கவிதைக்காரர்கள் வீதி



எங்கோ பெய்த மழையை
என் ஜன்னலில்
விசிறிச் செல்கிறது
ஒரு சின்ன குருவி.
- எம்.ஸ்டாலின் சரவணன், கரம்பக்குடி.

கெட்டவர்கள்
அரிதாரம் பூசுவதில்லை
நல்லவர்கள்
முகமூடியைக் கழற்றுவதில்லை.
- ப.மதியழகன், மன்னார்குடி.

துரோகத்தின் வாசனை
விரவிக் கிடக்கிறது
பிரிவிற்கான
சாளரம் கொண்டு
எழுப்பப்படும்
ப்ரியத்தின் கூடெங்கிலும்...
- சக்தி கிரி, சிந்தம்பாளையம்மேடு.

தட்டாம்பூச்சி
தூக்கிச் செல்லும்
இரையின் சுமை
கால்களில் மட்டுமல்ல
சிறகுகளிலும் இருக்கிறது
குழந்தைகள் தூக்கிச் செல்லும்
புத்தகச் சுமை
தோள்களில் மட்டுமல்ல
மனங்களிலும் இருக்கிறது
- நாகேந்திர பாரதி, சென்னை-24.

மழைக்குப் பிறகான பொழுதில்
மரத்தினடியில் நின்றிருந்த என்மீது
மரம் தேக்கி வைத்திருந்த நீரை
சிறுமழையெனப் பொழிந்தது
கிளையொன்றில் வந்தமர்ந்த பறவை.
பறவைகளாலும் மழை பொழியலாம்!
- கீர்த்தி, சென்னை-99.