தொழில்
வெ.தமிழழகன்
விதவிதமான அந்த ஓவியங்களைப் பார்த்துக் கூசிப் போயிருந்தாள் பார்வதி. எல்லாமே ‘அந்த மாதிரி’யான ஓவியங்கள்! அவள் கணவன் சேகர் வரைந்தது.
 மும்பையிலிருக்கும் ஒரு காலண்டர் கம்பெனியிலிருந்து இருபதாயிரம் ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள். செக்கைப் பார்த்தபோது பார்வதிக்கு கிடைத்த மகிழ்ச்சி... ஓவியங்களைப் பார்த்தபோது, சட்டென காணாமல் போயிற்று! காரணம்... சேகர், மாடலிங் பெண்களை தன்முன் நிற்கவைத்து அரைகுறையாகவும் சில சமயம் முழு நிர்வாணமாகவும் வரைய வேண்டியிருக்கிறது.
முனிவர்களே பெண் அழகில் மயங்கியிருப்பதாகப் படித்திருக்கிறாள். சபலம் தன் கணவனை மட்டும் விட்டு வைத்திருக்குமா? ‘எத்தனை பெண்களை அவன்...’ என நினைக்கும்போதே, அவளுக்குள் தவிப்பு மூண்டது. கேட்கவும் துணிவில்லை. தங்கையின் திருமணத்துக்கு இருவரும் வந்திருந்தார்கள். சமையலுக்கான பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘‘சமையல் சூப்பர்...’’ என்று கல்யாணத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் சமையல்காரரைப் பாராட்டிப் பேசினர். ஆனால் அவரோ வீட்டிலிருந்து எடுத்து வந்த ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
‘‘ஏன் இதை சாப்பிடுகிறீர்கள்?’’ என்று அவரிடம் கேட்டாள் பார்வதி ‘‘எனக்கு இது தொழில். ஹோட்டல் வைத்திருப்பவர், தன் மனைவி கையால் சாப்பிடவே விரும்புவார். அதுமாதிரிதான். சமைப்பதையெல்லாம் நான் சாப்பிட முடியுமா? எனக்குப் பிடித்ததை மட்டும்தான் சாப்பிடுவேன்’’ என்றார். பார்வதிக்குள் பளீரென ஒரு மின்னல். சேகரின் கரங்களை அழுந்தப் பற்றினாள். அவள் உதட்டில் அர்த்தப் புன்னகை!
|