ரஜினி ஸ்டைலில் விஜய்



காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிறிஸில்டா

‘‘ஸ்கூல் பொண்ணா இருக்கும்போதே நான் விஜய் சாரோட ரசிகை. அவரை நேர்ல சந்திச்சுப் பேசணும், ஒரு ஆட்டோகிராஃப் வாங்கிடணும்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனா, இப்ப அவருக்கே காஸ்ட்யூம் டிசைனிங் பண்ணுவேன்னு நெனச்சுக் கூடப் பார்த்ததில்ல. அவர்கிட்ட பேசினாலே பாசிட்டிவ் எனர்ஜி அள்ளும்!’’ - அன்பும் ஆச்சரியமுமாகப் பேசுகிறார் ஜாய் கிறிஸில்டா. இன்று தமிழ் சினிமாவின் பிஸி அண்ட் பியூட்டிஃபுல் காஸ்டியூம் டிசைனர்!



‘‘சொந்த ஊர் நாகர்கோவில். ஆனா, படிச்சது, வளர்ந்தது சென்னையில். அப்பா சிவில் என்ஜினியர். நானும் அப்படி ஆகணும்னு விரும்பினார். ஆனா, நான் விஸ்காம் சேர்ந்துட்டேன். காலேஜ் இன்டர்ன்ஷிப்க்காக ஒரு சேனல்ல வொர்க் பண்ணினேன். அங்கேதான் ‘டார்லிங்’ பட இயக்குநர் சாம் ஆண்டன் அறிமுகம் கிடைச்சது. அவரோட வழிகாட்டுதல்ல, புரோகிராம் டிசைனரா ஆனேன். அங்கேதான் காஸ்ட்யூம் டிசைனிங் ஆர்வம் வந்தது. பெங்களூரு போய் ஃபேஷன் டிசைனிங் படிச்சிட்டு வந்தேன். ‘ராஜதந்திரம்’ படத்தில் இருந்துதான் கேரியர் தொடங்கிச்சு!’’ - என ஃப்ளாஷ்பேக் போன ஜாயிடம், பிரபலங்கள் பற்றிக் கேட்டால், புன்னகை பொங்க பேச ஆரம்பிக்கிறார். 

‘‘விஜய் சாரை ‘ஜில்லா’ ஸ்பாட்ல பார்த்த அன்னிக்கு ரொம்பவே நெர்வஸ் ஆகிட்டேன். அவருக்காக கிரீன் கலர்ல ஒரு ஷர்ட் கொடுத்தேன். ‘நல்லா இருக்கே. இதே மாதிரி என்னோட பர்சனல் யூஸுக்கு ஒண்ணு வேணுமே’னு கேட்டார். விஜய் சார் டிரஸ்ல இந்த பிராண்ட்தான் வேணும்னு கேட்க மாட்டார். சௌகரியமா இருக்கான்னுதான் பார்ப்பார். வெள்ளை, நீலம், கறுப்பு இதெல்லாம் அவர் ஃபேவரிட்! விஜய் சார் செட்ல இருந்தா, செம கலகலப்பா இருக்கும். ஷாட் பிரேக்ல, கிடைக்கற இடத்துல ஓய்வு எடுத்துக்குவார்.



ஒருநாள் அவர் வெறும் தரையில் படுத்துத் தூங்க ஆரம்பிச்சிட்டார். இது அவரோட வழக்கம்னு யூனிட்ல சொன்னாங்க. ஆச்சரியமாகிடுச்சு. ரஜினி சார்தான் இப்படிப் பண்ணுவார்னு கேள்விப்பட்டிருக்கேன். யூனிட்ல யாருக்காவது ஒரு பிரச்னைனா விஜய் சார் முதல் ஆளா ஹெல்ப் பண்றதை பாத்திருக்கேன். ஜூன் 22 அவரோட பர்த் டே. அன்னிக்கு காலையில 8 மணிக்கெல்லாம் ஷூட்டிங் வந்துட்டார். எல்லாருக்குமே தன் கைப்பட பிரியாணி பரிமாறி சந்தோஷப்பட்டார். அதுக்கு அடுத்த மாசமே என் பர்த் டே வந்துச்சு. அதுக்கும் கேக் வரவழைச்சிருந்தார். விஜய் சார் முன்னாடி பர்த் டே கொண்டாடினது மறக்க முடியாத தருணம்!

