ஃப்யூஸ் போன பல்பு ஒளிருது!



ஒன்றுக்கும் உதவாத ஆளைத்தான் ‘ஃப்யூஸ் போன டியூப் லைட்’ என்று கலாய்ப்போம். ஆனால், அந்த டியூப் லைட்டுக்கே மீண்டும் வெளிச்சம் தந்திருக்கிறார் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக். இவர் கண்டுபிடித்திருக்கும் புதிய தொழில்நுட்பம், வீணான பல்புகளை அழகாக எரிய வைக்கிறது. ஐ.டி.ஐயில் ஏ.சி மெக்கானிசம் படித்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமே வழங்குகிறதென்றால் சும்மாவா!



‘‘எனக்கு சொந்த ஊர் ராணிப்பேட்டை பக்கம் இருக்கிற புளியங்கண்ணு கிராமம். அப்பா நாகராஜன் ரிட்டயர்டு ராணுவ வீரர். இப்போ செக்யூரிட்டியா வேலை பார்க்கறார். அம்மா மகாலட்சுமி, தம்பி, தங்கச்சி எல்லாம் எனக்கு நிறைய சப்போர்ட். ஏ.சி மெக்கானிசம் படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் பத்தி ஒரு பாடம் இருக்கு. அதுதான் என்னை இப்படியொரு கண்டுபிடிப்புக்கு தூண்டிச்சு.

முதல்ல, பல்பு ஏன் ஃப்யூஸ் போகுதுனு பார்த்தேன். டியூப்லைட் உள்ளே இருக்கறது மெர்க்குரி வாயு. ரெண்டு பக்கமும் உள்ள டங்ஸ்டன் ஹீட்டாகி மெர்க்குரி வாயுவை இயக்கும்போது, எலெக்ட்ரான் செயல்பட்டு வெளிச்சம் கிடைக்கும். இதுதான் டியூப்லைட் இயங்குற விதம். அது ஃப்யூஸ் போகுதுன்னா ஒண்ணு டங்ஸ்டன் கட்டாகியிருக்கலாம்; அல்லது மெர்க்குரி கேஸ் வீக்காகியிருக்கலாம்.

என்னோட கண்டுபிடிப்புல, ஃப்யூஸ் போன பல்புல முதல்ல ஹீட்டை ஏற்படுத்துறேன். அதுக்கு, 240 வோல்ட்ல வர்ற வீட்டு கரன்ட்டை 90 வோல்ட்டா குறைச்சு பயன்படுத்தறேன். இந்த முறைப்படி டியூப் லைட் மாட்டுற இடத்துல இருக்குற ரெண்டு கம்பியும் வெப்பமாகி உள்ளே இருக்குற மெர்க்குரி கேஸை இயக்கும். உடனே எலெக்ட்ரான் கடத்தல் ரெண்டு பக்கமும் நடக்கும். பல்பும் எரியத் தொடங்கும். சோக், ஸ்டார்ட்டர் எதுவும் தேவையில்ல. லைட் ஃப்யூஸ் ஆகவும் சான்ஸே இல்ல.

குறைஞ்சது 15, 20 வருஷத்துக்கு இப்படியே ஒளி கொடுக்கும்!’’ என்கிற கார்த்திக், இந்தத் தொழில்நுட்பத்துக்கு ‘ஃப்ளோரசன்ட் மெர்க்குரி எலெக்ட்ரான் ஆக்டிவேட் சிஸ்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். ‘‘இந்தக் கண்டுபிடிப்புக்கு இன்னும் காப்புரிமை பெறலை. இது, என் சித்தப்பா மூலமா நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகத்துக்கு தெரிய வந்துச்சு.

அவங்க என் கண்டுபிடிப்பைப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டாங்க. அப்புறமாதான் இந்த கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. அந்த உற்சாகம் இன்னும் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உத்வேகம் கொடுத்திருக்கு. வேஸ்ட்டான மின்பொருட்களை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வர்ற என்னோட கண்டுபிடிப்பு உலகம் போற்றும்படி இருக்கும்!’’ என்கிறவர் குரலில் உறுதி தெரிகிறது. 

- பேராச்சி கண்ணன்