தோற்றம்



-எஸ்.எஸ்.பூங்கதிர்

‘‘சாரிங்க... நீங்க பாக்க நோஞ்சான் மாதிரி ரொம்ப டல்லா இருக்கிங்க. இது செக்யூரிட்டி வேலை. வேணும்ன்னா நல்லா உடம்பைத் தேத்திக்கிட்டு கொஞ்சநாள் கழிச்சு வாங்க. பாக்கலாம்!’’ - கம்பெனி மேலாளர் இப்படிச் சொன்னதும் செல்வம் மேலும் டல்லானார். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்கோம். இதுல எப்படி உடம்பைத் தேத்தறதுனு நீங்க கேட்டிருக்க வேண்டியதுதானே?’’ - மனைவி சீதா கண்ணிர் மல்க ஆதங்கப்பட்டாள்.



அந்த நேரம் சரியாக பக்கத்து வீட்டு சங்கீதா வந்தாள். ‘‘என்னக்கா, நீயும் மாமாவும் ஒரு மாதிரியா இருக்கீங்க?’’ சீதா நடந்ததைச் சொன்னாள். ‘‘அட, இவ்வளவுதானா... நான் சொல்றபடி செய்யுங்க மாமா. கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்!’’ என்றபடி சீதா பேசப் பேச, செல்வத்துக்குள் புத்துணர்ச்சி பிறந்தது. மறுநாளே அதே கம்பனிக்கு செக்யூரிட்டி வேலை கேட்டுச் சென்று வெற்றியோடு திரும்பினார்.

அடுத்த நிமிடமே அவர் அழைத்தது சீதாவைத்தான். ‘‘அம்மாடி, நீ கொடுத்த ஐடியா அபாரம். ஒரு முரட்டு மீசையை ஒட்டிக்கிட்டா பாடி வீக்கா இருக்கறதை யாரும் கவனிக்க மாட்டாங்கனு நீ சொன்னது உண்மைதான். உனக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா!’’ - ஒட்டு மீசையைத் தடவிக்கொண்டே பேசினார் செல்வம்.