ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

-சுபா

குணாளன் பற்றி இன்ஸ்பெக்டர் துரை அரசன் கேட்டதும், கிரிதர் பதில் சொல்லாமல் தன் கண்களைச் சற்றே மூடினார். அவருடைய மனதில் பதினைந்து வருடங்களுக்கு முன் நெல்லூரில் நிகழ்ந்த சில காட்சித் துணுக்குகள் நிழலாக வந்து போயின. புதுடெல்லியிலிருந்து புறப்பட்டிருந்த கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் களைப்பும், ஈர அழுக்குமாக நெல்லூர் ரயில் நிலையத்தில் நுழைந்தது. பிளாட்பாரத்தில் தொங்கிய வட்ட கடிகாரம் இரவு மணி இரண்டு நாற்பது என்று முட்களை கை விரித்திருந்தது.

குணாளன் வற்புறுத்திக் கலைத்த தூக்கத்திலிருந்து முழுமையாக விடுபடாதவனாக, சற்றே களைப்புடன் தள்ளாடி வாசலுக்கு வந்தான். வெளியே காத்திருந்தவன் குணாளனின் பெட்டிக்காகக் கையை நீட்டினான். “உங்களுக்கு ஆபீஸ்ல வண்டி அனுப்பியிருக்காங்க சார்...” “நான் மும்பையில ஒரு அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவன். அதை நடத்தினவங்க தமிழ்க்காரங்க. அவங்க தயவுலதான் ஸ்கூல் படிப்பு முடிச்சேன். ஸ்காலர்ஷிப்ல காலேஜ் முடிச்சேன்.

நாக்பூர்ல ஒரு ஸ்கூல்ல வேலை கிடைச்சுது. அங்க ஒரு வருஷம் குப்பை கொட்டினேன். அப்புறம்தான் கவர்மென்ட்ல கிளார்க் வேலைக்கு அப்ளை பண்ணேன். தமிழ்நாட்டுல கெடைச்சா நல்லா இருக்கும்னு ஆசப்பட்டேன். நெல்லூர்ல போஸ்டிங் போட்டிருக்காங்க...” “என்ன இடம்ப்பா இது...?” “சுடுகாடு சார். பொணம் எரியற நாத்தம்...” கனமான சுத்தியலை ஓங்கி, குணாளனின் பின்மண்டையில் அவன் விசையுடன் அடித்தான். அந்த வேகத்தில் குணாளன் குப்புறடித்து, சூடான என்ஜினில் முகம் பதிய விழுந்தான். பதறி எழுந்ததும், மீண்டும் சுத்தியல் அவன் மீது முழு வேகத்துடன் இறங்கியது.

காரிலிருந்து குணாளனை அவன் வெளியே இழுத்தான். ஏற்கனவே அங்கு எரிந்து தணலாகக் குமுறிக்கொண்டிருந்த குவியலில் கிடத்தினான். ஓரத்தில் வைத்திருந்த வரட்டிகளை எடுத்து, பரபரவென்று உடலின் மீது அடுக்கினான். கிடத்தப்பட்டிருந்த குணாளனின் உடல் மீது பெட்ரோலை தாராளமாக ஊற்றினான். குணாளன் கொண்டு வந்திருந்த பயணப்பெட்டியின் பூட்டை உடைத்துத் திறந்தான். டார்ச் வெளிச்சத்தில் அதிலிருந்த கோப்பு, டைரி, கதைப் புத்தகம் இவற்றை மட்டும் எடுத்து காரின் பின்இருக்கையில் போட்டான்.

குணாளனின் துணிகளுடன் பெட்டியை மூடினான். உயிரற்ற குணாளனின் மீது அப்பெட்டியை வைத்தான். பெட்டியின் மீதும் பெட்ரோலை அள்ளி ஊற்றினான். தீக்குச்சியைக் கிழித்துப் போட்டான். குப்பென்று எல்லாம் மொத்தமாகப் பற்றிக்கொண்டது. புகை அடர்ந்து மேலெழும்பியது. பதினைந்து வருடங்களுக்கு முன் நெல்லூரில் தன் கையால் உயிரைவிட்ட குணாளனின் முகம் கிரிதரின் மூடிய இமைகளுக்குள் ஒரு கணம் தோன்றி மறைந்தது. கண்களைத் திறந்தார்.

