உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

கனவை விட வாழ்க்கை அழகு! ‘வாழ்க்கை இப்படியாக இருந்தால் இனிதாகுமே’ என்று அதுவரை கிட்டாத, அடைய விரும்பும் ஒன்றை கற்பனை செய்வதை, ‘விழித்தபடி காணும் கனவு’ என எளிய மொழியில் சொல்கிறோம். இது உறக்கத்தில் வரும் கனவோடு தொடர்புடையதன்று. இந்தக் கனவுகள் மகிழ்ச்சியோடு நேரடித் தொடர்பு கொண்டவை. காரணம், நாம் எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அப்படியாகக் கற்பனை செய்வதால், இயல்பாகவே மகிழ்ச்சியூட்டும் தன்மையுடையதாய் அமைந்துவிடுகிறது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை மகிழ்வானதா? அல்லது, ‘இப்படி வாழவேண்டும்’ எனும் கனவு மகிழ்வானதா? இப்படி ஒப்பீடுகள் வரும்போது, கனவே அழகானதாய்த் தோற்றமளிக்கும். நாம் உருவாக்கும் கனவுகளில், நெருப்பிலிருந்து நீர் சுரக்கவும், பாறையில் வேர் பாய்ச்சவும், நீரில் நடக்கவும், காற்றில் பறக்கவும் அனுமதிகள் உண்டு. கனவில் எய்தும் மகிழ்ச்சியின் ருசி, கனவின் எல்லைகளை தான் விரும்பும் வரைக்கும் விரிவாக்கம் செய்யும் மாயம் புரியும்.

ஏதோ ஒன்றின் போதாமையை நிறைவு செய்ய, போதையில் தன்னை மறக்க, சுகம் தருவிக்க... இப்படிப் பல காரணங்களுக்காக உருவாக்கும் கனவுகளே இங்கு அதிகம். எவரும் தான் வாழும் வாழ்க்கையைவிட சற்றும் குறைவானதை விரும்பவோ, கற்பனை செய்திடவோ மாட்டார்கள். அப்படியாகக் கற்பனையில் நாம் உருவாக்கும் கனவு உலகத்தைவிட மகிழ்ச்சிகரமானதாக எது இருந்து விட முடியும்? அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாகக் குடியேறியிருக்கும் கிரேஸ், அச்சுவை எதிர்பாராமல் சந்திக்கிறார்.

கிரேஸைக் கண்ட அதிர்ச்சியில் அச்சுவிற்கு இரண்டாம் முறையாக மாரடைப்பு வருகிறது. அங்கிருப்பவர்களின் உதவியோடு அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, கலங்கிய மனதோடு வீடு திரும்பும் கிரேஸிற்காக காத்திருக்கிறார், பக்கவாதம் தாக்கியிருக்கும் ஓய்வுபெற்ற தத்துவப் பேராசிரியரான கணவர் மேத்யூஸ். எல்லாவற்றிலும் யாரேனும் உதவி செய்ய வேண்டிய நிலையில் சக்கர நாற்காலி வாழ்க்கை. படுக்கையில் முடங்கும் மனைவியிடம், ‘‘என்னாச்சு உனக்கு? குட் நைட் சொல்லல, பிரார்த்தனை செய்யல, முத்தமும் தரல” என்கிறார். கிரேஸ் அழுகையினூடே மேத்யூஸை அணைத்தபடி, “மாரடைப்பு வந்தது ‘அச்சு’விற்கு” என்கிறார்.

கிரேஸும், அச்சுவும் நாற்பதாண்டுகளுக்கு முன்பு காதலித்து மணம் முடிக்கிறார்கள். மகன் பிறந்த நிலையில் மணமுறிவு நிகழ்கிறது. குழந்தை அப்பாவோடு செல்கிறான். மேத்யூஸ் உடன் கிரேஸுக்கு இரண்டாம் திருமணம் நிகழ்கிறது. மகள் பிறக்கிறாள். அந்த வாழ்க்கைக்குள் பாந்தமாய், அன்பாய், காலம் அவரைப் பொருத்துகின்றது. மகனை ஆளாக்கி, குடும்பமாக உருவாக்கிய அச்சு, மாரடைப்பு வந்த காரணத்தால் கிராமத்திலிருந்து மகன் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்.

