தக்காளி இல்லாத சமையல்!



தக்காளியும், வெங்காயமும் மாறி மாறி தமிழ்நாட்டு மக்களை வாணலியில் போட்டு வதக்குகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் விலை செஞ்சுரி அடித்தது என்றால் இப்போது தக்காளியின் முறை. இதோ இந்தக் கட்டுரை எழுதும் சமயம் தக்காளியின் கோயம்பேடு ரேட் கிலோ 108 ரூபாய்!



தென் அமெரிக்காவில் இருந்து போர்ச்சுகீசியர்களால் 1720ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திறங்கிய தாவரம்தான் தக்காளி. இன்று, கிட்டத்தட்ட எல்லா உணவுக்கும் நாம் தக்காளி பயன்படுத்துறோம். அதனால்தான் விலையேறும்போது விக்கித்து நிற்கிறோம். ‘‘உண்மையில் தக்காளி உணவுக்கு அவசியமே இல்லை. குறிப்பாக, அதன் தோல் மற்றும் விதைகள் ஜீரணமாவதே இல்லை. உடலுக்கும் குறைவான பலனைத்தான் தருகிறது. உடலில் பித்தம், கபம் அதிகரிக்கிறது’’ என்று சொல்லி, தக்காளி இல்லாத சில ரெசிபிகளை நமக்குச் செய்து காட்டுகிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் ராஜமுருகன்.

கூட்டுக்குழம்பு

என்னென்ன தேவை?

சீரகம் - 2 டீஸ்பூன்,
தனியா - 3 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
பூண்டு - 8 பல்,
இஞ்சி - சிறு துண்டு,
சின்ன வெங்காயம் - 5,
நிலக்கடலை - ஒரு கைப்பிடி,
புளி - சிறிய கோலி குண்டு அளவு,
ஊற வைத்த கம்பு - 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிதளவு, 
உப்பு- தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

சீரகம், தனியா, மிளகு, பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், நிலக்கடலை, ஊற வைத்த கம்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு கடாயில் அரைத்த கலவை, உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியபின் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு நல்ெலண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கி இறக்கவும். சுவையான கூட்டுக் குழம்பு ரெடி.

பச்சை ரசம்

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 50 கிராம்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும். சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நசுக்கிய சின்ன வெங்காயத்தையும், அரைத்த விழுதையும் தண்ணீரில் கரைத்தால், ரசம் ரெடி. சூடான பச்சரிசி சாதத்துடன் சேர்த்து சாப்பிட இது சுவையாக இருக்கும்.

வாழைக்காய் பிஞ்சு குழம்பு

என்னென்ன தேவை?

பிஞ்சு வாழைக்காய் - 4,
நறுக்கிய வெங்காயம் - 1 கைப்பிடி,
பூண்டு - 10 பல்,
தனியா - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 2 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிதளவு,
காய்ந்த மஞ்சள் - 1 துண்டு,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எலுமிச்சை - 1

எப்படிச் செய்வது?

வாழைக்காயை தோலுடன் மிதமான தீயில் நன்கு சுடவும். தோல் கருகிய பின் தோலை நீக்கி விட்டு, வாழைக்காயை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாழைக்காயை வதக்கவும். அத்துடன் அரைத்த விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 10 நிமிடத்தில் பச்சை வாசனை போய்விடும். அதன் பிறகு தனியே கடாயில் கடுகு, நல்லெண்ணெய் சேர்த்து தாளித்து இறக்கவும்.

- புகழ் திலீபன்
படங்கள்: ஆர்.சி.எஸ்