அனந்தனுக்கு 1000 நாமங்கள்!



520. அம்போநிதயே நமஹ (Ambho Nidhaye namaha)(திருநாமங்கள் 520-523 பாதாள லோகத்தில் இருந்தபடி மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம மூர்த்தியின் பெருமைகள்)
வீர சிகாமணி பல்லவராயன் என்ற மன்னன், ஸ்ரீபராசர பட்டர் என்ற ஆசார்யரை வந்து அடிபணிந்தான். சுவாமி, நான் ஒரு மன்னனாக இருக்கிறேன். பல ராஜ்ஜியப் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. இயந்திரத்தனமாக வாழும் அடியேனுக்கு இறைவனை நினைக்கவே நேரம் இல்லை.

இறைவனை நான் நினைப்பதற்கோ, இறைவன் என்னைக் காப்பதற்கோ எளிமையான வழி இருந்தால் சொல்லுங்கள் என்று வேண்டினான் பல்லவராயன். அதற்குப் பராசர பட்டர், கடற்கரை வெளியை நினைத்திரும் என்று பதில் அளித்தார். பராசர பட்டரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பல்லவராயன், கடற்கரையை நினைப்பதால் என்ன பலன் என்று கேட்டான். அப்போது பராசர பட்டர் கீழ்க்காணும் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

ராமனும் லட்சுமணனும் வானரச் சேனையோடு இலங்கை நோக்கிப் புறப்பட்டுச் சேதுக்கரையை வந்தடைந்தார்கள். இனி கடலைக் கடப்பதற்கு என்ன வழி என்பதை நாளை சிந்திப்போம் என்று முடிவெடுத்து விட்டு அன்றிரவு எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள்.அச்சமயம் வானர வீரர்கள் ராம லக்ஷ்மணர்களிடம், நீங்கள் இருவரும் நன்றாக உறங்குங்கள்.

நாங்கள் விழித்திருந்து இரவு முழுவதும் காவல் காக்கிறோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் நடந்தது என்னவென்றால், நடந்து வந்த களைப்பில் மொத்த வானரச் சேனையும் உறங்கி விட்டது. அத்தனை பேரும் உறங்கினாலும் கூட, இரவு முழுவதும் ராமனும் லக்ஷ்மணனும் கண் விழித்திருந்து வில்லும் கையுமாக வானரச் சேனையைச் சுற்றிச் சுற்றி வந்து எழுபது வெள்ளம் வானரச் சேனையையும் பாதுகாத்தார்கள்.

அனுமன் நடுவில் சற்றே விழித்துக் கொண்டு ராமனிடம், நீங்கள் ஏன் இப்படி விழித்திருந்து சிரமப்பட வேண்டும் என்று கேட்டார். அதற்கு ராமன், எப்போது இந்த வானரச் சேனை என்னை நம்பி வந்து விட்டதோ இனி அவர்களைக் காக்கும் முழு பொறுப்பும் என்னுடையது என்று பதில் அளித்தான்.இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த பராசர பட்டர், பல்லவராயனிடம், அந்தச் சேதுக் கடற்கரையைத் தான் நினைக்குமாறு உன்னை அறிவுறுத்தினேன்.

வானரர்கள் தாங்கள் ராமனைப் பாதுகாக்கப் போவதாக நினைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் உறங்கிய போதும் அவர்களைக் காத்து நின்றவன் ராமன் என்பதே உண்மை. அதுபோலத் தான் நீயும் விழித்திருக்கும் நேரத்தில் எதையேனும் நினைத்து இறைவனின் அருளை நாடலாம் என நினைக்கிறாய். ஆனால் நீ உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட இறைவன் உன் கூடவே தான் இருக்கிறான், உன்னைக் காத்துக் கொண்டு தான் இருக்கிறான்.