“அந்த குணாளன் என்ன ஆனாருனு உங்களால கண்டுபிடிக்க முடியாது, இன்ஸ்பெக்டர்... நான் சொல்லப்போறதும் இல்ல...” என்றார் தீர்மானமாக. “பிசினஸ்ல முன்னேறுறது தப்பில்ல, கிரிதர் சார்... ஆனா, நேர்மையான வழியில முன்னேற ட்ரை பண்ணினா, முக்கி முக்கி வரணும். நீங்க ராக்கெட் வேகத்துல வரணும்னு பார்த்திருக்கீங்க! லண்டனுக்கு தப்பிச்சுப் போயிட்டா, இந்திய அரசாங்கம் உங்களைக் கைது செய்யாதுன்னு ஏதோ முன்னுதாரணத்தைப் பார்த்து, நீங்களா தப்புக் கணக்கு போட்டுட்டீங்க... ஆல்ரெடி உங்க பாஸ்போர்ட்டை முடக்கச் சொல்லி, மத்திய அரசாங்கம் வரைக்கும் தமிழ்நாடு போலீஸ் தகவல் அனுப்பியாச்சு... உங்களால வெளிநாட்டுக்குப் போக முடியாது...” என்று இன்ஸ்பெக்டர் துரை அரசன் சொன்னதும், கிரிதர் அதிர்ந்து பார்த்தார்.

“உங்களை அரெஸ்ட் பண்ண உரிய வாரன்ட்டோட வந்திருக்கோம். உங்களுக்கு ஒரே ஒரு வசதி இருக்கு... மத்த டி.வி சேனல்களைவிட முந்திக்கிட்டு உங்க அரெஸ்ட் பத்தி முதல்ல எக்ஸ்க்ளூசிவ் நியூஸ் கே.ஜி. டி.வில குடுக்கலாம். அதுல ‘கே.ஜி. டிவிதான் நம்பர் ஒன்’ அப்படின்னு மறுபடியும் நிரூபிக்க வாய்ப்பு இருக்கு...” “அசிங்கப்படுத்தப் பார்க்கறீங்க..?” “நோ... நோ... உங்க பலவீனம் என்னனு சொல்லும்போது, உங்க பலம் என்னன்னும் சொல்லணும் இல்லையா..?” கிரிதர் பதில் பேசாமல், இறுக்கமான முகத்துடன் மேஜை இழுப்பறையைத் திறந்தார். அங்கிருந்த ஒரு பிஸ்டலை எடுத்தார்.

“ஐ’ம் ஸாரி..!” என்று அதன் சேஃப்டி கேட்ச்சை விடுவித்தார். துரை அரசனின் கண்கள் விரிந்தன. “போலீஸை சுட்டுட்டு, தப்பிக்க முடியும்னு நினைக்கறீங்களா..?” “இது போலீஸைச் சுடறதுக்கு இல்ல... எப்ப தப்பிக்க முடியாதோ, அப்ப என்னையே சுட்டுக்கறதுக்கு..!” என்று கிரிதர் தன் நெற்றியில் அந்த பிஸ்டலை வைத்தார். துரை அரசன் எம்பி, அவருடைய கையைத் தட்டிவிட்டார். துப்பாக்கி வெடித்தது. அங்கிருந்த லேம்ப் ஷேட் சிதறியது. இன்ஸ்பெக்டருடன் சின்னதாகக் கட்டிப் புரண்டபின், கிரிதர் அடங்கிப் போனார்.