சிவகார்த்திகேயன் காம்பியரா இருக்கும்போதிலிருந்து பழக்கம். அவர் என்னோட வெல்விஷர். ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா இறந்துட்டார். அப்போ என்னை அவ்வளவா யாருக்கும் தெரியாது. விரக்தியில வேலையை விட்டுட்டு ஊர்ப் பக்கம் போயிடலாம்னு இருந்தேன். அன்னிக்கு போன் பண்ணியிருந்தார் சிவா. ‘இனிமேதான் நீ ஹார்ட் வொர்க் பண்ணணும். பிஸியா இரு. நிறைய படங்கள் பண்ணு’னு ரொம்பவே மோட்டிவேட் பண்ணினார். நான் இன்னிக்கு பிஸியா இருக்க சிவாதான் காரணம்!



‘மிருதன்’ செட்ல ஜெயம் ரவி சார் ரொம்ப அமைதியா இருப்பார். நானும் லட்சுமி மேனனும்தான் பேசிக்கிட்டே இருப்போம். பாவாடை தாவணினு வழக்கமா இருக்கற அவங்கள மாடர்னா ‘றெக்க’ படத்துல மாத்தியிருக்கோம். இதுக்காக ரூம் போட்டு யோசிக்கற மாதிரி கேரவன்ல ரெண்டு மணி நேரம் ப்ளான் போட்டோம். இன்னிக்கு ‘றெக்க’ போட்டோஸ்  பார்த்துட்டு அவங்களைப் பாராட்டுறாங்க. ஹேப்பியா இருக்கு!

மிஷ்கின் சார் அசோசியேட் கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் தமிழ்ப் படத்தில் நிவின் பாலி நடிக்கிறார். நான் காஸ்ட்யூம் பண்றேன். திருநெல்வேலி பக்கம் போனா கூட மக்கள் ‘ப்ரேமம்’ ஹீரோனு அவரைக் கொண்டாடுறாங்க. நிவினும் விஜய் சார் மாதிரிதான். வசதியான உடைக்குதான் முன்னுரிமை. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மறுக்காம ஏத்துக்குவார்!

விஷ்ணு விஷால் - கேத்தரின் நடிக்கிற ‘வீரதீர சூரன்’ படத்துக்கு காஸ்ட்யூம் கவனிக்கறேன். கேத்தரினுக்கு ஹோம்லியை விட வெஸ்டர்ன் காஸ்ட்யூம்ஸ்தான் நல்லா செட் ஆகுது. விஷ்ணு நல்ல ஃப்ரெண்ட். அவரோட ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துல ஜிகுஜிகுன்னு கலர்ஃபுல்லா காஸ்ட்யூம்ஸ் பண்ணியிருப்பேன். ‘ரோட்ல போனா நாய் துரத்துமே’னு தயங்கினார். பட போஸ்டர் பார்த்துட்டு அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைக்கவேதான் கூல் ஆனார்!

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ரெண்டு பேருமே என் ஃப்ரெண்ட்ஸ். ‘டார்லிங்’ல இருந்து நானும் நிக்கி கல்ரானியும் பழக ஆரம்பிச்சோம். ஜி.வி.பிரகாஷ், நிக்கி, விஷ்ணு, அவங்க வொய்ஃப் ரஜினி விஷ்ணு எல்லாருமே டைம் கிடைக்கும்போது பெசன்ட் நகர்ல இருக்கற என்னோட ‘சிக்னேச்சர்ஸ்’ பொட்டிக்குக்கு வருவாங்க. ஜி.வி.பிரகாஷோட ‘புருஸ்லீ’, ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ படங்களுக்கு காஸ்ட்யூம்ஸ் நான்தான்!

அனிருத்தோட ‘நம்ம சென்னை’ மியூசிக் வீடியோவில் அவருக்கு ஸ்பெஷலா ஒரு காஸ்ட்யூம் டிசைன் பண்ணியிருந்தேன். லேயர் அடுக்குகளாக இருந்ததால டிரெஸ் வெயிட் அதிகமாகிடுச்சு. அதைச் சொல்லிச் சொல்லி கலாய்ப்பார் அனிருத்! நைஸ் பர்சன்! சூரி அண்ணாவோட ரெண்டு படங்கள் வொர்க் பண்ணியிருக்கேன்.

ஸ்பாட்ல என்னைப் பார்த்தால், ‘எனக்கு மட்டும் ஏன்மா பிராண்டட் டிரஸ்ஸே கொடுக்க மாட்டேங்கறே’ம்பார். அவர் எனக்கு போனே பண்ணினதில்லை. ஆனா, ‘இந்தப் பொண்ணுக்கு போன் பண்ணினா எடுக்கவே மாட்டேங்குது’னு சொல்வார். அவர் ஸ்பாட்ல இருந்தாலே கலகல கேரன்டி!’’

- மை.பாரதிராஜா