதியளவுக்கு நிரப்புவார்கள் தாய்மார்கள். பின் கொதிக்கும் உலையில் அரிசியைப் போட்டு, சாதம் வெந்ததும் கஞ்சியை வடித்து, அந்தக் கஞ்சியை ஜாடியின் மீதி பாதிக்கு நிரப்புவார்கள். பிறகு ஜாடியின் வாயை வெளிர் காட்டன் துணியால் மூடுவார்கள். அடுத்த நாள் இந்த ஜாடி நீர் சற்று புளிப்புடன் இருக்கும்.

இதற்குப் பெயர்தான் காடி. இந்தக் காடியை போதுமான அளவு எடுத்து, சோறாக்குவதற்கு உலை வைப்பார்கள். மீதி ஜாடியில் இருக்கும். மீண்டும் ஜாடியில் அன்று அரிசி கழுவும் நீர் பாதி, மீதி சோறு வடித்த கஞ்சி என ஊற்றி சேகரிப்பார்கள். இந்த ஜாடியை பல வீடுகளில் தெய்வத்திற்கு இணையாகப் பாதுகாத்து, சுத்தமாகப் பராமரிப்பார்கள்.

இரண்டு, மூன்று நாட்களில் ஜாடியின் அடியில் மாவு போன்ற வண்டல் சேரும். இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்த காடி நீர் உடலுக்குக் குளிர்ச்சி தரும், உடலை உறுதியாக்கும். இதில் உருவாகும் நொதித்த புரதம், உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். அரிசி கழுவும்போது நீரில் கரையும் வைட்டமின்கள், நார்ச்சத்து என எதுவும் வீணாக்கப்படுவதில்லை. இது நம் ஜீரண மண்டலத்தையும் பாதுகாக்கும்.

 (பருகுவோம்...)

ஆரோக்கிய வாழ்வு வாழ ஆஸ்திரேலியன் ஓட்ஸும், ஐரோப்பிய ஆலிவ் ஆயிலும், அமேசான் காட்டு மூலிகையும் தேவையில்லை. சின்ன வெங்காயம், மலைப்பூண்டு, நல்லெண்ணெய், நாட்டுக் காய்கறிகள், பருவத்தில் பழுக்கும் பழங்கள் என நம்மைச் சுற்றிக் கிடைக்கும் உணவுகள்தான் நம் உயிர் பன்மயத்தை பாதுகாக்கும். பயோ டைவர்சிட்டி முக்கியம் அமைச்சரே!

காடி குழம்பு

தேவையானவை:

காடி வண்டல் - 1 கப்
மஞ்சள் கிழங்கு - சிறு துண்டு
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 1/4  தேக்கரண்டி
சீரகம் - 1 சிட்டிகை
உப்பு  - சுவைக்கு
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு, கருவேப்பிலை - தாளிக்க

செய்முறை:

மஞ்சள் கிழங்கு, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு அனைத்தையும் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து, காடி வண்டலுடன் சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு, நல்லெண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, குழம்பில் சேர்க்கவும். கைக்குத்தல் நெல்லரிசி சோறு, கம்பு சோறு, சோள சோறு, களி போன்றவற்றுக்கு சிறந்த, சுவையான குழம்பு இது.