குறளின் குரல்-உலகப் பொதுமறை!



உலகப் பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அத்தனை மனிதர்களும் ஏற்கக் கூடிய பொதுவான நீதிகளை வள்ளுவம் சொல்வதால் அதற்கு அந்தப் பெருமை என்கிறோம். அது சொல்லும் நீதிகளில் ஜாதி பேதங்கள் இல்லை. நிறபேதங்கள் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் மக்களிடையே பல்வேறு வகையான உயர்வு தாழ்வுகள் நீதிக்கு முரணாகப் பின்பற்றப் படுகின்றன.
நம் நாட்டில் ஜாதி தொடர்பான உயர்வு தாழ்வு. அதில் நியாயமில்லை என்று சொல்லிவிட்டார் வள்ளுவர். `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்` என்கிறார். வெளிநாடுகளில் நிற பேதம் இருக்கிறது. வெள்ளையர்கள் கருமை நிறத்தைக் கொண்ட நீக்ரோக்களைத்தங்களுக்குச் சமமாக நடத்துவதில்லை.

  `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் அதே மூன்று வார்த்தைகள் வெளிதேசங்களிலுள்ள நிறபேதத்தையும் தாக்கித் தகர்க்கின்றன. அதுபோலவே, பொய் பேசாதிருத்தல், திருடாதிருத்தல் போன்று வள்ளுவம் வலியுறுத்தும் என்றும் நிலைபேறுடைய அறங்களும் எல்லா நாட்டுக்கும் பொதுவானவைதான். எனவேதான், திருக்குறள் உலகப் பொதுமறை எனப்போற்றப்படுகிறது என்றால் அந்த விளக்கம் சரிதான் என்றாலும் அது ஓரளவுதான் சரி.

அந்த விளக்கத்தில் மேலும் இணைக்கவேண்டிய பகுதிகள் உண்டு.  ஒரு நாட்டை, ஒரு பிரதேசத்தை நாம் எவற்றை வைத்து அடையாளப் படுத்துகிறோம்? அங்குள்ள நதியையும், மலையையும் வைத்துத்தான். காவிரி என்றால் தஞ்சாவூரும் திருச்சியும் நினைவுக்கு வருகின்றன. தாமிரபரணி என்றால் உடனேநெஞ்சில் ஓடுவது திருநெல்வேலி நினைவுகள்தான். வைகை என்றால் மதுரை. திருப்பரங்குன்றம், பழனி என்றெல்லாம் சொல்லும்போது அங்குள்ள மலைகள்தான் நம் மனத்தில் மேலெழுந்து உயர்ந்து தோன்றுகின்றன. அப்படியானால், நதியின் பெயரையோ மலையின் பெயரையோ சொல்லி அடையாளப்படுத்திவிட்டால், அந்த இலக்கியம் பிரதேச இலக்கியமாகிவிடும்.

‘மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?’
 என்ற பாரதி வரிகளைப் படித்து நாம்
பெருமிதம் கொள்ளலாம்.

ஏனென்றால், அது நம் பாரத தேசத்தின் பெருமைகளைப் பேசுகிறது. அன்னியர் ஆதிக்கத்தின்போது நாட்டுப்பற்றைத் தூண்ட வேண்டி, பாரதி எழுதிய அற்புதவரிகள் இவை. இமய
மலையும், கங்கை ஆறும் நம் நாட்டைப்பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆனால், வெளி தேசத்தவர்களுக்கு இந்த வரிகளில் அனுபவிக்க ஒன்றுமில்லை.

அவர்களுக்கென்று தனியே வேறு மலைகளும் வேறு நதிகளும் இருக்கின்றன. அவர்கள் பெருமிதம் அவற்றிலிருந்துதான் அவர்களுக்குக் கிட்டும். திருக்குறள் உலகப் பொதுமறை என்கிறபோது, அது எல்லா நாட்டினர்க்கும் பொதுவானது என்கிறபோது, அது நதியையோ மலையையோ பெயர்சொல்லி அடையாளப் படுத்தக் கூடாது. பொதுவாகச் சொன்னால், அந்தந்த நாட்டினர் அவரவர் நாட்டு நதியையும் மலையையும் தங்கள் மனத்தில் கற்பிதம் செய்துகொள்ள முடியும்.

