புத்தகங்கள் ஓரிடத்தில் அடைஞ்சு கிடக்கக் கூடாது...பரவணும்!



புத்தகங்களோடு வாழ்ந்து, அரிய தமிழ் நூல்களை மறுபிறவி எடுக்கச் செய்யும் மகத்தான இலக்கிய ரசனையாளனின் வாக்குமூலம் இது!

சென்னை புத்தகக் காட்சி... ஒரு புத்தகக் கடையின் முகப்பில் அந்தப் பெரியவரை பெரும் இளைஞர் கூட்டம் சூழ்ந்து நிற்கிறது.
“சாண்டில்யனோட ‘செண்பகத் தோட்டம்’ வானதியில கிடைக்கும். கோமகளோட ‘இனிக்கும் நினைவுகள்’ இப்ப பிரின்ட்ல இல்லை. ரங்கநாயகியோட ‘குடை ராட்டினம்’ பாரி நிலையத்தில கிடைக்கும்...”



“ஐயா! ‘சமய சஞ்சீவி’ நாவல் யாரு எழுதினது... இப்போ கிடைக்குமா?” “1905ல வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதினது. அருமையான துப்பறியும் நாவல்... எடுத்தா முடிக்காம கீழ வைக்க மாட்டீங்க. ஆனா இப்போ மார்க்கெட்ல இல்லை...” இளைஞர்கள் கேட்கும் அத்தனை சந்தேகங்களுக்கும் விரல் நுனியில் விடை இருக்கிறது அந்தப் பெரியவரிடம்.

பெயர் சரவணன். மதுரை மேல மாசி வீதியில் வீடு. ஒரு நகைக்கடையில் வேலை செய்கிறார். புத்தகக் காட்சி தொடங்கி விட்டால், முடியும் வரைக்கும் சென்னை வாசம்தான். புத்தகங்களை பேக்கிங் செய்ய, அடுக்க, சில்லரை வாங்கித் தர என சின்னச் சின்ன வேலைகள். முழு நேர வேலை, புத்தகங்களைப் பற்றிப் பேசுவது..!

சரவணன் தீவிர புத்தகப் பித்தர். தமிழில் மிக அரிய 10 ஆயிரம் புத்தகங்கள் இவரின் சேகரிப்பில் இருக்கின்றன. தன்னிடம் இருக்கும் அரிய புத்தகங்களை பதிப்பகங்களுக்குக் கொடுத்து மறுபதிப்பு செய்யச் செய்கிறார். இவரின் புண்ணியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் மறு உருவாக்கம் பெற்றுள்ளன. 40க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இவரோடு தொடர்பில் இருக்கின்றன. கஷ்ட ஜீவனம்தான்... ஆனாலும் இந்தப் பணிக்காக எவரிடமும் ஒரு பைசா வாங்குவதில்லை.



“10 வயசுலேயே புத்தகம் படிக்கிற ஆர்வம் வந்திடுச்சு. எங்க வீட்டுக்கு பக்கத்துல எஸ்.எஸ்.அருணாசல நாடார்னு ஒருத்தர் புத்தகக்கடை வச்சிருந்தார். விடுமுறை நாட்கள்ல அங்கே போய் உக்காந்திருப்பேன். அவர் எங்காவது வெளியில போகணும்னா, எனக்கு டீயும் பலகாரமும் வாங்கிக் கொடுத்து ‘கடையைப் பாத்துக்கடா’ன்னு விட்டுட்டுப் போவார். முத்து காமிக்ஸ், பாலமித்ரா, ரத்னபாலா, அம்புலிமாமா, கலைப்பொன்னி காமிக்ஸ்னு நிறைய படிப்பேன்.

அங்கிருந்துதான் ஆரம்பமாச்சு. அப்படியே துப்பறியும் நாவல், குடும்ப நாவல்னு படிப்படியா மேல ஏறி இலக்கியங்கள் பக்கம் வந்தேன். திருமலை நாயக்கர் கல்லூரியில பி.காம் சேர்ந்தேன். அங்கே வாசிப்புக்கு தகுந்த சூழல் இருந்துச்சு. சு.வெங்கடேசன், சீனு ராமசாமியெல்லாம் எனக்கு ஜூனியர்கள். பாடப்புத்தகத்தை ஓரமா வச்சுட்டு கதை, கவிதைன்னு தேடித் தேடி வாசிச்சேன். வாசிச்சதை பேசவும், புதுப் புத்தகங்கள் பத்தி விவாதிக்கவும் நல்ல களம் அமைஞ்சுச்சு. 

கல்லூரிக் காலத்தில இருந்தே புத்தக சேகரிப்புல ஆர்வம் உண்டு. அபூர்வமான, காணக் கிடைக்காத புத்தகங்களைப் பாத்தா, என்ன விலையா இருந்தாலும் வாங்கிடுவேன். பல நாள், சாப்பாட்டுக்கு வச்சிருந்த காசுல புத்தகங்கள் வாங்கிட்டு பட்டினி கிடந்திருக்கேன். படிக்கிற காலத்திலேயே எம்.எஸ்.உதயமூர்த்தி மேல பெரிய ஈடுபாடு உருவாச்சு. ‘கிராம வளர்ச்சியே மக்கள் வளர்ச்சி’ங்கிற அவரோட கொள்கை பிடிச்சுப் போயி அவர்கூட சேர்ந்து இயங்க ஆரம்பிச்சேன். காவிரி நீருக்காக குமரி டூ சென்னை, பொதிகை மலையை காப்பாத்த வலியுறுத்தி நாகர்கோவில் டூ மதுரை, மதுவிலக்கை வலியுறுத்தி வேலூர் டூ சிதம்பரம்னு நிறைய நடைபயணங்கள் போனோம்.

