திருத்தலங்களில் நிறைந்திருக்கும் தீர்த்தங்கள்



குளங்களை அமைப்பது, பராமரிப்பது என்பது மிகுந்த புண்ணியச் செயல்களாகும். முப்பத்தியிரண்டு அறங்களில் ஒன்று குளம் வெட்டுவதாகும். இந்த கருத்துக்களை ஒட்டிப் பெரிய தலங்களில் பல தீர்த்தங்கள் அமைக்கப்பட்டன.
பெருந்தலங்களில் அதிகளவு மக்கள் கூடி வழிபடுவதால், அவர்களின் தேவைக்கு ஏற்ப குளங்களும், நீர் நிலைகளும் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. ஒவ்வொரு தலத்திற்கும் பாடப்பட்டுள்ள தல புராணங்களில் தீர்த்த மகிமை குறித்த அத்தியாயத்தில் அத்தலத்திலுள்ள தீர்த்தங்களின் சிறப்பும், அது உண்டாக்கப்பட்டதற்கான காரணம். அதை உண்டாக்கியவரின் சிறப்பு.
அதில் இன்னின்ன காலங்களில் மூழ்குவதால் கிடைக்கும் பலன் ஆகியவை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. திருத்தலங்கள் தோறும் தேவர்கள், முனிவர்கள், அப்சரஸ்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், அரசர்கள், நாகர்கள், ஆயுத புருஷர்கள் முதலியோர் சிறப்புடன் வழிபட்டு, தீர்த்தங்கள் அமைத்ததைத் தல புராணங்களால் அறிய முடிகிறது.

இவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போமா!.புலவர்கள் ஒரு நாட்டின் நீர்வளத்தைக் குறிப்பிடுவதன் மூலம் அந்த நாட்டின் செல்வச் சிறப்பையும், வளமையையும் உணர்த்து
கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தீர்த்த யாத்திரை என்றதுமே மக்களின் நினைவுக்கு வருவது காசியும் - ராமேஸ்வரமும் ஆகும்.

காசித் தலம் வருணா-அசி என்னும், இரண்டு ஆறுகள் கங்கையோடு கலக்குமிடத்தில் உள்ளது. இரண்டு நதிகளின் நடுவில் இருப்பதால் காசிக்கு ‘‘வாரணாசி’’ எனும் பெயர் வழங்குகின்றது. காசி நகருக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் கரையிலும் சிவமூர்த்தி, விநாயகர், சூரியன், பைரவர் முதலிய பரிவாரங்களுடன் வீற்றிருக்கின்றார்.

இவற்றில் ஆனந்த கூபம், லோலார்க்க குண்டம், துர்க்காகுண்டம், பைரவகுண்டம், கௌரிகுண்டம் என்பன மிக முக்கியமானவையாகும். அன்பர்கள் தினமும் கங்கையில் நீராடி சிறிய கரகத்தில் கங்காநீரை எடுத்துக் கொண்டு சென்று விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இங்கு பஞ்ச குரோச யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்குள்ள தீர்த்தங்களில் நீராடி அவற்றின் அருகிலுள்ள சிவமூர்த்தங்களை வழிபடுகின்றனர்.

இந்தத் தீர்த்தங்களைத் தவிர கங்கைக் கரையில் 64 கட்டங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தனித் தனி பெயர்களுடன் சிவபெருமான், விநாயகர், பைரவர், அம்பிகை ஆகியோருடன் வீற்றிருக்கின்றார். கங்கைக் கரையிலுள்ள பஞ்ச கங்கா காட், அனுமன் காட், ஹரிச்சந்திரா காட், தசாஸ்வமேதா காட், மணி கர்ணிகா காட் என்பன சிறப்புடன் திகழ்கின்றன. சேது எனப்படும் இராமேஸ்வரம், ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ராமர், ராவணனைக் கொன்றதால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்தைச் சிவலிங்க வழிபாடு செய்து போக்கிக் கொண்டார். அவர் சிவபூஜை செய்ய சீதாதேவி வெண்மணலால் உருவாக்கிய லிங்கமே இந்த நாளில் ராமலிங்கேஸ்வரராகத் திகழ்கிறது.

இந்த தலத்தில், ஆலயப் பிராகாரங்களில் தேவர்களும், தேவியர்களும் உண்டாக்கிய 36 தீர்த்தங்கள் உள்ளன. சில இடங்களில் இரண்டு மூன்று கிணறுகள் அடுத்தடுத்து உள்ளன.
அக்னிதீர்த்தமாகிய கடலில் மூழ்கிய பின், இவை அனைத்திலும் மூழ்கி இறுதியில் ஆலயத்தின் உட்பிராகாரத்திலுள்ள கோடி தீர்த்தத்தில் மூழ்குகின்றனர். இந்தத் தீர்த்தங்கள் அளவால் சிறியதாக தொட்டிபோல் இருப்பதால், இவற்றுள் இறங்கி நீராட முடியாது.

வாளியால் நீரை முகந்து குளிக்கின்றனர். மூன்றாம் பிராகாரத்திலுள்ள லட்சுமி தீர்த்தம் பெரிய திருக்குளமாக விளங்குகிறது. இதன் கரையில் மகாலட்சுமி ஆலயம் உள்ளது.காசி - ராமேஸ்வர தீர்த்த யாத்திரை மேற்கொள்பவர்கள் காசியில் விஸ்வநாதரை வழிபட்டுப் பிரயாகை என்னும் அலஹாபாத் திரிவேணியில் கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அங்கே கடலாகிய அக்னிதீர்த்தத்தில் மூழ்கிக் கொஞ்சம் மண்ணெடுத்து அதைச் சிவலிங்கமாக பூஜிக்கின்றனர்.

பின்னர் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் பிரயாகைக்குச் சென்று அங்கு கங்கை நீரில் கரைத்து விடுகின்றனர். அக்னிதீர்த்த மணல் லிங்கத்தைக் கங்கையில் விடுவதும், கங்கை நீரால் ராமநாதரை நீராட்டி வழிபடுவதுமே காசி-காமேஸ்வர யாத்திரையின் முதன்மை நிகழ்ச்சிகளாகும்.

காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை, நவக்கிரகங்களால் அமைக்கப்பட்ட பருதி தீர்த்தம். சோம (சந்திர) தீர்த்தம். மங்கள தீர்த்தம் முதலான ஒன்பது தீர்த்தங்களும் முனிவர்களால் அமைக்கப்பட்ட அகத்திய தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், வாம தீர்த்தம் முதலியனவும் சித்தர்களால் அமைக்கப்பட்ட சித்தாமிர்தம், இஷ்டசித்தி தீர்த்தம் முதலியனவும், பார்வதி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட உலகாணி தீர்த்தம், கம்பாநதி, அவள் நீராடியபோது உண்டான மஞ்சளாறு முதலியனவும், சரஸ்வதி, லட்சுமி முதலியோரால் அமைக்கப்பட்ட லட்சுமி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், துர்கா தீர்த்தம், காளி தீர்த்தம் தேவமாதர்களால் அமைக்கப்பட்ட ஐவர் அரம்பையர் தீர்த்தம், பாம்புகளால் அமைக்கப்பட்ட ஐவர் அரம்பையர் தீர்த்தம், பாம்புகளால் அமைக்கப்பட்ட வாசுகி தீர்த்தம், அனந்த தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், மகாகாள தீர்த்தங்களும், ஐராவதத்தால் உண்டாக்கப்பட்ட ஐராவத தீர்த்தம் முதலியனவும் ஆகும். இவற்றின் விளக்கத்தைக் காஞ்சிப் புராணத்தில் காணலாம்.

ஒரு சமயம், உலகிலுள்ள அனைத்து தீர்த்தங்களும் இங்குக் கூடி சிவவழிபாடு செய்தன. அவை ஒன்று கூடித் திரண்ட இடம் `சர்வதீர்த்தம்’ எனும் பெருங்குளமாக விளங்குகிறது.
இதன் கரையில் தீர்த்தங்கள் அமைத்து வழிபட்ட லிங்கம் ‘‘தீர்த்தேஸ்வரர்’’ எனும் பெயரில் தனி ஆலயத்தில் உள்ளது. நளன் வழிபட்டுப் பேறு பெற்ற திருநள்ளாற்றில், பதிமூன்று தீர்த்தங்கள் உள்ளன.

இவற்றில் எட்டு அட்டதிக்குப் பாலகர்களால் உண்டாக்கப்பட்டனவாகும். எஞ்சியவை பிரம்மன், வாணி, அன்னம், நளன், கங்கை ஆகிய ஐவரால் அமைக்கப்பட்டனவாகும்.
இவற்றின் பெருமைகளையும், இவற்றில் மூழ்குவதால் உண்டாகும் பலன்களையும் தலபுராணம் விரிவாகக் கூறுகிறது. வேதாரண்யத்தில் (திருமறைக்காட்டி) 96 தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகின்றது. இவற்றில் கடல் தீர்த்தம், காசிக்கு இணையான மணிகர்ணிகா, வேதாமிர்தம் எனும் ஏரி, விஸ்வாமித்ர தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம் முதலியன முக்கியமானவை. இவற்றில் பெரும்பாலானவை இப்போது காணக் கிடைக்கவில்லை. திருவண்ணாமலையில் 360 தீர்த்தங்கள் இருந்ததாகச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

புராணங்களில் திக்பாலகர்களால் உண்டாக்கப்பட்ட எட்டு தீர்த்தங்களுடன், சக்ர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், திருமுலைப்பால் தீர்த்தம், பவளப்பாறை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம், முதலிய குளங்களும், திருநதி, சோனைநதி, சேயாறு முதலிய ஆறுகளும் தீர்த்தங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றில் மூழ்கி அண்ணாமலையாரை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் அருணாசல புராணத்தில் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன.

திருவிடைமருதூரில் 36 தீர்த்தங்கள் இருந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இவற்றில் முதன்மை பெற்று காவிரியில் படித்துறையாக உள்ள இடம் கல்யாண தீர்த்தமாகும். இங்கு, சுவாமி, தைப்பூசத்தில் தீர்த்தமளிப்பார். இதற்குப் பூசத்துறை, கல்யாண சிந்து என்பன பெயராகும்.தென்னகமெங்கும் உள்ள சிறப்புமிக்கத் திருத்தலங்கள் ஒவ்வொன்றிலும் அனேக தீர்த்தங்கள் உள்ளன. இவைகளின் பெருமையும் சிறப்பும் அளவிட்டு அறிய முடியாததாகும்.

காயத்ரி