  அதனால்தான் போலும், தாம் எழுதிய திருக்குறளில் மலைபற்றியும் நதிபற்றியும் பேசும் வள்ளுவர், அவற்றின் தனி அடையாளப் பெயர்களைக் குறிப்பிடவே இல்லை. வள்ளுவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரே என்றாலும், தமிழ்நாட்டு ஆறுகளான பொன்னி, வைகை, தாமிரபரணி போன்ற எந்தப் பெயரையும் அவர் சொல்லவில்லை. நீர் என்ற சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

`நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.’
(குறள் எண் 20)  

 உலகில் மழை இல்லையென்றால் மக்களின் ஒழுக்கம் கெடக்கூடும். எனவே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டும்.
`ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
 நீரினும் நன்றதன் காப்பு.’
(குறள் எண் 1038)

உரமிடுதல் உழுவதை விடவும் நல்லது. களைநீக்கிய பின் நீர்பாய்ச்சுதலை விடவும் நல்லது காவல் காத்தல்.
`ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.’
(குறள் எண் 1066)

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று
பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும், அதுவும் பிச்சை தானே? எனவே நம் நாவிற்கு அதைவிட இழிவானது வேறில்லை.
`ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.’
(குறள் எண் 215)

உலகிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய பேரறிவு படைத்த வள்ளலின் செல்வமானது, ஊரார் நீருண்ணும் கிணற்றுநீர்
எல்லோருக்கும் உதவுவதுபோல் உதவக் கூடியது.
`புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.’
(குறள் எண் 298)

 புறத்தூய்மை என்பது நீரால் உடலுக்கு ஏற்படும். ஆனால் அகத் தூய்மையோ வாய்மையால்தான் உண்டாகும். இவ்விதம் பல இடங்களில் நீர் என்ற சொல்லை எடுத்தாள்கிறார் வள்ளுவர். வான்சிறப்பு என மழையின் பெருமையை விளக்கி ஓர் அதிகாரமே எழுதுகிறார் என்றாலும், நீர் என்ற பொதுச்சொல்லைத்தான் பயன்படுத்துகிறாரே அன்றி, எந்த நதியின் நீர் என்பதை எங்கும் அவர் சொல்லவில்லை. அந்தந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் அவரவர் தேசத்து நதிநீரைத் தங்கள் மனத்தில் நினைத்துக்கொள்ள வசதியாக அமைகிறது வள்ளுவரின் இந்தப் போக்கு. அதுபோலவேதான், மலை என்ற சொல்லும். அந்தச் சொல்லையும் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

`நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.’
(குறள் எண் 24)

உறுதியான உள்ளமும் அடக்கவுணர்வும் கொண்டவனுடைய கம்பீரமான தோற்றமானது வானளவு ஓங்கி நிற்கும் மலையை விடவும் பெரியது.
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.’
(குறள் எண் 742)

தெளிந்த நீரும் வெட்ட வெளியான மண்ணும் மலையும் அழகிய நிழல் உடைய வனமும் ஆகிய நான்கும் உள்ளதே அரண்.

‘இருபுனலும் வாய்ந்த மலையும் வரு
புனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.’
(குறள் எண் 737)

ஊற்றும் மழையுமாகிய இரண்டு வகை நீர் வளமும் தக்கபடி அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து வரும் ஆறும் நாட்டிற்கு உறுப்புகளாகும். இவ்விதமெல்லாம் மலை என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவர், எந்த மலை என்று பெயர் கூறாமல் தவிர்ப்பதன் மூலம் நம்மை மலைக்க வைக்கிறார்.

