சிலை கடத்தல்



A to Z நெட்வொர்க்

அறைகளைத் திறக்க திறக்க குவிந்து கொண்டே இருக்கின்றன சிற்பங்கள். சோழர்களும், பல்லவர்களும், விஜயநகரத்து அரசர்களும், வடமாநிலத்து மன்னர்களும் நிவந்தம் அளித்து, திறன் மிக்க ஸ்தபதிகள் பார்த்துப் பார்த்து வடித்து வைத்த உற்சவர்களும், மூலவர்களும், தேர்க்கால்களும், தூண்களும் விற்பனைப் பண்டங்களாக குவிந்து கிடக்கின்றன. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளனின் வீடு, இந்தியப் பொக்கிஷங்களின் திருட்டுக் குடோனாக மாறியிருக்கிறது. ‘ஆர்ட் கேலரி’ என்ற பெயரில் தீனதயாளன் செய்து வந்துள்ள தொழில் கலைப்பொருள் கடத்தல்.



தீனதயாளன் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவருக்கும், ஏற்கனவே சிலைக்கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கலைப்பொருள் கடத்தல் எப்படி  நடக்கிறது..? எதற்காக கடத்தப்படுகின்றன..? இதன் வேர் எங்கெல்லாம்  பரவிக் கிடக்கிறது..? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்..?

‘100 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கலாச்சாரத் தொன்மை மிக்க எந்தப் பொருளையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது’ என்று சட்டம் இருக்கிறது. ஆனால், கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வோ, சிற்பங்கள், கலைப்பொருட்களின் மதிப்போ, வரலாற்றின் மீது மரியாதையோ துளியும் கிடையாது என்பதால் எந்த தங்கு தடையும் ஏற்படவில்லை.
 
பல்லவர் கால கல் சிற்பங்கள், சோழர் கால ஐம்பொன் சிலைகள், தேர்களில் உள்ள வேலைப்பாடு மிக்க தூண்கள், மண்டபத் தூண்கள், மடங்கள் மற்றும் கோயில்களில் உள்ள ஓவியங்கள், தீர்த்தங்கரர், புத்தர் சிலைகள், பழமையான மண்பாண்டங்களுக்கு உலக பழம்
பொருள் சேகரிப்பாளர்கள் இடையே பெரும் வரவேற்பு உண்டு.

நான்கு நோக்கங்களுக்காக இந்தப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. ஒன்று, சேகரிப்புக்கு. பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று கலைப்பொருள் சேகரிப்பு. அது கௌரவமாகவும் இருக்கிறது. அதற்கு அவர்கள் என்ன விலை கொடுக்கவும் தயங்குவதில்லை. இரண்டாவது, இன்டீரியர் டெகரேஷனுக்கு. பிரமாண்டமான வீடுகள், அரண்மனைகள், நட்சத்திர விடுதிகளை கலைப்பொருட்கள் கொண்டு அலங்கரிப்பது ஒருவித டிரெண்ட்.



நாம் தெய்வமாகக் கருதுவது, அவர்களைப் பொறுத்தவரை கலைநுட்பம் மிகுந்த பொம்மை... அவ்வளவுதான்! மூன்றாவது, முதலீடு. ரியல் எஸ்டேட், தங்கம் போல, கலைப்பொருட்களில் செய்யப்படும் முதலீடு வளர்ந்து கொண்டே இருக்கும். நாளாக, நாளாக மதிப்பு கூடும். நான்காவது, மியூசியங்களில் காட்சிக்கு வைக்க. இதன் மூலம் மியூசியத்துக்கு கவனம் கிடைக்கும். நிதி சேரும்.

‘‘பல்லவர்கள் காலத்தில் உலோக சிற்பக்கலை  நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. கருமார்ச்சை, உற்சவார்ச்சை, சயனார்ச்சை, பலியார்ச்சை, தீர்த்தார்ச்சை, நபனார்ச்சை என ஒவ்வொரு கோயிலிலும் 6 விதமான  ஐம்பொன் திருமேனிகள் வழிபாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் செம்பியன் மாதேவி காலம், ‘ஐம்பொன் சிற்பக்கலையின் பொற்காலம்’ எனப்படுகிறது.

