சிக்கனம்!



-விஜயநிலா

காரிலிருந்து இறங்கியபோதே கவனித்தான் இளங்கோ. அந்த வீடு பெயின்ட் அடித்த சுவடே மறைந்து போய் காரை பெயர்ந்திருந்தது. போர்ட்டிகோவில் ஒரு பழைய மாருதி 800 சோர்வுடன் நின்றிருந்தது. அதற்குத் துணையாக ஒரு பழைய பஜாஜ் சேடக் ஸ்கூட்டர். உள்ளே சிறிய ஹால். பிரம்பு நாற்காலிகள். பழைய கால கலர் டிவி. சுவரில் ஒரே ஒரு கல்யாண போட்டோ. புவனாவின் பெற்றோருடைய போட்டோ என்பது அதன் பழுப்புத்தன்மையில் தெரிந்தது.



‘‘பொண்ணை வரச்சொல்லுங்க!’’ என்றார்கள். புவனா சாதாரண சில்க் காட்டனில் வந்தாள். காபியும் பலகாரமும் இடம் பெயர்ந்தன. வெளியே வந்த இளங்கோ அம்மாவிடம் சொன்னான். ‘‘இந்த இடம்தான் சரிப்பட்டு வரும். வீட்டைப் பார்த்தியா? ஆடம்பரத்தை விரும்பாம, அனாவசிய செலவு பண்ணாம, இருப்பதை வச்சி திருப்திப்பட்டுக்கறாங்க. புவனாவும் சிக்கனமா இருந்து நம்ம வீட்டை கவனிச்சுக்குவா!’’

மாப்பிள்ளை வீட்டார் பச்சைக் கொடி காட்டிப் போவதை ஜன்னல் வழியாகப் பார்த்த புவனா தனக்குள் சொல்லிக் கொண்டாள். ‘‘யப்பா, இந்த மிடில் கிளாஸ் ஜெயில்ல இருந்து விடுதலை. போனதும் அந்த வீட்டுல கார், டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்னு எல்லாத்தையும் புத்தம் புதுசா மாத்திடணும். இங்க விட்டதையும் சேர்த்து வச்சி அனுபவிக்கணும்!’’