இதைத் தற்செயல் என்று கூற முடியவில்லை. தம் நூல் உலகம் முழுவதற்கும் பொதுவாக அமைய வேண்டும் எனக் கருதி வள்ளுவர் நதிப்பெயரையும் மலைப் பெயரையும் உணர்ந்தே தவிர்க்கிறார் என்று தோன்றுகிறது. வள்ளுவத்தை உலகப் பொதுமறை என நாம் கொண்டாடுவதற்கு நில அடையாளத்தை உணர்த்தாத அதன் போக்கு பெரிதும் உதவுகிறது.... மலையைப் பெயர் சொல்லிப் பல தமிழ்க் கவிஞர்கள் பாடியுள்ளனர்.

‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
  மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
  கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!’

என்ற பாடல் மூலம் குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலத்தில் உள்ள திரிகூட மலையைப் புகழ்கிறார்.
`பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் நெஞ்சின்
துதியறிவாய், அவர்நெஞ்சின்
வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே!’

என்ற பாரதி, தமிழ் பொதிகைமலையில் பிறந்தது என நினைவுகூர்கிறார். ஒரு காலத்தில், மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன என்கிறது ராமாயணம். அந்த இறக்கைகள் மூலம் பறந்து சென்று ஆங்காங்கே சென்று அமர்ந்து அங்குள்ள மக்களையும் வளங்களையும் மலைகள் அழித்து வந்தனவாம். அதனால் சீற்றம்கொண்ட இந்திரன், அந்த மலைகளின் இறக்கைகளையெல்லாம் வெட்டித் தள்ளினானாம். அப்போது மைநாக மலைமட்டும் பறந்து சென்று கடலில் ஒளிந்துகொண்டு தப்பித்ததாம்.

அப்படி அது பறந்து செல்லும்போது, அதன் வேகத்தைக் கூட்டக் காற்று உதவியதாம். அந்தக் காற்றாகிய வாயுபகவானின் புதல்வன்தானே அனுமன்? எனவே தந்தை செய்த உதவிக்கு நன்றி காட்டும் வகையில் மகன் அனுமனைஉபசரிக்க விரும்பியது மைநாகமலை என்ற செய்தி கம்பராமாயண சுந்தர காண்டத்தில் வருகிறது.

அனுமன், கடலைத் தாவிக் கடந்தபோது மைநாக மலை தன் விருப்பத்தைச் சொல்ல, அதன் விருந்தோம்பலைத் தான் ஏற்றதாகவே கருத வேண்டும் என்றும், தன்னால் ராம காரியத்தை ஒருகணமும் தாமதப்படுத்த இயலாது என்றும் அனுமன் சொன்ன செய்தியைராமாயணம் பதிவு செய்துள்ளது.

 ராமாயணத்தில் மைநாகமலை பற்றி மட்டுமல்ல, விந்தியமலை, பொதிகைமலை உள்பட ஏராளமான மலைகளைப் பற்றிய செய்திகள் மலைகளின் பெயர்களோடு இடம்பெற்றுள்ளன. இமய மலையை ராவணன் தூக்க முயன்ற செய்தியும் ராமாயணத்தில் உண்டு.

 `வாரணம் பொருத மார்வும், வரையினை எடுத்த தோளும்
 நாரத முனிவர்க் ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
 தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
 வீரமும் களத்தே போட்டு வெறுங்
கையோடு இலங்கை புக்கான்!’

