அனுஷ்காவின் யோகா சீக்ரெட்!



ஜூன் 21 சர்வதேச யோகா தினம்... அதை முன்னிட்டு ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் வளைந்து, குனிந்து யோகா செய்யும் போட்டோக்கள் எக்கச்சக்கம் பார்த்திருப்போம். அனுஷ்கா அப்படி போஸ் தருவதில்லை. ஆனால் நமக்குத் தெரியும், அனுஷ்கா யோகா டீச்சர் என! யோகா, பியூட்டி, ஃபிட்னஸ், மெடிட்டேஷன் என அனுஷ்காவிடம் பேசினால், அள்ளுது எனர்ஜி! 



‘‘என் அப்பா, அண்ணன்கள்னு எல்லாருமே டாக்டர், எஞ்சினியர் என இருக்காங்க. நானும் அப்படி ஒரு புரொஃபஷனைத் தேர்ந்தெடுப்பேன்னு நினைச்சாங்க. ஆனா, என் கவனம் யோகா மேல பதிஞ்சிடுச்சு. அது எனக்கே ஆச்சரியம்!’’ - பிரமிப்பு மாறாமல் ஃப்ரஷ் புன்னகை வீசுகிறார் அனுஷ்கா.

‘‘என் யோகா குரு, பரத் தாகூர். ஆரம்பத்துல ஃபிட்னஸுக்காகத்தான் யோகா கத்துக்க  ஆரம்பிச்சேன். அப்புறம், அதிலேயே இன்ட்ரஸ்ட் வந்திடுச்சு. நிறைய பேருக்கு கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். அப்போ, என் யோகா ஸ்கூலுக்கு வந்த இயக்குநர் ஒருத்தராலதான் சினிமா சான்ஸ் கிடைச்சது. இப்பவும் ஒவ்வொரு அதிகாலையும் எனக்கு யோகாவுடன்தான் தொடங்குது. வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தாலும் யோகாவை மிஸ் பண்றதில்ல.

‘என் அழகு சீக்ரெட் யோகாதானே?’னு கேக்கறாங்க. பட், நம்ம முகத்தை நாம தேர்ந்தெடுக்க முடியாதே! ஸோ, அழகுக்கு காரணம் என் அப்பா-அம்மாதான். அடுத்து என்னோட மேக்கப் மேன்கள். அதையும் தாண்டின அழகைத்தான் யோகாவும், ஃபிட்னஸ் பயிற்சிகளும் தருது. தியானம் மனசை அழகா வச்சுக்க உதவுது. மனசு சந்தோஷமா இருந்தா, முகமும் பளிச்சிடும். பாசிட்டிவ் எண்ணங்களும் முக்கியம். யாருக்கும் அட்வைஸ் பண்றது எனக்கு பிடிக்காது.

ஆனா, ஒரு விஷயம் சொல்லிக்க விரும்புறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஸோ, உடம்பை கவனியுங்க. ஜிம்மும் யோகாவும் ஒரு விதத்தில் எனக்கு ஸ்ட்ரெஸ் வர விடாம பார்த்துக்குது. ‘இஞ்சி இடுப்பழகி’க்காக நினைச்சபடி குண்டாகவும், இப்போ ‘பாகுபலி’க்காக இளைக்கவும் என் உடம்பு ஒத்துழைக்குதுன்னா காரணம் யோகாதான். சினிமாவில் என் நட்பு வட்டம் ரொம்பக்  குறைவு. ஆனா, என்னோட யோகா நட்பு, உலகம் முழுவதும் இருக்கு!’’

- மை.பாரதிராஜா
படம்: புதூர் சரவணன்