ஒரு கட்டத்துல உதயமூர்த்தி தேர்தல் அரசியலுக்குப் போனார். அதுல எனக்கு உடன்பாடில்லை. வெளியில வந்துட்டேன். வசதிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. அப்பா நகைக்கடை வச்சிருந்தார். ஆனா நமக்கு அந்தத் தொழில் ஒட்டலே. நமக்குன்னு ஏதாவது செஞ்சாகணுமேன்னு ஒரு உந்துதல்ல வட இந்தியாவுக்குப் போயிட்டேன். பல தொழில்கள் செஞ்சேன். 16 வருஷம் முன்னாடி அப்பா இறந்துட்டார். கடைப் பொறுப்பை முழுமையா ஏத்துக்க வேண்டிய நிலை. வந்து பொறுப்பா உக்காந்துட்டேன்.

ஆனாலும் அப்பா அளவுக்கு நமக்கு தொழில் சூட்சுமம் பிடிபடலே. கொஞ்ச நாள்ல எல்லாம் கை விட்டுப் போச்சு. இப்போ ஒரு நகைக்கடையில வேலை செய்யிறேன். வாழ்க்கையில பெரிய பிடிமானம் ஏதுமில்லை. திருமணம் கூட பண்ணிக்கலே. நானும் அம்மாவும்தான்... நகைக்கடை சம்பளம் சாப்பாட்டுக்கும் புத்தகங்கள் வாங்கவும் போதுமானதா இருக்கு. வாசிப்பு இன்னும் உயிர்ப்பாவே இருக்கு. இன்னைக்கு எழுதுறவங்க வேற வேற தளத்துக்கெல்லாம் போயி எழுதுறாங்க.

காலத்தைப் போலவே எழுத்தும் மாறியிருக்கு. ஆனா, பழைய ஆளுமைகளை எல்லாம் மறந்துட்டோம். எழுத்துக்காக வாழ்க்கையையே அர்ப்பணிச்சு, எழுதி எழுதித் தீர்த்த பல மூத்த எழுத்தாளர்களுக்கு இங்கே நினைவுகளாக்கூட ஏதுமில்லை. இந்தத் தலைமுறைக்கு அந்த அற்புதமான எழுத்துக்களை வாசிக்கிற அனுபவம் கிடைக்கலே. அந்த ஆதங்கத்துலதான் பழைய படைப்பாளிகளோட படைப்புகளை மறுபதிப்பு பண்ண முயற்சி செய்யறேன்.

300 எழுத்தாளர்களோட மொத்த புத்தகங்களும் என் சேகரிப்புல இருக்கு. எல்லார்வி, மாயாவி, கமலா சடகோபன்னு பலவகையான படைப்பாளிகள்... கிட்டத்தட்ட பத்தாயிரம் புத்தகங்களுக்கு மேல இருக்கு... மருத்துவ நூல்கள், தமிழகத்துல இருக்கிற கோயில்கள் பத்தின நூல்கள், சினிமா பத்தின நூல்கள்னு தனித்தனி சேகரிப்புகளும் இருக்கு.  

புத்தகம்ங்கிறது ஓரிடத்துல அடைஞ்சு கிடக்கிற வஸ்து இல்லை. அது பரவிக்கிட்டே இருக்கணும். அதனால சேரச் சேர, பதிப்பகங்கள், நூலகங்களுக்குக் கொடுக்கிறது என்னோட வழக்கம். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலைய நூலகத்துக்கு சினிமா பத்தின புத்தக சேகரிப்புகளைக் கொடுத்திருக்கேன். மதுரை காந்தி மியூசியத்துக்கு தேசியத் தலைவர்கள் பற்றின நூல்களை சேகரிச்சுத் தந்திருக்கேன். நான் எழுத்தாளன் இல்லை. ஆனா இலக்கிய ரசனையாளன்.

நான் படிச்சு மயங்குன, என்னை மாத்துன எழுத்துகள் எல்லாருக்கும் போய்ச் சேரணும்ங்கிற எண்ணம்... அவ்வளவுதான்! புத்தகங்களோடவே வாழ்றதால கொஞ்சம் கூடுதலா சில செய்திகள் தெரியும். மத்தபடி, நீங்க நினைக்கிற மாதிரி நானொண்ணும் விசித்திரப் பிறவியில்லை...” - சிரிக்கிறார் சரவணன்.

‘‘நான் எழுத்தாளன் இல்லை. ஆனா இலக்கிய  ரசனையாளன். நான் படிச்சு மயங்குன, என்னை மாத்துன எழுத்துகள் எல்லாருக்கும்  போய்ச் சேரணும்ங்கிற எண்ணம்... அவ்வளவுதான்!’’

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஜெகன்