நியூஸ் வே



* மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கங்கையை சுத்தப்படுத்தும் பணியைக் கூடுதலாக ஏற்றிருக்கிறார். இதை நினைவுறுத்த, தனது அலுவலக அறையில் ஒரு மூலையில் கங்கை தீர்த்தத்தை எப்போதும் கலசத்தில் வைத்திருக்கிறார் உமா பாரதி.



* கால் துடைக்க வாசலில் போடும் ‘டோர் மேட்’டில் கடவுளின் உருவங்கள் இருப்பதை சகித்துக்கொள்ள முடியுமா? விநாயகர், லட்சுமி என இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் டோர் மேட் விற்றபோது கொந்தளித்தது இந்திய சமூகம். பலர் தங்கள் போன்களில் இருக்கும் ‘அமேசான் ஆப்’பையே நீக்கிவிடுவோம் என கொதித்தனர். ‘அமேசானை புறக்கணிப்போம்’ என்ற இயக்கமாக இது மாற, கடைசியில் வருத்தம் தெரிவித்து அவற்றை விற்பனையிலிருந்து அகற்றியது அமேசான்.

* கைக்குழந்தைகளோடு பெண்கள் குரூப்பாக டான்ஸ் ஆடினால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். இப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் ‘ஃபிளாஷ் மாப்’ நடனம் ஆடினர் ‘தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிக்கும் இந்தியத் தாய்கள்’ அமைப்பினர். ‘முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். அதன்பின் இணை உணவோடு 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பாலைத் தொடர வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி புதுமைப் பிரசாரங்கள் செய்யும் இந்த அமைப்பில் 17 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்கள்.

* தொடர்ந்து ஏழாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியர் என்ற அரிய சாதனையைப் படைத்திருக்கிறார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ். ஆனால் இந்த சாதனை ஒரு பதக்கமாக மாறுமா என்பது கேள்விக்குறியே! டென்னிஸ் இரட்டையர் போட்டியில் பங்கேற்க நேரடித் தகுதி பெற்றிருக்கும் ரோஹன் போபண்ணா, தனக்கு ஜோடியாக விளையாட வேறொரு வீரரைக் கேட்டார். ஆனால் இந்திய டென்னிஸ் சங்கம் ‘லியாண்டர் பயஸோடு ஜோடி சேர்ந்து விளையாடுங்கள்’ எனச் சொல்லிவிட்டது. அவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார். 42 வயதாகும் பயஸ், இன்றைய இளைஞர்களுக்கு ஈடு கொடுப்பாரா?

* ஆஸ்திரேலிய ஓப்பன் பாட்மின்டன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றிருக்கிறார் சாய்னா நெஹ்வால். இந்த வெற்றி அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். ‘‘இந்த ஆண்டு ஆரம்பத்தில் ரேங்கிங்கில் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தேன். சில தோல்விகளும் காயங்களும் என்னை 8ம் இடத்துக்கு நகர்த்திவிட்டன. முக்கியமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக வெற்றிப்பாதைக்கு நகர்ந்திருக்கிறேன். இப்போதைய கனவு, ஒலிம்பிக் பதக்கம் பற்றியதுதான்’’ என்கிறார் அவர்.

* ரிசர்வ் வங்கி கவர்னரும் சென்சார் போர்டு தலைவரும் தங்கள் பதவிகளை மாற்றிக்கொள்ளலாம். ஒருவர் (வட்டி விகிதத்தைக் குறைத்து) ‘வெட்டவே கூடாது’ என்கிறார்; இன்னொருவர் (படத்தின் சீன்களை) ‘வெட்டியே தீருவேன்’ என்கிறார்!    

* குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். தெய்வத்துக்காக கற்பூரம் ஏற்றலாம்... தெய்வம் மீதே ஏற்றி சூடு வைக்கலாமா? அதைத்தான் செய்திருக்கிறார் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாலி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியை வைஜெயந்தி மாலா. நான்காம் வகுப்பு மாணவர்கள் காலில் கற்பூரம் ஏற்றி அவர் வைத்த சூடு, ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் உறைத்தது!