வெளியிலிருந்து அறைக்குள் ஓடிவந்த பி.ஏ. செந்தாமரை, நிலைமையைப் பார்த்துப் பதறி நின்றார். விஜய் வந்த விமானம் நள்ளிரவு தாண்டி சென்னையைத் தொட்டது. அவனை வரவேற்க இன்ஸ்பெக்டர் துரை அரசனுடன் நந்தினியும், மரகதமும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். “த்தூ..!” என்று மனைவி துப்பியதும் கான்ஸ்டபிள் மாத்ருபூதம், தலையைக் குனிந்துகொண்டார்.

“நான் காசு கேட்டேன்யா... அதுக்காக எவனையோ சாகடிச்சு, காசு கொண்டுவர சொல்லல... தப்பு நடக்காம தடுக்கறதுக்காகத்தான இந்த உடுப்பு போடற..? நீயே தப்பு செஞ்சா..?” என்று கோபமாக ஆரம்பித்தவள் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். மாத்ருபூதம் கண்களைத் துடைத்துக்கொண்டு, “போலாம் சார்...” என்றார், சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரிடம். சின்னதுரை, ரிக்கி, தீபக் தர்மசேனா, இன்னும் அந்த நெட்வொர்க்கில் பல்வேறு புள்ளிகளில் இயங்கிக்கொண்டிருந்த பலரும் கோர்ட்டில் தங்கள் வாக்குமூலங்களை அளிப்பதற்குத் தயாரானார்கள்.

விஜய் வீட்டில் கொண்டாட்டம் போல் அவர்கள் கூடியிருந்தனர். மரகதம் அவனுக்கெதிரில் சப்பணமிட்டு அமர்ந்து அவன் சொல்வதையே கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். “சில சமயம் ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினைச்சு, அடிமுட்டாள்தனம் பண்றவங்க இருக்காங்க... அதைத்தான் பண்ணிட்டாரு என் முதலாளி. என்னை மாட்டி விடணும்னு நினைச்சு, என்னை வலிய அமெரிக்காவுக்கு அவரே அனுப்பினாரு... யார் யாரெல்லாம் கொள்ளையடிச்ச சிற்பங்களை வாங்கி விக்கறாங்களோ, அதையெல்லாம் வெச்சு மியூசியம் வெச்சிருக்காங்களோ, அவங்க கூடல்லாம் எனக்குத் தொடர்பு வர்ற மாதிரி பார்த்துக்கிட்டாரு... ஆனா, அத்தனையும் அவருக்கு எதிரான ஆதாரமா திரும்பும்னு அவர் நினைச்சிருக்க மாட்டாரு..!” என்றான் விஜய்.

“இது சர்வதேச குற்றம்னு நிரூபிக்கறதுக்காகவே, அமெரிக்காவுலேர்ந்து நீ, இந்தியாவுலேர்ந்து நான், ஜெயசூர்யா, துரை அரசன்னு எல்லாரும் இழுத்துப் போட்டுட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது...” என்று நந்தினி சொன்னாள். “இன்னொரு பெரிய ஷாக்... நாம பெரிசா நம்பிட்டிருந்த டிரைவர் பிரகாஷ், எம்.டி.யோட கையாளா நடந்துக்கிட்டதுதான். கொள்ளையடிக்கறதுக்கு ஹோண்டா காரைத் திருட்டு கொடுக்கறதுல ஆரம்பிச்சு, எவ்வளவு விஷயம் எம்.டி.க்கு சாதகமா பண்ணியிருக்காரு தெரியுமா? அவரையும் அரெஸ்ட் பண்ணியாச்சுனு இன்ஸ்பெக்டர் சொன்னாரு...”

“எம்.டி. மேல உனக்கு சந்தேகம் வரக்கூடாதுனு அவரா வலியக் கூட்டிட்டுப் போய் முரளிதரன் பத்தி சொல்லி உன்னைக் குழப்பினாரா..?” “ஆமா... இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கல...” என்றான் விஜய். “கல்யாணி குறிப்பிட்ட அந்த ‘எம்’ யாருன்ற கேள்வியைத்தானே சொல்றே..?” “ஆமாம்... முரளிதரன் பூடகமா அன்னிக்கே சொன்னாரு! ‘எம்னா மாங்கா மடையனா இருக்கலாம், எம்.டியா கூட இருக்கலாம்’னு... நான்தான் அலட்சியப்படுத்திட்டேன்!” “ஏன்னா, நீ ஒரு மாங்கா மடையன்...” என்று மரகதம் சிரித்தாள்.