மேலும், ராஜ்ஜியப் பணிகள் நிறைய இருப்பதாகச் சொன்னாயே. அவற்றுள் எதையுமே நீ செய்யவில்லை. உன்னைக் கருவியாகக் கொண்டு திருவரங்கநாதன் தான் அத்தனையும் செய்து கொண்டிருக்கிறான். உனக்கு மேல் ஒரு சக்கரவர்த்தி இருந்து உன்னைத் தாங்குகிறார். அவனுக்கு மேல் இந்திரன் இருந்து கொண்டு மூவுலகை ஆள்கிறான். அந்த இந்திரனுக்கும் மேல் பிரம்மா இருந்து கொண்டு இந்திரனுக்கு ஆணைகள் இடுகிறார்.

அந்த பிரம்மாவோடு சேர்த்துப் பதினான்கு உலகங்களையும் ஆதிசேஷன் தாங்குகிறார் என்று சாஸ்திரங்கள் மூலம் நாம் அறிகிறோம்.அப்படியானால் ஆதிசேஷன் தாங்கும் பிரபஞ்சத்தில் பூலோகத்தில் பாரததேசத்தில் பேரரசனுக்கு உட்பட்ட உனது சிற்றரசு என்பது எம்மாத்திரம் என்று நினைத்துப் பார். உன் கடமையைச் செய்யாமல் சோம்பேறியாக இருக்கச் சொல்லவில்லை. ஆனால் நான் பெரியவன் என்ற கர்வம் மட்டும் வந்துவிடவே கூடாது.

அனைத்தையும் தாங்குபவர் ஆதிசேஷன் என்றால், அந்த ஆதிசேஷனுக்கும் கீழே திருமால் கூர்ம மூர்த்தியாக இருந்து, ஆதிசேஷனோடு சேர்த்து மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறார் தெரியுமா. அவரால் தாங்கப்பட்டு நீ செயல்படுகிறாய் என்பதைப் புரிந்துகொள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இன்றும் பெருமாள் கோவில்களில் உள்ள சேஷவாகனங்களின் கீழே கூர்ம மூர்த்தி ஆமை வடிவில் எழுந்தருளி இருப்பதைத் தரிசிக்கலாம். இப்படிப் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திக் கொண்டு ஆதிசேஷனோடு உலகங்களைத் தாங்கும் கூர்ம மூர்த்தி அம்போநிதி என்று அழைக்கப்படுகிறார். அம்பஸ் என்றால் தண்ணீர், அதாவது பாதாளஜலம். நிதி என்றால் இவ்விடத்தில் தன்னை இருத்தியவர் என்று பொருள்.

அம்போநிதி என்றால் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திய கூர்ம மூர்த்தி என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 520-வது திருநாமம்.`அம்போநிதயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.

521. அனந்தாத்மனே நமஹ (Ananthaathmaney namaha)
1000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அவதரித்த ஆதிசேஷனின் அம்சமான ராமாநுஜர், அனைவரும் இறைவனை அடையலாம் என்ற உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தினார். ராமாநுஜர் திவ்ய தேச யாத்திரைக்குச் சென்ற போது, தமிழகத்தின் தென்கோடியில் உள்ள திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்தை அடைந்தார்.

அந்தத் திருக்குறுங்குடியில் கோவில் கொண்டுள்ள திருக்குறுங்குடி நம்பிபெருமாள், ராமாநுஜரைத் தன் திருக்கோவிலுக்கு வரவேற்று, அவரைப் பார்த்து, ராமாநுஜரே, நான் பல அவதாரங்கள் எடுத்து, உபதேசங்கள் செய்து, நடந்து காட்டி, பல முயற்சிகளை எடுத்தும் மக்கள் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் வந்து பூமியில் அவதாரம் செய்து வெகு விரைவில் எல்லாரையும் திருத்திவிட்டீர்களே, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார்.

பகவானே, நீ அறியாததில்லை. எல்லாம் அறிந்தும் லீலைக்காக என்னிடம் நீ கேட்கிறாய். அப்படியானால் உன் லீலையில் நானும் பங்கேற்கிறேன். ரகசியத்தை அறிய வேண்டும் என்றால் இப்படிப் போகிற போக்கில் கேட்கலாமா. எனக்கு ஆசாரியன் என்ற ஸ்தானத்தைத் தந்து விட்டு நீ சிஷ்யனாக அமர்ந்துகொண்டால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன் என்று
விடையளித்தார் ராமாநுஜர்.

