92 பைசா பிரீமியம்... 10 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ்!



சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அந்த பயங்கரச் சம்பவம் எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.  மாம்பலம் ரயில் நிலையத்தில் அவசரமாக இறங்கும்போது கையிலிருந்த  தனது குழந்தையை  எதிர்பாராமல் அம்மா தவறவிட, ரயிலின் அடியில் விழுந்து பரிதாபமாக இறந்து போனது குழந்தை! இந்த விபத்தில் குழந்தையின் அம்மாவுக்கு ஒரு கால் முழுவதும் சேதமடைந்தது. இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... நிறைய அசம்பாவிதங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன.

கடந்த 2014ம் ஆண்டு மட்டுமே நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் ரயில் தொடர்பான விபத்துகளில் இறந்துள்ளதாகவும், 3 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது தேசிய குற்ற ஆவணச் செயலகத்தின் குறிப்பு! இதில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசு, தற்போது ரயில் பயணிகள் மேலும் பலன் பெற ‘புதிய பயண இன்சூரன்ஸ் திட்டம்’ ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது. ‘வெறும் 92 பைசா செலவழித்தால் போதும்... பத்து லட்ச ரூபாய் வரை இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்’ என்பது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் ஹைலைட்!

‘‘இது ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த திட்டம். கடந்த 31ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துவிட்டது. இந்தப் புதிய பயண இன்சூரன்ஸ் திட்டம், ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ஆன்லைனில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்’’ என்கிறார் ‘வெல்த் லேடர்’ நிறுவனத்தின் நிதி ஆலோசகர்  தரன். அவர், இதிலுள்ள ைஹலைட்டான விஷயங்களை விளக்கினார்.

‘‘இந்தக் காப்பீட்டுத் திட்டம் அந்தந்த ரயில் பயணத்தின்போது மட்டுமே செல்லுபடியாகும். ஒவ்வொரு ரயில் பயணத்தின்போதும் இந்த இன்சூரன்ஸ் எடுக்கும்படி செய்திருக்கிறார்கள். இதைப் பயணிகள் கட்டாயம் எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இது ஒரு ஆஃபர் மட்டுமே! ஐ.ஆர்.சி.டி.சியின் இணையதளம் வழியே டிக்கெட் எடுக்கும்போது, தானாகவே இந்த ஆப்ஷன் பயணிகள் முன் வைக்கப்படுகிறது. தேவை என நினைப்பவர்கள் இந்த ஆப்ஷன் பட்டனில் ‘யெஸ்’ செய்யலாம். இல்லையெனில் ‘நோ’ கொடுத்துவிட்டு தொடர்ந்து உள்ளே செல்லலாம்’’ என்கிறவர், தொடர்ந்தார்.

‘‘ரயில் பயணத்தின்போது நிகழ்கின்ற விபத்து அல்லது அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்தாலோ அல்லது முழுமையாக செயலிழந்தாலோ இந்தக் காப்பீட்டின் மூலம் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். கை, கால் என பகுதியாகச் செயலிழந்தால் ரூ. 7.5 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். இதுதவிர, மருத்துவமனைச் செலவுகளுக்கு ரூ.2 லட்சமும், விபத்து எங்கு நடந்ததோ அங்கிருந்து இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல போக்குவரத்து செலவுக்கென பத்தாயிரம் ரூபாயும் கிடைக்கும்.

தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை, வன்முறை, தீ வைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்படும் ரயில் பயணிகளும் இதன் மூலம் இழப்பீடு பெறலாம். கன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் ஆகியவற்றில் இருக்கும் பயணிகளுக்கும் இது பொருந்தும். ஆனால், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், வெளிநாட்டினருக்கும், புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுப்பவர்களுக்கும் பொருந்தாது.

அதேபோல், நீங்களாக கேன்சல் செய்யும் டிக்கெட்டுகளுக்கு இந்த 92 பைசா பிரீமியம் திருப்பித் தரப்படாது. ஒருவேளை டிக்கெட் இணையதளத்தில் கிடைக்காமல், தானாகவே கேன்சலாகும்போது அந்தப் பிரீமியத் தொகை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்குக்கு ரயில்வேயின் பிடித்தம் போக வழக்கம்போல் வந்துவிடும் எனவும் ஐ.ஆர்.சி.டி.சி. தெளிவுபடுத்தி இருக்கிறது. இதற்காக ரயில்வே நிர்வாகம் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட், ஸ்ரீராம் ஜெனரல், ராயல் சுந்தரம் ஆகிய மூன்று இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஒருவேளை அசம்பாவிதம் நேர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் காப்பீடு செய்திருந்தால், இழப்பீட்டுக்கான பணம் இந்நிறுவனங்கள் வழியாக வேகமாகக் கிடைத்துவிடும்’’ என்கிறார் ஸ்ரீதரன் நிறைவாக!

- பேராச்சி கண்ணன்