கல்யாணியின் வீடு. வாசலில் வாகனம் வந்து நிற்கும் ஒலி கேட்டு, அவளுடைய பெற்றோர் ஜன்னல் வழியே பார்த்தார்கள். காரிலிருந்து இன்ஸ்பெக்டர் துரை அரசன் இறங்கினார். அவர் சீருடையில் இல்லை. சீருடை அணியாத இரண்டு கான்ஸ்டபிள்கள் இருபுறமும் புடை சூழ்ந்து வர, கிரிதர் உள்ளே நுழைந்தார். “வணக்கம்..!” என்று கைகூப்பினார். மாலையிட்ட கல்யாணியின் புகைப்படத்தின் அருகில் போய் நின்றார். அவர் கண்கள் கலங்கின.

“ஸாரி கல்யாணி..!” என்றார். அவளுடைய பெற்றோர் பக்கம் திரும்பினார். “கல்யாணி வயித்துல அவ சாகும்போது நாப்பது நாள் கரு இருந்தது, அதைக் குடுத்தது யாருனு தெரியாம தவிச்சிட்டு இருப்பீங்க. தப்பு செய்ஞ்சவன் சொல்றவரைக்கும் உண்மை யாருக்குமே தெரியாதுன்னு எனக்குப் புரிஞ்சுது. திடீர்னு நைட் என் கனவுல கல்யாணி வந்தா... ‘எனக்கு துரோகம் பண்ணின உங்களைப் பழிவாங்குவேன்’னு சொன்னா. அதுக்கப்புறமும் உங்ககிட்ட வந்து மன்னிப்பு கேக்கலைனா எனக்கு மன்னிப்பே கிடைக்காதுனு தோணுச்சு. போலீஸ்கிட்ட பர்மிஷன் வாங்கி நேரா வந்தேன்...” என்றார் கிரிதர்.

கல்யாணியின் அம்மா அவரை நெருங்கி, கன்னத்தில் படீர் என்று அடித்தாள். “பாவி..! அவளைக் கொலை பண்ணதும் நீதானா..?” கிரிதர் தலையைக் குனிந்துகொண்டார். “ஊரறிய என் குழந்தைக்கு அப்பன் நீங்கதான்னு தைரியமா சொல்லணும்னு அவ சொன்னா. எனக்கு அந்த தைரியம் இல்ல... அதான் கோழையா அந்த முடிவு எடுத்தேன்... மன்னிச்சுருங்க...” கிரிதர் ‘போகலாம்’ என துரை அரசனிடம் சைகை செய்தார். போலீஸ் வாகனத்தில் ஏறிய பின்னரும், அந்த வீட்டிலிருந்து வெடித்துக் கிளம்பிய அழுகைக் குரல் அவரைத் துரத்தியது.
போலீஸ் கமிஷனர், துரை அரசனைக் கூப்பிட்டு அனுப்பினார்.

“பாராட்டுகள் துரை அரசன்! ரொம்பப் பெரிய நெட்வொர்க்கை சூப்பரா உடைச்சு இருக்கீங்க... உங்களுக்கு டிபார்ட்மென்ட்ல ஒரு இன்க்ரிமென்ட் உண்டு. சீக்கிரமே ப்ரமோஷன் உண்டு. அதுக்கு முன்னால, இந்த ஞாயித்துக்கிழமை ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கேன்... குடும்பத்தோட வந்து கலந்துக்குங்க...” என்று மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார். “சார், ஞாயித்துக்கிழமை மட்டும் வேண்டாம்...” என்று துரை அரசன் தயங்கி இழுத்தார். “ஏன் துரை அரசன்..?” “அன்னிக்கு நான் ஒரு முக்கியமான கல்யாணத்துக்குப் போக வேண்டியிருக்கு...” என்றார் துரை அரசன்.