 என ராவணன் இமயமலையை எடுத்ததைக் கம்பராமாயணம் சொல்கிறது.ராமாயணத்தில் வரும் மலைகளில் முக்கியமானமலை இமயமலையின் ஒரு பகுதியான சஞ்சீவி மலை. இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லட்சுமணன் மயங்கியபோது, லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற வானில் தாவி இமய மலைக்குச் செல்கிறான் அனுமன். அதன் ஒரு பகுதியான சஞ்சீவிமலையில்தான் உயிர்காக்கும் மூலிகைகள் உள்ளன. மூலிகைகளைத் தேட நேரமில்லாததால், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக்கொண்டு இலங்கைக்கு அனுமன் வருவதை விவரிக்கிறார் கம்பர். தன் அண்ணன் வாலிக்கு பயந்து சுக்ரீவன் ரிஷியமுக பர்வதத்தில் ஒளிந்து வாழ்ந்த தகவல் ராமாயணத்தில் கிஷ்கிந்தாகாண்டத்தில் வருகிறது.

அந்த மலைக்கு வந்தால் வாலி இறப்பான் என அவனுக்குச் சாபமிருந்தது. ஆகையால், வாலி வராத மலையில் சுக்ரீவன் வாழ்ந்து வந்தான் என்கிறது ராமாயணம். பாகவதத்தில் வரும் முக்கியமான மலை கோவர்த்தன கிரி. கோவர்த்தன கிரியை ஒற்றை ஆள்காட்டி விரலால் தூக்கி கோபர்களை மலையின் கீழ் வரச் செய்து பெரும் மழையிலிருந்து எல்லோருக்கும் பாதுகாப்பளிக்கிறான் கண்ணன்.

மேருமலை என்றொரு மலை புராணங்களில் பேசப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்டது மேருமலை.
`வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்
வயிறு கலக்கினயே!’

என இச்செய்தியைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. வடவரை என இளங்கோ அடிகள் குறிப்பிடுவது மேரு மலையைத் தான்.  திருக்குறள், எந்த மலையையும் பெயரிட்டுச் சொல்லாதது போலவே, நம் பழைய இலக்கணமான தொல்காப்பியம் எல்லா மலைகளையும் பொதுவாகக் குறிப்பிட்டு இலக்கணம் வகுக் கிறது. எந்த மலையாக இருந்தாலும் `மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி’ என்கிறது தொல்காப்பியம்.

`மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.’
என்பது தொல்காப்பியச் சூத்திரம்.

`மைவரை உலகம்’ என்பது மலை சார்ந்த பகுதியைக் குறிக்கும். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். மலை உள்ள இடத்திலெல்லாம் மலைமீது முருகன் கோயில் இருப்பதைக் காணலாம். தமிழ்த் திரைப்பாடல்களிலும் திருக்குறள் மரபில் பெயர் சுட்டப்படாத மலைகள் இடம்பெற்றுள்ளன.

 `மலைசாய்ந்து போனால் சிலையாகலாம்
  மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
  மலர் சாய்ந்து போனால் சரமாகலாம் - இந்த
  மனம் சாய்ந்து போனால் என்ன
செய்யலாம்?’

 எனக் கேட்கிறார் கவிஞர் ஆலங்குடி சோமு. ஆர்.சுதர்ஸன் இசையமைப்பில், `கார்த்திகை தீபம்’ என்ற திரைப்படத்தில் டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கிறது இந்தப் பாடல்.
இயக்குநர் வசந்த் இயக்கிய `ரிதம்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் வைரமுத்து எழுதிய பாடல், எந்த நதி என்று பெயர் சொல்லாமல் பொதுவாக நதியைப் பெண்ணோடு ஒப்பிடுகிறது.

`நதியே நதியே காதல் நதியே நீயும்
பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே........

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே...’

நதியையும் மலையையும் பெயர் சொல்லாமல் சொல்லி அனைத்துத் தேசங்களுக்கும் திருக்குறளைப் பொதுவாக்கிய தன்மையால்தான் திருக்குறளுக்கு உலகப் பொதுமறை என்ற பெருமை கிடைத்திருக்கிறது. காலங்கடந்தும் திருக்குறள் வாழக் காரணமும் அது உலகப் பொதுமறையாக விளங்குவதுதான்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்