உடனே திருக்குறுங்குடி நம்பி ஆசார்ய சிம்மாசனத்தை ராமாநுஜருக்கு அளித்தார். தான் சிஷ்யனாகக் கீழே நின்று கொண்டார். தனது ஆசார்யனான பெரிய நம்பிகள் அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணி அந்த ஆசனத்தை விழுந்து வணங்கினார் ராமாநுஜர். அதன்பின் தான் அந்த ஆசனத்தில் பணிவோடு ஏறி அமர்ந்து கொண்டார்.

பகவானே, இப்போது அதே கேள்வியைக் கேள், பதில் சொல்கிறேன் என்றார் ராமாநுஜர். திருக்குறுங்குடி நம்பியும் கேட்க, திருமந்திரம் என்னும் எட்டெழுத்து மந்திரத்தையும், த்வயம் எனப்படும் இரண்டு வரிகள் கொண்ட மந்திரத்தையும் ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தபடிப் பெருமாளுக்கு ராமாநுஜர் உபதேசம் செய்தார். அதைத் தொடர்ந்து ராமாநுஜர், இந்த இரண்டு மந்திரங்களையும் உபதேசம் செய்து தான் மக்களைத் திருத்தினேன் என்று பெருமாளிடம் கூறினார்.

நான் இதைச் சொல்லிப் பார்த்தேன், ஆனால் மக்கள் திருந்தவில்லையே என்று பெருமாள் கேட்க, ராமாநுஜர், பகவானே, நீ சொல்வதற்கும் அடியேன் சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. நீ பெரியவன் என்பது தான் உண்மை. ஆனால் நீயே உன் வாயால் நான் பெரியவன் என்று சொன்னால் அதை இந்தக் கலியுக மக்கள் ஏற்க மாட்டார்கள். நான் உபதேசிக்கும் போது, அவன் பெரியவன் என்று உன்னைப் பற்றிச் சொன்ன போது மக்கள் ஏற்று விட்டார்கள். தானே தன் பெருமையைப் பேசுவதை விட, வேறொரு நபர் பேசுவது தானே பொருத்தமாக இருக்கும் என்று விளக்கினார்.

ஆஹா என்று ராமாநுஜரின் விளக்கத்தைப் பாராட்டினார் திருக்குறுங்குடி நம்பி. அந்தப் பெருமாளைத் தனது சிஷ்யராக அங்கீகரித்த ராமாநுஜர், ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்ற திருநாமத்தையும் அந்தப் பெருமாளுக்கு வழங்கினார் என்பது வரலாறு.எல்லாம் ஆனபின் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கிய ராமாநுஜர், இறைவா இப்போது உனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

 என்னை ஆசார்ய சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்க்க நினைத்தாய். உன் ஆசைக்காக அடியேனும் செய்தேன். இனி என் கருத்தைச் சொல்கிறேன் கேள். எட்டெழுத்து மந்திரம், த்வய மந்திரம் ஆகியவற்றை உலகுக்கு உரைத்தவன் நீ. உபதேசம் செய்வதற்குரிய ஞானத்தை அடியேனுக்குத் தந்தவன் நீ.

அடியேனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அடியேன் மூலம் பல செயல்களை நிகழ்த்தியவன் நீ. உள்ளிருந்து நீ கொடுத்த சக்தி, ஞானம் உள்ளிட்டவற்றைக் கொண்டு நீயே எல்லாம் நிகழ்த்தி விட்டு, ஏதோ நானே செய்தது போல் என்னைக் கொண்டாடுகிறாயே, உன் எளிமையையும் லீலையையும் என்னவென்று சொல்வேன் என்று நம்பியிடம் சொன்னார்.

