அப்ளிகேஷன்



-ஸ்ரீராம்

வழக்கம் போல விவேக்கும், ரகுவும் பேசிக்கொண்டே வாக்கிங் போய்க்கொண்டிருந்தார்கள். சற்றுத் தொலைவில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு பெரியவர் சறுக்கி கீழே விழுந்தார். ரகு சட்டென அந்த பெரியவரை நோக்கி ஓட, ‘‘டேய்... டேய்... வேணாம்டா! போகாதே...’’ என்று கத்தினான் விவேக். பெரியவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். ட்ராக்ஸ் அணிந்திருந்தார். ரீபாக் ஷூ, அடிடாஸ் டி-ஷர்ட், கண்களில் கூலர்ஸ்... தலைமுடி கலரிங் செய்யப்பட்டிருந்தது. எல்லாமே வயதுக்குப் பொருத்தமில்லாத ஸ்டைல்!



ரகு பெரியவரை தோள்பட்டையில் பிடித்து தூக்க முயல, உடலை சிலிர்த்துவிட்டு எழுந்தார் அவர். ‘‘எனக்கு ஒண்ணுமில்லை... ஐயாம் ஆல்ரைட். என்னை விடு!’’ - ரகுவின் பிடியை உதறிவிட்டு அவனை எதிரி போலப் பார்த்தார். அதற்குள் அங்கு வந்துவிட்டிருந்த  விவேக், ரகுவை வலிய இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தான்.

‘‘ஏண்டா? அவர் பாவம்டா... வயசானவர்... அடிபட்டிருக்கலாம்ல! ஹெல்ப் பண்ணப்போனா இப்படி இழுத்துட்டு வந்துட்ட?’’ என்றான் ரகு. ‘‘நினைப்புதான்டா உனக்கு. அதோ அந்த பார்க் பென்ச்ல உட்கார்ந்திருக்குற மூணு பொண்ணுங்களுக்கும் இந்தாளு ரூட் போடுறார். இன்னிக்கு நீ பார்த்தது அவர் போட்ட அப்ளிகேஷன். அவர் ஃபிஸிக்கலா ஃபிட்டா இருக்காராம். காமிச்சிக்க ட்ரை பண்ணினாரு... நீ ஏன் நடுவுல புகுந்தே?’’ என்றான் விவேக். ரகு அதிர்ந்து நின்றான்!