தீர்ப்பு
யுவகிருஷ்ணா
‘‘நந்தினியை ஏன் சாகடிச்சீங்க?’’ நீதிபதியின் இக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை வெங்கட். ‘‘‘எனக்கு வேற வழியே தெரியலை யுவர் ஆனர்...’’ ‘‘இதனால எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்கன்னு தெரியுமா?’’ ‘‘தெரியும்... ஆனா நந்தினி உயிரோட இருந்தா பிரச்னை வளருமே தவிர குறையாது! ஏற்கனவே அவ ஒரு பணத்தாசை புடிச்ச பேய். இதுல அவளை இன்னும் வளரவிட்டா சுத்தியிருக்கிற எல்லாருக்குமே கஷ்டம்!’’ ‘‘இருக்கலாம் மிஸ்டர் வெங்கட். ஆனா நந்தினி இப்படி உருவானதுக்கு நீங்கதானே மூல காரணம்..?’’
 ‘‘உண்மைதான். அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி... வேகம், பரபரப்பு, எதிர்பார்ப்புன்னு நிக்காம ஓடிக்கிட்டிருந்த காலம் அது. இதுக்கு மேலேயும் நந்தினியை உயிரோட விட்டா, எனக்கே வெறுப்பாயிரும். அதான் கொன்னேன்... இப்போதான் நான் நிம்மதியா இருக்கேன்!’’ ‘‘பட்... ஜனங்க இந்த கொடூர சாவை விரும்பலையே! அதுக்கு என்ன செய்யப் போறீங்க?’’
‘‘எனக்கும் வருத்தம்தான்... என்ன செய்யறது?’’ ‘‘அடுத்து நீங்க எடுக்கப் போற ‘அழகே அமுதா’ மெகா சீரியல்ல அவங்களைத்தான் மெயின் ஹீரோயினா போடப் போறீங்க... இது என் தீர்ப்பு!’’ பிரபல சீரியல் நடிகை சுஷ்மா, வில்லி நந்தினியாக நடிச்ச ‘ஆசை நாயகி’ மெகா தொடரில் நந்தினியை சாகடித்து சீரியலை திடீரென்று முடித்ததால் இயக்குனர் வெங்கட் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி சமரசத் தீர்ப்பு வழங்கினார்.
|