அதற்கு நம்பி, அப்படியில்லை, நீங்களே ஆதிசேஷன் தானே. உங்களுக்கு இல்லாத ஆற்றலா என்று ராமாநுஜரிடம் கேட்டார். ராமாநுஜரோ, பகவானே சரியான உதாரணம் சொன்னாய். நான் ஆதிசேஷனாக இருந்து 14 உலகங்களைத் தாங்குகிறேன் என்றால், அந்த ஆதிசேஷனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து சக்தி தருபவன் நீ தானே. ஆதிசேஷனுக்குக் கீழே கூர்ம மூர்த்தியாக இருந்து தாங்கிக் கொண்டிருப்பவன் நீ. எனவே அனைத்துக்கும் நீயே காரணம் என்றார்.

இப்படி ஆதிசேஷனுக்குள்ளும் ஆத்மாவாக இருந்து அவரோடு சேர்த்து அவர் சுமக்கும் பிரபஞ்சத்தையும் தாங்கும் கூர்ம மூர்த்தி அனந்தாத்மா என்று அழைக்கப்படுகிறார். அனந்தன் என்பது ஆதிசேஷனின் திருநாமங்களுக்குள்ளும் ஒன்று. அனந்தாத்மா என்றால் ஆதிசேஷனுக்கு ஆத்மாவாக இருந்து தாங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்
521-வது திருநாமம்.

`அனந்தாத்மனே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்குச் செருக்கு, கர்வம் ஏற்படாதபடிக் கூர்ம மூர்த்தி நம்மைத் தாங்கிப் பிடித்துச் சரியான வழியில் வழிநடத்துவார்.

522. மஹோததிசயாய நமஹ (Mahodhadhishayaaya namaha)

வடுவூர் ஸ்ரீராமன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் 1930களில் வடுவூரில் வசித்துவந்தார். அவரது தந்தை வாங்கி இருந்த பல கடன்கள் அடைக்கப்படாமல் இருந்தபடியால், அவரது ஒரே மகன் என்ற முறையில் வடுவூரில் இருந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் விற்றுக் கடன்களை அடைத்து விட்டார் ஸ்ரீநிதி சுவாமிகள். இனி வடுவூரிலிருந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டும்.

அவருக்கோ வடுவூர் ராமனை விட்டுப் பிரிந்து போக மனமேயில்லை. வேறு வழியில்லாமல், கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க நேரிட்டு விட்டது. ராமனிடம் இருந்து விடைபெற்றுச் செல்வதற்காகத் திருக்கோவிலுக்குள் சென்றார் ஸ்ரீநிதி சுவாமிகள்.ராமனைப் பார்த்து ஒரு ஸ்லோகம் இயற்றி அதை விண்ணப்பித்தார்.

க்ருஹ க்ஷேத்ர ஆராமா ஜனக சரண ஸ்பர்ச ஸுபகா:
த்வயா மத்தோ நீதா மனுகுல பதே கிம் மம தத:
த்ரிபங்கீ ஸம்ஸேவ்யம் மதுர மதுரம் தே வபுரிதம்
மதந்தஸ் ஸம்ஸக்தம் ந கலு பரிஹர்த்தும் ப்ரபவஸி

ராமா, என்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டாயே. என் தந்தையின் திருவடி ஸ்பரிசம் பட்ட வீடு, நிலம், தோட்டம் எல்லாம் என்னை விட்டுச் சென்று விட்டன. ஆனாலும் இதற்காக எல்லாம் நான் கவலைப் படப் போவதில்லை. ஏனென்றால் இங்கே வடுவூரில் அழகாக வளைந்தபடி எழுந்தருளியிருக்கும் உனது இந்த வடிவம் என் நெஞ்சை விட்டு நீங்காமல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. ராமா, உன்னிடம் ஒரு சவால் விடுகிறேன்.

என்னிடமிருந்து வீட்டையும் நிலத்தையும் தோட்டத்தையும் பறித்த நீ, முடிந்தால் என் உள்ளத்தில் இருக்கும் உன் உருவத்தைப் பறித்துக் கொள் பார்க்கலாம். நீயே நினைத்தாலும் என் மனதிலிருந்து உனது வடிவம் நீங்காது என்று சவால் விட்டு விட்டு வடுவூரில் இருந்து புறப்பட்டார்.சுமார் நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்தன.