பிரியத்துக்குரிய மகன் வெளிநாட்டில் பணியாற்ற, இங்கு மருமகள், பேத்தியுடன் தங்கியிருந்த நிலையில்தான் அச்சுவிற்கு இரண்டாம் முறை மாரடைப்பு வருகிறது. மருத்துவமனையில் இருக்கும் அச்சுதமேனனின் நலம் குறித்து விசாரிக்க, விடிந்ததும்  அவருடைய மகன் வீட்டிற்குச் செல்கிறார் கிரேஸ். அங்கிருக்கும் ‘அச்சு’வின் மருமகளிடம், அவள் கணவனின் தாய் தான்தான் என்பதை உணர்த்துகிறார். அதோடு மருத்துவமனைக்குச் சென்று காத்திருந்து, தன் முதல் கணவனையும் சந்திக்கிறார்.

ஓரிரு நாட்கள் கடக்கின்றன. மேத்யூஸோடு மனம் நெகிழ்ந்திருக்கும் தருணத்தில், ‘‘அச்சு மீது நான் கூடுதல் அக்கறை செலுத்துவது குறித்து மனதில் எதும் தோன்றுகிறதா?” என கிரேஸ் கேட்க, “எனக்கு முன்பே உன் உடலையும் மனதையும் உணர்ந்தவர்தான் மருத்துவமனையில் கிடக்கும் மனிதன். அதை உணரும் பக்குவம் எனக்கிருக்கிறது. எவ்வளவு முயற்சியெடுத்தாலும் உண்மைகளை மறக்க முடியாது. கவலை வேண்டாம், பாஸ்ட் மீன்ஸ் எ பக்கெட் ஆஃப் ஆஷஷ்.

என்னைவிட யாரும் உன்னைக் கூடுதலாக நேசிக்க முடியாது. இந்த இரண்டு நாட்களாய் என்னை எப்போதையும்விடக் கூடுதலாய் நீ நேசிக்கிறாய். அந்த மனிதனைக் கண்டதிலிருந்து என் மீது மிகக்கூடுதலான அக்கறை கொண்டிருக்கிறாய்” என மனைவியைத் தேற்றுகிறார் மேத்யூஸ். முதல் கணவனை நாற்பதாண்டு காலம் கழித்து சந்தித்ததில் அன்பு வயப்படும் கிரேஸ், அந்த அன்பு முழுவதையும் தன் கணவன் மேத்யூஸ் மீதே அவரையுமறியாமல் பொழிகிறார்.

அச்சு குணமடைந்து வீட்டிற்குத் திரும்புகிறார். கிரேஸ், அச்சு இடையே நிகழும் சந்திப்புகள் அவர்களுக்கு மிகப் பிடித்தமானவையாக இருக்கின்றன. நடைப்பயிற்சி நேரங்களில் சந்தித்து நினைவுகளை மீட்பதும் உரையாடுவதுமாய் தொடர்கின்றனர். அவர்களுக்குப் பிடித்தது, இருவரின் பிள்ளைகளுக்கும் பிடிக்காததாகிறது. அவர்களின் உறவு இரண்டு குடும்பங்களிடையே ஒருவித ஒவ்வாமையைத் தருகின்றது. எதிர்ப்புகளைப் பலவிதங்களில் காட்டுகின்றனர்.

கிரேஸை அழைத்து கோபத்தையும் அவமானத்தையும் கொட்டி, ‘‘என் தந்தையை சந்திக்கவும், பேசவும் கூடாது’’ என்கிறான் மகன். ‘‘என் மனைவி இரண்டாம் திருமணத்தில் பிறந்தவள் என்பதை நினைக்க அவமானமாய் இருக்கிறது’’ என்கிறான் மருமகன். கிரேஸின் மனதை மிக நேசிப்பாகப் புரிந்துகொள்கிறார் மேத்யூஸ். எல்லாக் காயங்களிலும் தம் அன்பாலும் அணைப்பாலும் மருந்திடுகிறார். கிரேஸின் வலிகளைப் போக்கும் பிரயத்தனங்களை எடுக்கிறார்.

மேத்யூஸ், அச்சு இடையே நட்பு துளிர்க்கிறது. மூவருக்குமிடையே மலரும் அந்த அழகிய நட்பு, இரண்டு குடும்பங்களிலும் கூடுதல் கோபத்தை உண்டாக்குகின்றன. ஒருவரோடு ஒருவர் அன்பு பாவித்தலில் இன்னொருவருக்கு வெறுப்பு கூடும் மன வேதியியல், எப்போதுமே புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம்தான்.

