நெருப்புடா நிகரில்லாத கபாலி மாஸ்!



தமிழ் உள்ளங்கள் ஒவ்வொன்றிலும் பற்றிக் கொண்டு, வெற்றி கொண்டிருக்கிறது ‘கபாலி’யின் ‘நெருப்புடா’! ‘கருணையை மறு; கவலைகளை அறு இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு’ தன் நாடி நரம்பெல்லாம் மாஸ் சாங் ஊறிப் போனவர்தான் இதை எழுதியிருக்க வேண்டும் எனத் தேடினால், அருண்ராஜா காமராஜ் என்ற இளைஞரைக் காட்டுகிறார்கள். அதுவும் யார்? ‘ராஜா ராணி’யில் கறுப்பு காமெடி நண்பராகவும் ‘மான் கராத்தே’வில் நெருப்பு குமாராகவும் கலக்கிய அதே ஆள்! ‘நெருப்புடா’வை இவர் எழுதிப் பாடியிருக்கிறார்!



‘‘சொந்த ஊர் குளித்தலை பாஸ். கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிச்சேன். சினிமாதான் கனவா இருந்தது. சென்னை வந்துட்டேன். பத்து வருஷமாச்சு. ஒரு நல்ல இயக்குநரா பேர் வாங்கணும்கிறதுதான் லட்சியம். ‘நாளைய இயக்குநர்’ சீஸன் 2ல நானும் ஒரு கன்டஸ்டன்ட். ஆனா, அதுக்கு நடுவுல பாடல் எழுதவும் பாடவும் வாய்ப்பு வந்ததுக்கு காரணம் சந்தோஷ் (நாராயணன்) அண்ணன்தான். அவர் எனக்கு காலேஜ் சீனியர். வாய்ப்பு தேடிட்டிருந்தப்போ நாங்க ஒரே டீமா திரிஞ்சிருக்கோம். அவர் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு கிரிக்கெட் ஆடிட்டு வர்ற அளவுக்கு பழக்கம்.

காலேஜ்லயே நான் கவிதை, மிமிக்ரினு வெரைட்டி காட்டிட்டு இருப்பேன். அதனால அவர், ‘அட்டகத்தி’க்குப் பிறகு ‘உயிர்மொழி’னு படம் பண்ணினப்ப பாட்டு எழுதக் கூப்பிட்டார். அடுத்து ‘பீட்சா’வில் ரெண்டு பாட்டு எழுதினேன். அடுத்தடுத்து, ‘பீட்சா 2’, ‘ஜிகர்தண்டா’னு சந்தோஷ் அண்ணன் வரிசையா வாய்ப்பு கொடுத்தார். ‘ஜிகர்தண்டா’ல அந்த ‘டிங்டாங்’ பாட்டு நான் எழுதினதுதான். அதில் கொஞ்சம் நல்ல பெயர் கிடைச்சது. ஜி.வி.பிரகாஷ் பாராட்டினார். அதுக்குப் பிறகு அவரும் தன்னோட எல்லா படத்திலும் பாட்டு கொடுக்க ஆரம்பிச்சிட்டார். ‘தெறி’யில் கூட ரெண்டு பாட்டு எழுதினேன்!



நடிப்பு, நானே நினைச்சுப் பார்க்காதது. ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா அரட்டை அடிக்கும்போது நான் என்னையே கலாய்ச்சுப்பேன். மத்தவங்க கலாய்க்கவும் வழி பண்ணிக் கொடுப்பேன். இயக்குநர் அட்லியும் எங்க டீம் மெம்பர்தான். இப்படி ஒரு கேரக்டரை படத்தில் வைக்கலாமேனு அவர்தான் எனக்காகவே ‘ராஜா ராணி’யில் அந்த கேரக்டரைப் புகுத்தினார். அடுத்து, ‘மான்கராத்தே’வில் நெருப்பு குமார் கேரக்டர். இண்டஸ்ட்ரியில எல்லாரும் அந்தப் பேர் சொல்லிக் கூப்பிடுற அளவுக்கு அது ரீச் ஆகிடுச்சு!’’ என்கிற அருண்ராஜா, மெல்ல ‘நெருப்புடா’ பாட்டை நெருங்கி வருகிறார்.