ஸ்ரீநிதி சுவாமிகளின் மகன்கள் நன்றாக வளர்ந்து, வசதி வாய்ப்பு பெற்றவாறே, 1986-ம் ஆண்டு வடுவூரில் விற்ற வீட்டை மீண்டும் வாங்க முயன்றார்கள். இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த வீடு மாறாமல் அப்படியே இருந்தது. வீட்டின் சொந்தக்காரரும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கே வீட்டை விற்கச் சம்மதம் தெரிவித்தார்.

அதன்பின் அவ்வீட்டை வாங்கி, வடுவூர் ராமர்கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் அதே வீட்டுக்குக் குடிவந்து, தினந்தோறும் வடுவூர் ராமனின் புன்னகையிலும் அழகிலும் ஈடுபட்டுப் புன்னகை ராமாயணம் இயற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள். இதில் வியப்பு என்னவென்றால் இத்தனை வருடங்கள் வீட்டைப் பாதுகாத்து மீண்டும் ஸ்ரீநிதி சுவாமிகளிடமே வழங்கியவர் பெயர் திரு.கோதண்டராமன்.

இந்த லீலையின் வாயிலாக மற்ற செல்வங்கள் வரும், போகும். ஆனால் இறைவன் தான் நிரந்தரமான செல்வம், அவன் என்றுமே தன் அடியார்களை விட்டுப் போவதில்லை என்பதை வடுவூர் ராமன் உணர்த்தி விட்டான். அதுபோலத்தான் பிரளயக் காலத்திலும் கூட, மொத்தப் பிரபஞ்சமும் பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடும்.

பிரபஞ்சமே அழிந்த பின்னும் கூட, அதைக் கீழே இருந்து தாங்கும் ஆதிசேஷனும் கூர்ம மூர்த்தியும் நிரந்தரமாக இருப்பார்கள். அந்த ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷனைப் படுக்கையாக்கி அவர் மீது பள்ளி கொண்டிருப்பாராம் கூர்ம மூர்த்தி. மொத்தப் பிரபஞ்சமும் அழிந்தாலும், தனது படுக்கையான ஆதிசேஷனும், கூர்ம மூர்த்தியான தானும் அழிவதில்லை என்று பகவான் இதன்மூலம் உணர்த்துகிறார்.

இப்படி ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷப் படுக்கையில் பள்ளிகொண்டிருக்கும் கூர்ம மூர்த்தி மஹோததிசய என்று அழைக்கப்படுகிறார். மஹோததி என்றால் ஊழிக்கடல். சய என்றால் சயனித்திருப்பவர். மஹோததிசய என்றால் பிரளயக் கடலில் பள்ளி கொண்டிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 522-வது திருநாமம்.`மஹோததிசயாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் உள்ளிட்ட நீங்காத செல்வங்கள் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

523. அந்தகாய நமஹ (Anthakaaya namaha)

ஓர் ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகன். அந்த மகன் பொறுப்பில்லாமல் கேளிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்தான். விவசாயத் தொழிலின் பெருமைகளை எல்லாம் தந்தை எடுத்துச் சொல்லி அறிவுறுத்தினாலும் கூட அதையெல்லாம் மகன் கேட்பதாக இல்லை.