அக்காலத்தில் எல்லாக் கோயில்களுக்கும் ஏராளமான ஐம்பொன் படிமங்களை செய்து அளித்திருக்கிறாள் அந்த அம்மை. அவளுக்குப் பின் வந்த ராஜராஜனும், ராஜேந்திரனும் இதைப் பெரும் கடமையாகக் கருதி செய்திருக்கிறார்கள். தங்கம், வெள்ளி உள்ளிட்ட பஞ்ச உலோகங்களும் கலந்து மிகத்தரமாகத் தயாரிக்கப்பட்ட சிற்ப சொரூபங்கள் அவை. மொகலாயர்களின் படையெடுப்பு தமிழகத்தின் வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் பெரிதும் பாதித்தது.

வழிபாட்டுத் தலங்களைத் தாக்கியதோடு அவர்கள் வெற்றிச் சின்னங்களாக இந்தச் செப்பு திருமேனிகளைக் கொண்டு செல்ல ஆர்வம் காட்டினார்கள். அவர்களுக்கு அஞ்சி, கோயில்களில் இருந்த ஐம்பொன் சிற்பங்களை கோயில் நிலங்கள், நிர்வாகிகளுக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகளில் மக்கள் புதைத்து வைத்தார்கள். 500 ஆண்டு கால தொடர்ச்சியில் இந்த சிலைகள், கலைப்பொருட்கள் குறித்து எவ்விதமான முறையான கணக்கெடுப்புகளும் நடக்கவில்லை.

அவ்வப்போது நிலங்களைத் தோண்டும்போது சிலைகள் கிடைக்கின்றன. அவ்விதம் கிடைக்கும் பல சிலைகள் கோயில்களில் வைக்கப்பட்டு காணாமல் போய்விடுகின்றன. கோயில் நிர்வாகிகளாக இருந்தவர்களே பலவற்றை அபகரித்து விட்டார்கள். பழமையான சிலைகளுக்கு நல்ல விலை கிடைப்பதை அறிந்து, அவற்றைத் திருடி விற்று விட்டு, அதைப் போலவே புதிய சிற்பங்களைச் செய்து வண்ணம் பூசி கோயில்களில் வைத்து விடுகிறார்கள். தமிழகக் கோயில்களில் சமரசமில்லாமல் ஒரு ஆய்வை மேற்கொண்டால் இந்த மோசடி வெளிப்பட வாய்ப்புள்ளது...’’ என்கிறார் பாரம்பரிய ஐம்பொன் சிற்பக் கலைஞரும் ஆராய்ச்சியாளருமான சுவாமிமலை மோகன்ராஜ் ஸ்தபதி.

தமிழகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள், சிற்பங்கள் இருந்துள்ளன. இன்று பெரும்பாலானவை களவு போய்விட்டன. இவற்றைக் காப்பாற்ற வேண்டிய இந்து அறநிலையத்துறையிடம் போதிய புள்ளிவிவரங்கள் இல்லை.

கடத்தலின் தொடக்கம் எது?
‘‘கும்மிருட்டில் புகுந்து, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துச் சென்று மதிப்புமிக்கதை விற்றுவிட்டு மற்றதைத் தூக்கி எறியும் கதையெல்லாம் இல்லை. ‘இதுதான் தேவை’ என மிகத் திட்டமிட்ட திருட்டு. கலைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் மிக பிரமாண்டமானது. தஞ்சாவூரில் இருந்து ஐரோப்பா கடந்தும் விரிந்து கிடக்கிறது’’ என்கிறார் சிற்ப ஆராய்ச்சியாளரும், கலாசார பாதுகாப்பு செயற்பாட்டாளருமான விஜய்.

தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் விஜய், ஒரு கப்பல் நிறுவனத்தில் பொது மேலாளராகப்  பணிபுரிகிறார். உலகெங்கும் உள்ள கலை, பண்பாட்டுக் காவலர்களை  ஒருங்கிணைத்து, கலைப்பொருட்களின் திருட்டை கண்டுபிடிப்பதோடு,  தாய்நாட்டுக்கு அவற்றைக் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்கிறார். (இவரது  இணையதளம் http://poetryinstone.in) ‘‘பாழடைந்த, பழமையான கோயில்கள்தான் இவர்களின் இலக்கு.