தமிழ்நாடு போலீஸ் கொடுத்த விவரங்களைக் கொண்டு, இந்தியக் கோயிலின் சிற்பங்கள் முறைகேடாக வாங்கப்பட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியது. பெரும்பாலான வெளிநாட்டு அரசாங்கங்கள் அந்தச் சிற்பங்களை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மக்களவையில் அறிக்கை வெளியிட்டார்.

பஞ்சலோக நடராஜர் சிலையைப் பறிகொடுத்த அரவமணி நல்லூர் அமிர்த லிங்கேஸ்வரர் ஆலயம். மூலவர் சன்னிதி. விஜய், நந்தினி இருவரும் பட்டு உடுத்தி, மார்பில் புரளும் புதிய மணமாலைகளுடன் கைகளைக் கூப்பி நின்றிருக்க, மரகதம், மலர்ந்த முகத்துடன் சந்தோஷத்தில் கலங்கிய கண்களுடன் நந்தினியை ஒட்டி நின்றிருந்தாள். கோயிலில் எளிமையான திருமணம். விழுப்புரத்தில் மாலை வரவேற்பு என்று ஏற்பாடு.

விழுப்புரம் திருமண மண்டபம். வரவேற்பு ஏற்பாடுகள் அமர்க்களமாயிருந்தன. அரவமணி நல்லூரில் விசாரணையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், குருக்களின் மனைவி, அவருடைய சிறு மகள் ஆகியோரும் அந்தத் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார்கள். துரை அரசன், புது தம்பதிகளுக்குத் திருமணப் பரிசாக அளித்தது, அரவமணி நல்லூர் நடராஜரின் பெரிய அளவு ப்ளோ அப். அலங்காரமாக ஃப்ரேம் செய்யப்பட்ட அந்தப் புகைப்படம் பல நினைவுகளைக் கிளறும் என்று தெரிந்தும், விஜய்யும், நந்தினியும் புன்னகையுடன் ஏற்றார்கள்.

“எனக்கு இப்பதான் நிம்மதி” என்றாள் மரகதம். “என்னம்மா..?” என்று கேட்டான், விஜய் கழுத்திலிருந்து மாலையைக் கழற்றிக்கொண்டே. “தினம் ஜொள்ளு விட்டு ஈரமாக்கிட்டிருந்தியே... அந்தத் தலகாணி உறையெல்லாம் இனிமே க்ளீனா இருக்கும்!” “அதான் இல்ல...” என்றான், விஜய். “கே.ஜி. டி.வி லைசன்ஸே கேன்சலாயிரும் போல இருக்கு. டி.வியை மூடிட்டா, எனக்கு வேலை போயிடும்... நந்தினி வேலைக்குப் போயிடுவா... நான் வீட்ல பகல்லயும் தூங்கிட்டிருப்பேன்..” “செருப்பு பிஞ்சிரும்...” என்றாள், மரகதம். “ரோடு ரோடா வண்டி தள்ளிட்டுப் போய் வேர்க்கடலையாவது வித்துட்டு வாடானு தொரத்திருவேன்..”

“பாரு நந்தினி... எங்கம்மா என்னை அடிப்பேன்ங்கறாங்க!” “இதுவரைக்கும் மத்தளத்துக்கு ஒரு பக்கம்தான் இடி... இனி ரெண்டு பக்கமும்... ஞாபகம் வெச்சுக்க” என்றாள் நந்தினி, மரகதத்தின் தோளில் தன் முகவாயை ஊன்றிக்கொண்டு. “கல்யாணம் ஆனா மட்டும் என் ராசி எப்படி மாறும்..? உலகத்துல இருக்கற அத்தனை பொம்பளைங்களும் எனக்கெதிரா கட்சி ஆரம்பிச்சவங்கதானே..?” என்று விஜய் கைகளை விரித்தான்.

(முற்றும்)

ஓவியம்: அரஸ்