ஒருநாள் தந்தை மகன் கையில் கலப்பை, கதிர் அரிவாள் போன்ற கருவிகளைத் தந்து வயலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மகன் கதிர் அரிவாளைக் கொண்டு கையில் வெட்டுக் காயம் ஏற்படுத்திக் கொண்டு வந்தானாம் மகன். கதிரை அறுக்க அரிவாள் தந்தால் கையிலே காயம் ஏற்படுத்திக் கொள்கிறாயே என்று தந்தை அவனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனாலும் மகன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் தந்தை மகனை வயலுக்கு அனுப்பி வைத்தால், கலப்பையைக் காலில் போட்டுக் கொண்டு காலிலே காயத்தோடு வீடு வந்து சேர்ந்தான். நிலத்தை உழுவதற்குக் கலப்பையைப் பயன்படுத்தாமல் இப்படிக் காலில் போட்டுக் கொள்வதா என்றெல்லாம் தந்தை புலம்பினார். மகன் அதையும் கண்டுகொள்ளவில்லை.ஒருநிலையில் தந்தை மகனின் மனம் மாற ஒரு வருட காலம் அவகாசம் தருவோம் என்று கருதி, அவனிடமிருந்து கலப்பையையும் அரிவாளையும் வாங்கி வைத்து விட்டார். மீண்டும் ஊர்சுற்றத் தொடங்கினான் மகன்.

யாராவது விவசாயத் தொழில் பார்க்கவில்லையா என்று அவனிடம் விசாரித்தால், என் தந்தை இரக்கமில்லாதவர். என்னிடமிருந்து கதிர் அரிவாளையும் கலப்பையையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். அதனால்தான் என்னால் வேளாண்மைப் பணிக்குச் செல்ல முடியவில்லை என்று சொல்வானாம் அந்த மகன்.

இது நியாயமா, இவனிடம் கலப்பையைத் தந்தால் காலைக் காயப்படுத்திக் கொள்கிறான். அரிவாளைத் தந்தால் கையைக் காயப் படுத்திக் கொள்கிறான். அதனால்தானே இதற்கு ஓர் ஓய்வு தரும்விதமாகத் தந்தை இவற்றை வாங்கி வைத்தார். கொஞ்ச காலம் கழித்து மகனின் மனம் மாறினால், மீண்டும் அவனிடம் அதை அவர் வழங்கத்தானே போகிறார். அதுபோலத் தான் இறைவனும்.

கலப்பை, கதிர் அரிவாள் போல், நம்மிடமும் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைத் தந்து இந்த பூலோகம் என்னும் நிலத்துக்கு நம் தந்தையான திருமால் நம்மை அனுப்பி வைக்கிறார். நாம் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முக்தி என்ற பயிரை அறுவடை செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் நம்மை அனுப்பி வைக்கிறார் திருமால்.

ஆனால் நாமோ அந்த மகனைப் போலவே தவறான வழியில் கருவிகளைப் பயன்படுத்தி விடுகிறோம். இந்த உடலையும் புலன்களையும் அறிவையும் கொண்டு செய்யக் கூடாத செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். அதனால் தான் ஒருநிலையில், நாம் செய்யும் பாபங்களுக்குத் தற்காலிகமாகவாவது ஓர் ஓய்வு அளிப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் இறைவன்.

அந்த விவசாயி கருவிகளை மகனிடமிருந்து பறித்து வைத்தது போல், பிரளயத்தில் நம் உடல் ஞானம் புலன்கள் எல்லாவற்றையும் தற்காலிகமாக நம்மிடமிருந்து பறித்து வைக்கிறார் திருமால். அதன்பின் மீண்டும் இந்த உடலையும் புலன்களையும் ஞானத்தையும் தந்து மீண்டும் உலகைப் படைக்கிறார் திருமால்.

இப்படி நாம் பாபங்கள் செய்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் பாதாள லோகத்தின் கீழே எழுந்தருளியிருக்கும் கூர்ம ரூபியான
திருமால். எனவேதான் அவர் அந்தக என்று அழைக்கப்படுகிறார். அந்தக என்றால் முடிவை ஏற்படுத்துபவர். இந்தப் படைப்புச் சுழற்சிக்குப் பிரளயம் என்ற தற்காலிக முடிவை ஏற்படுத்தும் கூர்மமூர்த்தி அந்தக. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 523-வது திருநாமம்.`அந்தகாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தம் உடல், புலன்கள், அறிவு ஆகியவற்றை நல்வழியில் செலுத்தும்படிக் கூர்ம மூர்த்தி வழிகாட்டுவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்