‘‘ஒரு நிகரில்லா தலைவனுக்கான மாஸ் வேணும்னுதான் ரஞ்சித் சார் சொன்னார். ஆனா, அது சும்மா வார்த்தைகளா இல்லாம கொஞ்சம் கருத்தியல் ரீதியா கனமா இருக்கணும்னு விரும்பினார். அதைத்தான் ‘நெருப்புடா’ பாட்டுல கொண்டு வந்தோம். எந்த ஒரு தலைவனுமே அடித்தட்டு மக்களுக்காக தன்னைத் தர்றவன்தான். அவனை அந்த மக்களே உயர்த்தி வச்சுப் பேசும்போது இப்படித்தான் நெருப்பு தெறிக்கும். இப்படியொரு பாட்டை நானே பாடுவேன்னு நினைச்சுப் பார்க்கல. இதுவரை கிட்டத்தட்ட ஆறு பாடல்கள் பாடியிருந்தாலும் நான் முறையா இசை கத்துக்கிட்டவன் இல்லை.

சொல்றதைக் கேட்டு அதே மாதிரி பாடிட முடியும். மிமிக்ரி திறமை அதுக்குக் கை கொடுக்கும். ‘ஜிகர்தண்டா’வில் ‘டிங்டாங்’ பாட்டு கூட லேசா வினு சக்கரவர்த்தி குரல்ல இருக்கும். அப்படித்தான் இதுவரை பாட்டெல்லாம் பாடியிருக்கேன். ரஜினிக்கே பாடுறதெல்லாம் பெரிய வாய்ப்பு. பெரிய மகிழ்ச்சி! எஞ்சினியரிங் படிச்சிட்டு சினிமாவுக்குப் போறேன்னதும் எங்க அப்பா அம்மா திட்டல. ‘நீ கஷ்டப்படாதடா’னுதான் சொன்னாங்க. அவங்க அன்புக்கும் ஆசீர்வாதத்துக்கும் இது பத்தாது. இன்னும் நிறைய சாதிக்கணும். நினைச்ச மாதிரி இயக்குநர் ஆகணும். இப்ப ஒரு பெரிய இயக்குநர்கிட்ட உதவி இயக்குநரா இருக்கேன். சீக்கிரமே படம் பண்ணுவேன் பாஸ். அப்போ சந்திக்கலாம்!’’

யார் வீரத் துரந்திரா?

‘கபாலி’ பாடல்களில் ஐம்பூதங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டதும் சற்று பயம் வந்தது உண்மை. ஏற்கனவேதான் அதை ‘ரிதம்’ உள்ளிட்ட படங்களில் பார்த்தாச்சே! ஆனால், ‘கபாலி’ பாடல்கள் வெளியாகி கேட்டபோது மக்களிடம் நிம்மதிப் பெருமூச்சு. நிலம், நீர், காற்று என வலிந்து எதையும் உள்ளே வைத்து பாட்டை சமைக்கவில்லை. இயல்பாக அது அமைந்ததாகவே தெரிகிறது. அதைத் தாண்டியும் பாடல்களில் நிறைய புதுமைகள் உண்டு. மிக முக்கியமாக, அடித்தட்டு மக்களின் குரல் வரிகளெங்கும் உரக்க ஒலிக்கிறது.

‘நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா
வந்தவன போனவன வாழ வச்சவன் - இனி
வாழ்ந்து காட்டப் போறான் வாய மூடி கவனி!’

என செவ்வாழையில் சிரிஞ்ச் ஏற்றுவது போல அரசியல் பேசுகிறது ‘உலகம் ஒருவனுக்கா’ பாடல். ஆனால், இது வழக்கமான ரஜினி படங்களின் ‘வருவேன் - வர மாட்டேன்’ அரசியல் அல்ல என்பது ஆறுதல்!

‘மேட்டுக்குடியின் கூப்பாடு - இனி
நாட்டுக்குள்ளே கேட்காது!’

‘கபாலிதான் கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்’ - இந்த வகைப் பாட்டுக்குள், கதைக் களத்துக்குள் ரஜினியை வைத்துப் பார்க்க ஆவலாகத்தான் இருக்கிறது. ‘வீரத் துரந்திரா’ என்ற பாட்டைக் கேட்டதும் பலர், ‘‘இந்தப் படத்திலும் ரஜினி எல்லாவற்றையும் துறந்து போகிறார்’’ என்று கிளப்பிவிட்டனர். உண்மையில் துறவுக்கும் துரந்திராவுக்கும் தொடர்பே இல்லை. பல கல்வெட்டுக்களில் மன்னர்களைக் குறித்திருக்கும் வார்த்தை துரந்திரன். ‘வெல்லவே முடியாதவன்’ என்பது பொருள். ஆக, ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ ஸ்டைலெல்லாம் இருக்காது. ‘பயத்தையே முறை... பகல் கனவை உடை’ என வேறு பரிமாண ரஜினி இதுவென்பது கன்ஃபார்ம்!

- கோகுலவாச நவநீதன்