பிரார்த்தனை



-ரித்விக்

‘‘கடவுளே, இவரைக் காப்பாற்று! இவர் நோயுடனேயே இருந்தாலும் நூறாண்டு வாழும் பாக்கியத்தைக் கொடு... எனக்கும் நிம்மதி கொடு!’’ - மனமுருக வேண்டிக் கொண்டாள் பாக்கியம். அவள் முன்னால் படுக்கையில் அந்த முதியவர் படுத்திருந்தார். மூச்சு விடும் சிறு அசைவைத் தவிர வேறில்லை அவரிடம்.



பாக்கியம் அவருக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாள். அவர் விழிகள் மூடியபடி இருந்தன. அவரைத் தொட்டு உணர்வுக்குக் கொண்டுவந்து, தன் கையாலேயே அவர் வாயைத் திறந்து மருந்தை ஊற்றினாள். ‘இன்னும் எத்தனை நாளோ கடவுளே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். மாலையில் திடீரென பெரியவரிடம் வித்தியாசமான அறிகுறிகள் தெரிந்தன. பாக்கியம் பதறியபடி மருத்துவரை அழைத்தாள். பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், ‘‘சாரி, இறந்துவிட்டார்’’ என்று தெரிவித்தார்.

வீட்டார் அனைவரும் துக்கப்பட்டார்கள். ஆளாளுக்கு பெரியவருடனான தம் அனுபவங்களைப் பேச ஆரம்பித்தார்கள். வீட்டுக்கார அம்மாள் வந்தாள். ‘‘பாக்கியம், நீ ஆறு மாசமா இவரை ரொம்பவும் அக்கறையோட கவனிச்சுகிட்டே. ஆனா, பாவம் உனக்கும் சரி, எங்களுக்கும் சரி, கொடுத்து வைக்கல!’’ என்றாள். கண்ணீர் பொங்கிப் பெருக, அப்போதிலிருந்து தன் வருமானம் நின்றுவிட்ட வருத்தத்தில் அந்த வீட்டுப் படியிறங்கினாள் நர்ஸ் பாக்கியம்.