அவர்களின் உறவுநிலை தெரிந்து குடியிருப்பு முழுவதும் பேச்சு எழுவதாகவும், அவமானமாக இருப்பதாகவும் மகள் குற்றம் சாட்டுகிறாள். ‘‘அப்பாவுக்கு இயலாததால் இன்னொரு ஆணின் உறவைத் தேடுவதாக எல்லோரும் பேசுகிறார்கள்’’ என சீறும் மகளிடம், ‘‘கணவன் உடனிருக்க, இரண்டாம் முறை மாரடைப்பு வந்தவரிடம், அறுபது ஆண்டுகளைக் கடந்த நான் என்ன தேடிவிடப்போகிறேன்” எனக் கதறுகிறார். ஆண்-பெண் உறவுகளை, உடலோடு மட்டுமே இணைத்துப் பார்த்து காமமும் கள்ளமும் என வகைப்பாடு செய்யும் சமூகத்தின் நோய்மை மனோபாவத்திற்கு எதிரான கதறல் அது.

இரு குடும்பங்களின் இறுக்கத்தில் மூச்சுத் திணறும் மூவரும் ஒரு விடுபடலை விரும்புகிறார்கள். ஒரு வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு பயணம் துவங்குகிறார்கள். பயணத்தின் தருணங்களைக் கொண்டாடுகிறார்கள். விதவிதமான சூழல்களில் புழங்குகிறார்கள். ஆடிப் பாடித் திளைக்கிறார்கள். அப்படியான அழகிய தருணமொன்றில், ஒரு அலையடிக்கும் கடற்கரை மணலில் உரையாடுகிறார்கள்.

அந்தக் கணத்தின் இனிமையை முழுவதும் அனுபவிப்பவராக, வாழ்தலை ருசிப்பவராக, நிகழ்காலத்தின் மீதிருக்கும் புகார்களைத் தள்ளுபடி செய்தவராக, ‘‘கனவை விடவும் வாழ்க்கை மிக அழகானது!” என்கிறார் மேத்யூஸ். 2011ம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘பிரணயம்’ ஒரு பெண்ணிற்கு தன் முன்னாள், இந்நாள் கணவர்களுடன் அவளின் முதிர் காலத்தில் நிகழும் அன்பு குறித்துப் பேசுகிறது.

நமக்கு அவ்வளவாக அனுபவப்பட்டிராத, புரிந்துகொள்ளச் சிரமப்படும் வாழ்க்கையும், பிரியமும் குறித்துச் சிக்கலான முடிச்சுகளும், விடுவிப்புகளுமாய் அதில் நிறைந்திருக்கின்றன. அத்தோடு ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் என்பதும் உணர்த்தப்படுகிறது. புரிதலின்மையிலும், தவறாகப் புரிந்துகொள்ளலிலும்தான் வாழ்வைப் பல நேரங்களில் பாழ்படுத்துகிறோம்.

ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுவது ஒரேயொரு பிறப்பும் மரணமும். இரண்டுக்குமான இடைவேளைக்குள் உறவுகளோடும், உணர்வுகளோடும், உரிமைகளோடும், தெரிவுகளோடும் இசைவாய் பயணித்துவிடல் எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. கனவுகளில் வேண்டுமானால் சாத்தியப்படலாம். அதே சமயம் ‘கனவை விடவும் வாழ்க்கை மிக அழகானது’ என்கிற அந்த வசனம், மிகப்பெரிய மன எழுச்சியை ஏற்படுத்துகிறது.

மிளிரும் கனவுகள் வாழ்க்கையைவிட அழகியதாய், மகிழ்வானதாய்த் தெரியலாம். அது கானல் நீர் போன்றது. கனவுகள் நிரந்தரமானவையல்ல. வரலாற்றை உருவாக்கவோ, அதில் இடம் கொண்டாடவோ முடியாது. ஒருவேளை ஊக்குவிப்பாய் அமையலாம். கனவென்பது ஆசை, பெருவிருப்பம், தேடல், மகிழ்ச்சி தரும் ஒரு வஸ்து. வாழ்தலென்பது ரத்தமும் சதையுமாக, காற்றும் நீருமாக, மண்ணும் நெருப்புமாக, உயிரும் உறவுமாக நிகழும் நிஜம். வாழ்தல் காலம் பேசும் வரலாறு.

நினைப்பதை நிகழ்த்த, நிகழ்வதை ஏற்றுக்கொள்ள, சிலவற்றைக் கடந்து செல்ல வாழ்தலில் கதவுகள் வாய்த்திருக்கின்றன. வாழ்தலின் மிகப்பெரிய பலம், அது மெய்யானது என்பதே. விருப்பத்திற்குரியதோ, இல்லாததோ, வாழ்க்கையை மகிழ்வாய் உணர்வதும், கருதுவதும், கழிப்பதும் அவரவரின் தெரிவுகளே. வாழ்தல் என்பதே ஆகச்சிறந்த அறம்.

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி