ஜனாதிபதி சம்பளம் எகிறுது!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதால், அரசு ஒரு தர்மசங்கடமான சூழலை சந்தித்தது. மத்திய அரசு வெளியிடும் அனைத்து அறிவிப்புகளும் ஜனாதிபதி பெயரால்தான் வெளியிடப்படும். முப்படைகளுக்கும் அவரே தலைவர். மத்திய அமைச்சரவை எடுக்கும் எல்லா முடிவுகளும், அவர் ஒப்புதல் தந்தால்தான் சட்டமாகும். ஆனால் அவரைவிட மத்திய அரசு அதிகாரிகள் பலரின் சம்பளம் அதிகம்.
 இந்திய ஜனாதிபதியின் இப்போதைய மாதச் சம்பளம், 1.5 லட்சம் ரூபாய். ஆனால் மத்திய கேபினட் செயலாளர் இதைவிட ஒரு லட்ச ரூபாய் அதிக சம்பளம் வாங்குகிறார். மத்திய அரசின் செயலாளர்களுக்கு 2.25 லட்ச ரூபாய் சம்பளம். இப்படி ஜனாதிபதியைவிட அதிக சம்பளம் வாங்கும் பலரும், அவரின் உத்தரவுகளுக்கு எப்படி கீழ்ப்படிந்து நடப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்?
எனவே, வேறு வழியின்றி ஜனாதி பதியின் சம்பளத்தை உயர்த்தப் போகிறார்கள். இப்போதைய 1.5 லட்சத்தைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக 5 லட்ச ரூபாய் மாதச் சம்பளம் வாங்கப் போகிறார் ஜனாதிபதி. வரும் ஜனவரி முதல் இது அமலுக்கு வரும். சம்பளம் உயர்வதால் பென்ஷனும் உயர்கிறது. மாதம் 1.5 லட்ச ரூபாய் பென்ஷன். ஜனாதிபதியின் மனைவிக்கு 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். துணை ஜனாதிபதிக்கு இப்போது தரப்படும் சம்பளம் 1.10 லட்சம். இது மூன்றரை லட்சமாக உயர்கிறது.
கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதிக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. 50 ஆயிரம் ரூபாயிலிருந்து மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில் மேலும் மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்த்த வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. வழக்கமாக இப்படி உயர்த்தும்போது பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் சம்பளமும் உயர்வது வாடிக்கை. எனவே, நாடாளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையும் எழக்கூடும்.
பல முன்னேறிய நாடுகளில் அரசு பதவிகளுக்கு பெரும் சம்பளம் கொடுக்கிறார்கள். ‘அரசியல் பதவிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்தால்தான் ஊழல் நடக்காது’ என்ற கொள்கையுள்ள சிங்கப்பூரில் அதிபரின் ஆண்டுச் சம்பளம் 11 கோடியே 20 லட்ச ரூபாய். அமெரிக்க அதிபரின் ஆண்டுச் சம்பளம் 2 கோடியே 66 லட்ச ரூபாய். ஒப்பிட்டால் இந்திய சம்பளம் குறைவு தான்!
ஆனால், ‘மத்திய அரசு அதிகாரிகளைவிட ஜனாதிபதியின் சம்பளம் குறைவாக இருக்கலாம். ஆனால் மாபெரும் மாளிகை வாசம், பணியாளர் பட்டாளம், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், இதர வசதிகள் எத்தனை! இதையெல்லாம் கணக்கு பார்க்கலாமே’ என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை!
- எஸ்.உமாபதி
|