கோயிலில் சிலை இருப்பதை அறிந்தவுடன் ஒரு குழு, அங்கு சாமி கும்பிடச் செல்வதைப் போல போகும். சிலைகளின் தொன்மை, சிறப்பை எல்லாம் கணித்து ‘இந்த சிலைகளை எல்லாம் எடுக்கலாம்’ என குறித்துக் கொடுத்துவிட்டுச் செல்லும். நாள் பார்த்து, அந்த சிலைகளைத் தூக்குவார்கள். இவ்விதம் எடுக்கப்படும் சிலைகள் இரண்டாம் நிலை முகவரிடம் தரப்படும். அவர் அதை பாதுகாப்பாக தன் தலைவனுக்கு அனுப்புவார். கப்பல், விமானம், கொரியர் மூலம் அடுத்தடுத்த இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.

சென்னை, மும்பை, டெல்லி தான் கடத்தல் மையங்கள். ஒரு சென்டரில் கொண்டு சென்று பதுக்கி சிலைகளை நல்ல ரெஸல்யூஷனில் புகைப்படங்கள் எடுத்து டீலர்களுக்கு அனுப்புவார்கள். இதன் பிறகான பிசினஸ் எல்லாம் நட்சத்திர விடுதிகளில்தான் நடக்கும். பேரம் படிந்து விட்டால், வௌிநாட்டுக்குப் பறந்து விடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது சிக்கியிருக்கும் எல்லோருமே கடைநிலைத் திருடர்கள்தான். தீனதயாளனுக்கும் சுபாஷ் சந்திர கபூருக்கும் தாத்தாவெல்லாம் இத்தொழிலில் இருக்கிறார்கள். மும்பையிலும் டெல்லியிலும் இருப்பவர்கள் இவர்களை இயக்குவதாகச் சொல்கிறார்கள்’’ என்கிறார் விஜய்

எந்தப் பொருளுக்கு என்ன விலை? சர்வதேச மார்க்கெட் நிலவரம் சோழர் கால ஐம்பொன்
நடராஜர் சிலை: ரூ.1 கோடி
பிற ஐம்பொன் சிலைகள்: ரூ.30 லட்சம் முதல் 75 லட்சம் வரை
கற்சிலைகள்: 25 லட்சம் வரை
ஓவியங்கள்: ரூ.5 லட்சம் முதல் 20 லட்சம் வரை
புத்தர் சிலைகள், நடுகற்கள்: ரூ.2 லட்சம் வரை

யார் இந்த சுபாஷ் கபூர்?
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் டெல்லியில் வசித்தவர். ஏற்றுமதி/ இறக்குமதி தொழிலில் கிடைத்த தொடர்புகள் மூலம் கடத்தல் தொழிலுக்கு மாறினார். அமெரிக்கக் குடியுரிமை பெற்று நியூயார்க்கில் குடியேறினார். தமிழகத்தைப் பொறுத்தவரை இவருக்கு ஏஜென்டாக செயல்பட்டவர் என்று சஞ்சீவி அசோகன் என்பவரை கைகாட்டுகிறார்கள் காவல்துறையினர். (இவர் இப்போது சிறையில் இருக்கிறார்!)

இங்கிருக்கும் சில்லறை திருடர்களிடம் இருந்து சிலையைப் பெற்று சுபாஷ் கபூருக்கு அனுப்புவார் சஞ்சீவி. ஹவாலா மூலம் அதற்கான தொகையை சுபாஷ் அனுப்பி வைப்பார். எவ்வித அச்சமும் இல்லாமல், முறைப்படி கொண்டு வரப்பட்டதாக போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து, தனி கேட்லாக் போட்டு சிற்பங்களின் வண்ணப் படங்களையும், அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் போட்டு விற்பனை செய்வது கபூரின் பாணி.

இன்டர்போல் உதவியோடு இவரை 2011 அக்டோபர் 30ம் தேதி ஜெர்மனியில் கைது செய்தது தமிழக போலீஸ். 2012 ஜூலையில் இந்தியா கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்க பாதுகாப்புப்படை, இவரது நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு கிடைத்த கலைப்பொருட்களைப் பார்த்து அமெரிக்காவே மிரண்டு விட்டது. சுமார் 2 ஆயிரத்து 622 கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சில பொருட்களை அண்மையில் அமெரிக்கா பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது.  

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)
 - வெ.நீலகண்டன்