கவிதைக்காரர்கள் வீதி



தான் விரும்பிய
அசைவ விருந்துக்கு
அழைக்காத கோபமாகவும்
இருக்கலாம்,
அமாவாசை சோறு வைத்து
வெகுநேரமாய் அழைத்தும்
வராத காகத்துக்கு!
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.



மரத்தின் கடைசி இலை
உதிரும்போதே
சருகாகத்தான் இருந்தது!
- ச.துரைமுருகன், மண்டபம்.

கொடுக்காப் புளி மர நிழலில்
கோலிக் குண்டு விளையாட்டு
வேப்ப மர நிழலில்
வெட்டுக் கிட்டி விளையாட்டு
அரச மர நிழலில்
ஆடு புலி விளையாட்டு
எல்லா மரங்களும்
எரிபொருளாய் ஆனபின்
கிராமத்தில் எப்போதும் வெக்கை
- நாகேந்திர பாரதி, சென்னை-24.

உடைந்த புல்லாங்குழலில்
வாசிக்க யாருமற்று
வெளியே
அலைந்துகொண்டிருக்கின்றது
காற்று.
- ந.கன்னியக்குமார், நல்லரசன்பேட்டை.

தரையை வந்து தொட்ட
கோடை மழைத்துளி
சூடு தாங்காமல்
துடித்துப் போனது.
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

தலை வாரி விடுகையில்
அம்மாவை நினைவுபடுத்துகிறார்
சலூன் கடைக்காரர்
- சுகுமார் சூர்யா, திருவண்ணாமலை.