செம்மை விருது!



சமூக செயற்பாட்டாளர் ம.செந்தமிழன்  உருவாக்கிய ‘ஊர் சந்தை’ அமைப்பு, மறைந்த பத்திரிகையாளர் கிருஷ்ணா  டாவின்ஸியின் பெயரில் ‘செம்மை’ விருதை ஆண்டுதோறும் அளிக்கிறது. சமூக அக்கறையோடு இதழியல் பணிகளைச் செம்மையாகச் செய்துவரும் தமிழக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுவது இது. இந்த ஆண்டு இந்த விருதைப் பெற்றிருக்கிறார் தமிழின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், ‘குங்குமம்’ இதழின் தலைமை நிருபருமான வெ.நீலகண்டன். 



கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பத்திரிகை பரப்பில் ஓங்கி ஒலிக்கிற குரல் வெ.நீலகண்டனுடையது. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தொன்மங்களை மீட்டெடுக்க அவர் உதவியிருக்கிறார். அடித்தள மக்களின் மீதான அக்கறையும், பொறுப்பும் அவரிடம் கடமையாகவே கை வந்திருந்திருக்கிறது. எப்போதும் நெஞ்சில் ஈரக்கசிவு, நியாயம், சீர் செய்துவிட வேண்டும் என்ற மேலான உணர்வுடன் எழுதுவதால் அவருடைய கட்டுரைகள் உண்மைத் தன்மையை எளிதில் பெற்றுவிடுகின்றன. ‘ஊர்க்கதைகள்’, ‘தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்’, ‘வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள்’ என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் அவரது எழுத்தாளுமையில் வந்திருக்கின்றன.