அப்டேட்



-கு.சந்திரகாந்த்

இரண்டு ஹிட் கொடுத்த தமிழ் சினிமாவின் யங் டைரக்டர் சத்யா, பல நாள் காத்திருப்புக்குப் பின் என்னை தன் அறைக்குள் அழைத்தார். என்னைப் பற்றி சொல்லச் சொன்னார். உற்சாகமாக ஆரம்பித்தேன்... ‘‘எம்.சி.ஏ முடிச்சிருக்கேன் சார். அஞ்சு வருஷமா ட்ரை பண்றேன்... உங்களை மாதிரி நல்ல டைரக்டர்கிட்ட அசிஸ்டென்ட் ஆகணும் சார். சினிமா ஸ்க்ரீன் ப்ளே சம்பந்தமா இங்கிலீஷ்ல வந்த புக்ஸ் எல்லாம் படிச்சிருக்கேன். கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், சேதன் பகத்தோட நாவல்கள் எல்லாம் படிச்சிருக்கேன்.



ஸ்பீல்பெர்க், ஹிட்ச்காக், பாலசந்தர், பாக்யராஜ் சாரோட எல்லா  கலெக்‌ஷன்ஸும் பாத்திருக்கேன் சார். டாம் ஹாங்ஸ், அல் பசீனோ நடிச்ச படங்கள்னா விரும்பிப் பார்ப்பேன் சார்...’’ - சொல்லிக் கொண்டிருக்கும்போதே இயக்குநர் குறுக்கிட்டார். ‘‘அதெல்லாம் வுடுங்க... பத்து கொரியன் படங்களோட பேர் சொல்லுங்க பார்ப்போம்?’’ என்றார்.

நான்கு படங்களுக்கு மேல் எனக்கு ஞாபகம் வரவில்லை. ‘‘நல்லா அப்டேட் பண்ணிக்கிட்டு ரெண்டு வருஷம் கழிச்சு வந்து பாருங்க...’’ என்று அனுப்பி வைத்தார். ‘அப்டேட்’ என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் புரியாமல் குழப்பத்துடன் நான் வெளியேறி நடந்தேன்!